புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் பாரதிராஜா கனடாவில் மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். மனோன்மணியின் ஒரு மகளுக்கு காரைக்குடியில் மார்ச் மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணவிழா காரைக்குடியில் நடந்ததால், முதல் நாளான 5-ம் தேதி இரவே புதுக்கோட்டையில் உள்ள தங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு காரைக்குடிக்குச் சென்றிருக்கிறனர். திருமணம் முடிந்து வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறை மற்றும் பீரோவில் திருமணத்துக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 121 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து பாரதிராஜா கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவுசெய்த நகர போலீஸார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணையும் நடத்திவந்தனர். `மகளுக்குத் திருமணம் எனில், நகைகளை ஏன் இங்கு வைத்துவிட்டுச் சென்றீர்கள்?’ என்ற கேள்வியை போலீஸார் எழுப்பினர்.
அப்போது அந்தக் குடும்பத்தினர், ``நகைகளை அதிகமாகப் போட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, எதிர்பாராவிதமாக களவு போவதற்கு வாய்ப்பிருக்கு. அப்படி ஆகக் கூடாதுன்னுதான் கவரிங் நகைகளைப் போட்டுக்கிட்டு, வீட்டிலேயே பத்திரமாகத் தங்க நகைகளை வெச்சுட்டுப் போனோம்” என்று சொல்லியிருக்கிறார்கள். போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக, தொடர் விசாரணை நடத்திவந்தனர். தொடர் விசாரணையின் பலனாக திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூன்று பேர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருமண வீட்டில் திருட்டில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த சிவராஜன், தங்கபாண்டி, திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் ஏ ஸ்டீபன் மூன்று பேரையும் நகர போலீஸர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 60 பவுன் மதிப்பிலான தங்கக்கட்டிகளையும், நகை மதிப்பீடு மெஷின், கார், டூ வீலர்களை மீட்டிருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ``சிவராஜன், சதீஷ் இருவரும் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வீடு எடுத்துத் தங்கி ஆங்காங்கே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். தங்கபாண்டி என்பவர் இந்த இரண்டு பேருக்கும் நண்பர். சிறையில் இருக்கும்போதுதான் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மூன்று பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைதான மூன்று பேரும் சம்பவத்தன்று திருமணத்துக்காக குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றதை நோட்டமிட்டு நகைகளைக் கொள்ளையடித்திருக்கின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றால் துப்பு கிடைத்தது.
கைதான மூன்று பேரும் நகைகளைக் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர். சில பவுன் நகைகளை அடகுவைத்தும் பணம் பெற்றுள்ளனர். அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/121-sovereign-gold-stolen-at-wedding-home-3-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக