“யோவ்... கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசி!” - உத்தரவிட்ட உயரதிகாரி...
மேற்கு மாவட்ட மூவர் கூட்டணியில் நம்பர் டூ அதிகாரி தூக்கியடிக்கப்பட்டதில் மாவட்டத்தின் சக காக்கிகளே உற்சாகத்தில் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக அந்த ஏரியாவின் பெரிய அதிகாரி, மாவட்ட அதிகாரி, இன்ஸ்பெக்டர் இவர்கள் மூவரின் வசூல் வேட்டையைக் கண்டு ஆளுங்கட்சியினரே மிரண்டுபோயிருந்தார்கள். தவிர, அந்த இன்ஸ்பெக்டர் சீனியாரிட்டியை மீறி முக்கியமான இடத்தில் அமரவைக்கப்பட்டதிலும் சக காக்கிகள் அதிருப்தியில் இருந்தார்கள். இந்த நிலையில்தான், பெரிய அதிகாரிக்குச் சகலமுமாக இருந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, அந்த இன்ஸ்பெக்டர் “ஐயா, அவர் பார்த்த வேலை எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்... பொறுப்பை என்கிட்ட கொடுத்துடுங்க” என்று மேலதிகாரியிடம் தூதுவிட, “யோவ்... ஏகப்பட்ட புகார் நம்ம மேல போயிருக்கு. கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசி...” என்று உத்தரவு வந்திருக்கிறதாம்!
கடலை மிட்டாய் ஊரில் கள் விற்பனை! - தனிப்படை விசாரணையில் அம்பலமான டீல்...
தூத்துக்குடி மாவட்டத்தின் ‘கடலை மிட்டாய்’ ஊர் உட்கோட்டத்தில் கள் விற்பனை கனஜோராக நடந்ததை அடுத்து, விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் ஒரே நாளில் நான்கைந்து கள் விற்பனை கும்பல்களைத் தனிப்படையினர் பிடித்தனர். அப்போது கள் விற்பனையாளர்களோ, “சார், மாசம் பத்தாயிரம் ரூபாயும், ஒரு கேஸும் கொடுக்குறோம்னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்துட்டுதானே தொழில் செய்யுறோம். அப்புறமும் எங்களைப் பிடிக்குறது நியாயமா?” என்று கேட்டிருக்கிறார்கள். இதையடுத்து, தனிப்படையினர் நடத்திய விசாரணையில், அந்த ஏரியாவில் பனைமரம் அதிகமுள்ள காவல் நிலையத்தினர் இவர்களிடம் டீல் போட்டுள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. விரைவில் நடவடிக்கை பாயும் என்கிறார்கள் காக்கிகள்!
“ஐ.ஜி எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்!” - சவடால்விடும் வசூல் அதிகாரி...
அரியலூர் மாவட்டத்தில் ‘வெற்றிபெற்ற’ ஏரியா அதிகாரியின் வசூல் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று பல்வேறு தரப்பினரும் புலம்புகிறார்கள். அவரது எல்லைக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளை நேரடியாக விசாரிக்கிறேன் என்று சொல்பவர், இரு தரப்பினரிடமும் கட்டப்பஞ்சாயத்து செய்து, லட்சங்களைக் கறந்துவிடுகிறாராம். இப்படித்தான் சமீபத்தில் கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் பெரும் தொகையை வசூலித்தவர், அவர்மீது புகார் கொடுத்தவரை கடுமையாக மிரட்டியிருக்கிறார். இதையடுத்து, அந்தப் புகார்தாரர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். அப்படியிருந்தும் அதிகாரி மீது நடவடிக்கை இல்லை. கேட்டால், “ஐ.ஜி எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட். என்னை அசைக்க முடியாது!” என்று சவடால்விடுகிறாராம் அதிகாரி!
டிரான்ஸ்ஃபர்... டிரான்ஸ்ஃபர்... டிரான்ஸ்ஃபர்... - மாவட்டத்தை ரவுண்ட் அடித்த எஸ்.ஐ!
விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடி காவல் நிலையத்தின் எஸ்.ஐ அவர். மணல் கொள்ளை, சட்டவிரோத லாட்டரி, ரெளடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட விஷயங்களில் கரைதேர்ந்த இந்த எஸ்.ஐ மீது புகார் வராத நாளே இல்லை என்கிறார்கள் சக காக்கிகள். பல ஆண்டுகளாக இவர் இதே வேலையைச் செய்ய... ஒவ்வொரு முறையும் குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் இவரை ஒவ்வொரு காவல் நிலையமாகத் தூக்கியடித்திருக்கிறார்கள். இப்படியே கடந்த ஓரிரு ஆண்டுகளில் அந்த மாவட்டத்தின் பெரும்பாலான காவல் நிலையங்களுக்கும் அந்த எஸ்.ஐ ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார். தற்போது கடைக்கோடி காவல் நிலையத்திலும் மணல் கொள்ளை வசூல் விவகாரத்தில் இவரது பெயர் கடுமையாக டேமேஜ் ஆக... “சார்... எத்தனை முறைதான் அவரை டிரான்ஸ்ஃபர் செய்வீங்க... சஸ்பெண்ட் பண்ணிடுங்க” என்று காக்கிகள் சிலர் பரிந்துரைத்தனர். அதற்கு, “சஸ்பெண்ட் செய்யறதா இருந்தா, முதல்லயே செஞ்சுருக்க மாட்டோமா... பங்கெல்லாம் சரியா கொடுத்துடுறார். ஆனா, அடக்கி வாசிங்கனு சொன்னா மட்டும் கேட்க மாட்டேங்குறாரு” என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள் தரப்பில்!
கமிஷன் சீஸன்... - கொண்டாடும் ஊத்தங்கரை காக்கிகள்!
பங்குனி மாதம் என்பதால், பல்வேறு கிராமங்களிலும் திருவிழா சீஸன் களைகட்டிவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காக்கிகள் இதை ‘கமிஷன் சீஸன்’ என்று சொல்லி கொண்டாடுகிறார்கள். கிராமத் திருவிழாக்களில் பெரும்பாலும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் நடனமாடுவதை அனுமதிக்க நிகழ்ச்சிக்கு ஏற்ப ஊத்தங்கரை காக்கிகள் பத்தாயிரம் ரூபாய் வரை வசூலித்துவிடுகிறார்கள். இதையடுத்து, கோயில் திருவிழா கமிட்டியினர், தங்களது விழா பட்ஜெட்டில் காவல்துறைக்கு என்றே தனியாக ஒரு பட்ஜெட்டை ஒதுக்கிவிடுகிறார்களாம். சமீபத்தில், ஒரு கிராமத்தில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு இப்படிப் பணம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்த காக்கிகள், மஃப்டியில் முதல் வரிசையில் உட்கார்ந்து முழு நிகழ்ச்சியையும் ரசித்துவிட்டே சென்றிருக்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/general-news/junior-walkie-talkie-police-atrocities-56
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக