Ad

ஞாயிறு, 20 மார்ச், 2022

`ஆட்டம் இன்னும் முடியவில்லை' - குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன?!

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிவடைகிறது. இந்த நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, ``நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. ஆட்டம் இன்னும் முடியவில்லை'' என்று கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளர், வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை இங்கே அலசலாம்!

மம்தா பானர்ஜி

குடியரசுத் தலைவர் தேர்தல்!

எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் வாக்குகள் மூலமே இந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 543 நாடாளுமன்ற எம்.பி-க்கள், 233 ராஜ்ய சபா எம்.பி-க்கள், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து வாக்கு செலுத்திதான் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களின் எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கு ஒரு மதிப்பு வழங்கப்படும். அந்த மதிப்புகளின் கூட்டுத் தொகையைக் கொண்டே குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அந்த வகையில், ஐந்து மாநிலத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு மதிப்பு 49.9 சதவிகிதமாக இருந்தது. அதுவே ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு மதிப்பு 48.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் வெற்றிபெற, 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். ஆனால், பா.ஜ.க கூட்டணியின் வாக்கு மதிப்பு 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருப்பதால், தாங்கள் நினைத்தவரைக் குடியரசுத் தலைவராக்குவதில் அந்தக் கட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

உ.பி தேர்தலால் ஏற்பட்ட சறுக்கல்!

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு மதிப்பில், இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியப் பங்குண்டு. கடந்த உ.பி சட்டமன்றத் தேர்தலில் 312 இடங்களைக் கைப்பற்றியிருந்த பா.ஜ.க, இந்தத் தேர்தலில் 255 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. உ.பி-யில் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் 273 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள். எதிர்க்கட்சியான சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியிருப்பது பா.ஜ.க-வுக்கு சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற சில மாநிலங்களிலும் கடந்த தேர்தலைவிட பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் வாக்கு மதிப்பு பலம் 65.5 சதவிகிதமாக இருந்தது. அந்த சமயத்தில், பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலி தளம், சிவசேனா ஆகிய கட்சிகளும் தற்போது பா.ஜ.க-வுக்கு எதிராக நிற்கிறார்கள். மேலும், பா.ஜ.க-வோடு கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சிகளின் பலம் சுமார் 52 சதவிகிதமாக உயர்ந்திருப்பதும் பா.ஜ.க-வுக்கு கவலை தரக்கூடிய விஷயம்.

நரேந்திர மோடி - அமித் ஷா

பா.ஜ.க வெல்ல வழி என்ன?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு மாநிலக் கட்சிகள் கைகொடுக்க வேண்டும். மேற்குவங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி செய்பவர்கள் தீவிர பா.ஜ.க எதிர்ப்பைக் கையிலெடுத்திருப்பதால் அவர்களின் ஆதரவு பா.ஜ.க-வின் வேட்பாளருக்கு நிச்சயம் கிடைக்காது. எனவே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு அவசியம். ஆனால், இதில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் சமீபகாலமாகத் தீவிரமாக பா.ஜ.க-வை எதிர்த்துவருகிறார்.

``50.1 சதவிகித வாக்குகள் பெற்றால் மட்டுமே பா.ஜ.க முன்னிறுத்தும் வேட்பாளர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே, மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான வேலைகளை பா.ஜ.க கூடிய விரைவில் தொடங்கிவிடும்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

குடியரசுத் தலைவர் ரேஸில் இருப்பவர்கள் யார்.. யார்?

பா.ஜ.க சார்பில், தற்போது துணை குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கய்யா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால், மீண்டும் ராம்நாத் கோவிந்துக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

வெங்கைய நாயுடு

எதிர்க்கட்சிகள் சார்பில்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் சரத் பவாரைச் சந்திப்பது, அவரை எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பதற்குத்தான் எனச் சொல்லப்படுகிறது.

சரத் பவார்

தேசிய அரசியலை உற்று நோக்கும் சிலர், ``குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்றன. அதற்குள்ளாக சில மாநிலக் கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க பெற்றால் மட்டுமே, தங்களது வேட்பாளரைக் குடியரசுத் தலைவராக்க முடியும். இல்லையென்றால், எதிர்க்கட்சிகள் நிறுத்தியவரே குடியரசுத் தலைவராகச் செயல்படுவார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்றவர் குடியரசுத் தலைவராக வந்துவிட்டால், அது பா.ஜ.க-வுக்கு தலைவலியாகவே அமையும். அதுமட்டுமல்லாமல், தாங்கள் நினைக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதிலும் பா.ஜ.க-வுக்கு சிக்கல் ஏற்படும்'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-2022-presidential-election-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக