Ad

வெள்ளி, 25 மார்ச், 2022

தொடர்ந்து குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்... 10 மாத திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எப்படி?

எதிர்க்கட்சி குற்றச்சாட்டு:

``தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டு சட்டம் ஒழுங்கு பேணிக்காகப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாகத் திகழ்ந்தது. அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு எடுத்த நடவடிக்கை காரணமாகக் குற்றங்கள் வெகுவாக குறைந்தன. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. அரசின் இயலாமையை அறிந்த தமிழக கவர்னர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யை அழைத்து அறிவுரை வழங்கியதற்குப் பின்னரே சுமார் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது" என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

ஆளுநரிம் மனு அளித்த அதிமுக சட்ட் ஆலோசனைக்குழு

அ.தி.மு.க சட்ட ஆலோசனை குழுவினர் சார்பில் தமிழக கவர்னர் ரவியை நேரில் சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக ஆதாரங்களோடு ஒரு மனுவை வழங்கினார். அந்த மனுவில், தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த 200 நாள்களில் 557 கொலைகள் நடந்துள்ளது. மேலும் பல்வேறு குற்றங்கள் குறித்த விவரங்களைப் பட்டியலிட்டு ஆளுநரிடம் மனுவாக வழங்கியிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. தற்போது சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். குற்றங்களைத் தடுத்து நிறுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் பேச்சு:

இந்த நிலையில், சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நான் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டேன். சட்டம்- ஒழுங்கு சரியாக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள் என்று எதையும் இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

காவல்துறை மாநாடு

மேலும், ``அடிதடி, மோசடி, கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு என்று மக்களைப் பாதிக்கும் தவறுகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களின் மீது எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது" என்று பேசியிருந்தார். மேலும் இந்த மாநாட்டில், ``தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கிறது. காவல்துறை குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று கறாராக உத்தரவிட்டார் என்று கூறப்பட்டது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர், கோவை சத்யனிடம் பேசினோம்.``தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து குற்றங்கள் அளவில்லாமல் அதிகரித்துள்ளது. இந்த 10 மாத ஆட்சியில் மட்டும் 600-க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளன. 15 முதல் 20 வயதில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை சென்னையில் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. அனைத்து வகையான போதைப் பொருள்களின் புழக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கோவை சத்யன்

விருதுநகர், வேலூர் என்று நாளுக்கு நாள் தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு குற்றங்களும் அதிகரிக்கிறது. தற்போது மீண்டும் நில அபகரிப்பு குற்றங்களும் தொடங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே வாழ்ந்துவருகிறார்கள். இதே நிலை நீடித்தால் திமுக அரசு ஒரு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும்போது நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டக்கூடும். குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு பெரும் தோல்வி அடைந்துள்ளது" என்று பேசினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகனிடம் பேசினோம். ``கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக சீரழித்து வைத்துவிட்டார்கள். கட்டப்பஞ்சாயத்து முதல் ரெளடிகள் தொல்லை தமிழகம் எங்கும் அதிகரித்துக் காணப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பு வந்த முதல் நான்கு மாத காலம் கொரோனா பேரிடரில் சென்றுவிட்டது. நிலைமை சரியானதும் முதல்வர் முதலில் சட்டம் ஒழுங்கை தான் சரி செய்யத் தொடங்கினார். சட்டம் ஒழுங்கு விவகாரத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்திலும் முதல்வர் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே." என்றார்.

சபாபதி மோகன்

மேலும், ``தமிழகத்தில் எந்த ஜாதிய வன்முறைகளும், மதம் சார்ந்த பிரச்னையும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விருதுநகர் விவகாரத்தில் கூட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரப்படும் என்று முதல்வர் சட்டசபையில் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் முற்றிலுமாக சரிசெய்யும் முயற்சியைத் தமிழகக் காவல்துறை செய்துவருகிறது. தமிழகம் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்த ஒரு சிறு பிரச்னையும் இல்லாது தொழில் செய்யும் சூழலைத் தமிழக அரசு உருவாக்கித் தரும்" என்று விளக்கம் அளித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/how-about-law-and-order-issues-in-dmks-10-months-rule

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக