Ad

வியாழன், 17 மார்ச், 2022

`ராஜபக்சே பதவி விலக வேண்டும்' - நிதி நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் வெடிக்குமா மக்கள் புரட்சி?

கடந்த மார்ச் 15-ம் தேதி அன்று, இலங்கைத் தலைநகர் கொழும்பிலுள்ள அதிபர் மாளிகை முன்பாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இலங்கையின் பல்வேறு இடங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் `கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்' என்பதை முன்னிறுத்திப் போராடிவருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிதான் இந்தப் போராட்டத்துக்கான காரணம். இந்த பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை போராட்டக்காரர்கள் மத்தியில் வலுத்துவருகிறது. எதிர்க்கட்சியினர் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் மக்களும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

பொருளாதார நெருக்கடிக்கு காரணம்?

2019 டிசம்பரில் இலங்கையிலுள்ள தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில், சுமார் 270 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இலங்கையை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இதனால், இலங்கை அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை சரிவைச் சந்தித்தது. தொடர்ந்து வந்த கொரோனா பெருந்தொற்றால் சுற்றுலாத்துறை முழுவதுமாக முடங்க, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது இலங்கை. கூடவே, மற்ற நாடுகளிடம் பெற்ற அதீத கடன் சுமையும் சேர்ந்துகொள்ள இலங்கையின் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்தது. குறிப்பாக, சீனாவிடம் இலங்கை பெற்ற அதீத கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல், திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது அந்த நாடு.

அதிகரித்த விலைவாசி!

இலங்கையில், பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, வருவாய் இழப்புகளால் பணவீக்கம் அதிகரிக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு காலாவதியானதால், கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியாத நிலையிலிருக்கிறது இலங்கை. இதனால் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இதன் எதிரொலியாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருப்பதால், அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பேருந்துகளிலும் கட்டண உயர்வு ஏற்படும் சூழல் உண்டாகியிருக்கிறது.

இலங்கை - பொருளாதார நெருக்கடி

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு கிலோ அரிசியின் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் 448 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ. 263 (இலங்கை ரூபாய்) ஆக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாளொன்றுக்கு ஏழரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மின்வெட்டு காரணமாக பல்வேறு சிறுதொழில் நிறுவனங்களும் அவதிப்பட்டுவருகின்றன.

இலங்கையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால், முன்னணி கியாஸ் நிறுவனங்களான லிட்ரோ கியாஸ், லாக்ஃப்ஸ் (Laugfs) கியாஸ் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, இலங்கையிலுள்ள 90 சதவிகித உணவகங்கள் மூடப்பட்டுவிட்டதாகச் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்தியாவுக்கு வந்த நிதியமைச்சர்!

மார்ச் 16-ம் தேதி அன்று இந்தியாவுக்கு வந்த இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா, இலங்கைக்கு ரூ. 3,750 கோடியைக் கடனுதவியாக அளித்தது. இதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே பசில் ராஜபக்சே இந்தியா வந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, வரும் 30-ந்தேதி இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டிலும் பிரமர் மோடியைப் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார் பசில். இந்த நிலையில் நேற்று (மார்ச் 17) இந்தியா, இலங்கைக்கு 7,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டிருக்கிறது.

பசில் ராஜபக்சே, மோடி

வெடித்த போராட்டம்!

இதற்கிடையில் மார்ச் 15-ம் தேதி அன்று, பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அதிபர் மாளிகைக்கு வெளியே மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இந்தப் போராடத்தை முன்னெடுத்தனர். 10,000-த்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், கோத்தபய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதிபர் கோத்தபய ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோரின் படங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா...

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சியினர் போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்திவருகின்றனர். ஒரு சில இடங்களில் எதிர்க்கட்சியினரோடு இணைந்து மக்களும் அரசுக்கு எதிராகப் போராடி வருவதாகச் சொல்லப்படுகிறது.

இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம்

``எதிர்க்கட்சியினர் தொடங்கியிருக்கும் அரசுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள், மக்கள் மத்தியில் பரவி புரட்சி வெடித்தால், கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு ஆட்டம் காணும் என்பதில் சந்தேகமில்லை. பொருளாதாரச் சிக்கல்கள் மேலும் அதிகரித்தால், இலங்கையில் மக்கள் புரட்சி வெடிப்பது நிச்சயம்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/story-about-protest-against-srilanka-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக