Ad

வெள்ளி, 13 மே, 2022

டெல்லி: நான்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து - 27 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருக்கும் 4 மாடி கொண்ட அலுவலக கட்டடத்தில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும் 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் போலீஸார் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டனர். தீவிபத்தில் சிக்கிக்கொண்ட 60 முதல் 70 பேர் மீட்கப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் சமீர் சர்மா தெரிவித்தார்.

முதல் மாடியில் பற்றிய தீ, மளமளவென அடுத்த மாடிகளுக்கு பரவியது. கட்டடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர். தீ விபத்தில் 40-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீப்பற்றி எரியும் கட்டிடம்

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கட்டடம் முழுவதும் இன்னும் சோதனை செய்யப்படவில்லை. எனவே உயிரிழப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸார் கவலை தெரிவித்தனர். சிசிடிவி கேமரா மற்றும் இன்டர்நெட் ரெளட்டர் தயாரிக்கும் கம்பெனி தீப்பிடித்த கட்டடத்தில் இயங்கி வந்ததாக போலீஸ் அதிகாரி சர்மா தெரிவித்தார்.

கம்பெனி உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கலும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புதுறையினரும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/accident/at-least-27-people-have-been-killed-and-40-others-injured-in-a-fire-that-broke-out-in-a-four-storey-building-in-delhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக