நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மக்களவையில் பேசிய வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், ``நாட்டில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் வேலூர் மாநகரும் ஒன்று. இங்கு உள்கட்டமைப்பு மற்றும் குடிமைத் தேவைகள், மின்சாரம், குடிநீர், திடக்கழிவு அகற்றுவது உள்ளிட்ட பொது பிரச்னைகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். பல நினைவுச் சின்னங்களையும், புராதனக் கோயில்களையும் கொண்ட வரலாற்றுப் புகழ்பெற்ற வேலூர் நகரை உலக சுற்றுலாத் தலமாகவும் மேம்படுத்த வேண்டும். தெற்கிலிருக்கும் ஆந்திர மாநிலத்தையும், தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக ஆம்பூர், வாணியம்பாடி, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு தொடங்கி, திருவண்ணாமலை எல்லை வரையிலான பகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை அனைத்தும் வேலூரை ஒட்டியப் பகுதிகளாகும். இங்கெல்லாம், பிரத்யேக வணிக மையங்கள், குடிமை உள்கட்டமைப்பு, சாலை, ரயில் இணைப்பு, பயிற்சி மையங்கள், தோல் பதனிடும் அலகுகளுக்கான கழிவுநீர், திடக்கழிவு அகற்ற வேண்டியுள்ளது.
அதோடு, நிலத்தடி நீர் மாசுப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. தொழிலாளர்களுக்கு சுகாதாரம், பிரத்யேகக் குணப்படுத்தும் மையங்களும் உருவாக்கப்பட வேண்டும். இவற்றுக்கான மொத்த திட்டச் செலவு ரூ.4,500 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, வேலூர் மாநகரத் திட்டப் பணிகளை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு, இந்த நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக முதலுதவி, மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மத்திய அரசாங்கம் செய்திட வேண்டும்’’ என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vellore-needs-rs-4500-crore-for-development-dmk-mp-kathir-anand
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக