லண்டனின் தேம்ஸ் நதி 1858-ம் ஆண்டில், இன்றைய சென்னையின் கூவம் நதியைவிடக் கடுமையாக மாசுபட்டிருந்தது. `பெரிய துர்நாற்றம்' (Great Stink) என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வால் பிரிட்டிஷ் பாராளுமன்ற அமர்வையே ரத்து செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 1957-ம் ஆண்டில் தேம்ஸ் நதி உயிரியல்ரீதியாக ‘இறந்த நதி’யாக அறிவிக்கப்பட்டது. இதை அவமானமாகக் கருதிய அரசு, நதியை மீட்கும் முயற்சியில் இறங்கியது.
ஒரு நதியில் நீர்வாழ் உயிரினங்களின் மீள்வருகையே, உயிரியல்ரீதியாக இறந்த நதி மீண்டும் உயிர் பெறுவதற்கு ஆதாரம். இன்று 346 கி.மீ நீளத்துக்கு ஓடும் தேம்ஸ் நதி, உலகின் தூய்மையான நகர்ப்புற நதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 125 வகையான மீன்கள், 400-க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்கள், நீர்ப் பறவைகள், கடல்நாய்கள், டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் அதில் வாழ்கின்றன. சிறந்த நதி மறுசீரமைப்புச் சாதனைக்கான உலகின் முதன்மை விருதான சர்வதேச தீயஸ் நதிப் பரிசை தேம்ஸ் நதி 2010-ம் ஆண்டில் வென்றது.
தேம்ஸ் நதியுடன் ஒப்பிடும்போது, சென்னை நகரின் மூன்று முக்கிய நீர்வழிகளும் சிறியவை. 72 கி.மீ நீளமுள்ள கூவம் ஆறு சென்னை நகர எல்லையில் 18 கி.மீ தூரமே ஓடுகிறது. 42.5 கி.மீ நீளமுள்ள அடையாறு ஆறு, நகர எல்லையில் 15 கி.மீ தூரமே செல்கிறது. பக்கிங்ஹாம் கால்வாய் தமிழ்நாட்டில் 163 கி.மீ நீளம் செல்கிறது. சென்னை நகர எல்லையில் 31 கி.மீ தூரத்துக்கு இருக்கிறது. நகருக்குள் இந்த நீர்நிலைகள் கடுமையாக மாசடைந்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழமுடியாத, நாற்றமெடுக்கும் சாக்கடைகளாக மாறியுள்ளன.
தமிழ்நாட்டில் 1967-ல் தி.மு.க முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, ரூ.2.2 கோடி செலவில் கூவம் நதியைத் தூய்மையாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 55 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அமைந்த அரசுகள் நல்லெண்ணத்துடன் இதற்காக சில ஆயிரம் கோடிகளைச் செலவு செய்தும், சென்னையின் நதிகள் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்கே போயின. நதிகளை மீட்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்க 2006-ல் உருவாக்கப்பட்ட சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (Chennai Rivers Restoration Trust or CRRT) எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்றைய தேதியில், ரூ.2,484 கோடி மதிப்பிலான நதி மறுசீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன (கூவம்: ரூ.647 கோடி, அடையாறு: ரூ.555 கோடி, பக்கிங்ஹாம் கால்வாய் ரூ.1,282 கோடி).
‘ஒரே விஷயத்தையே ஒரே மாதிரி திரும்பத் திரும்பச் செய்துவிட்டு, வேறுவிதமான முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மடமை' என்று சொல்வார்கள். சென்னை தன் கடந்த காலத் தவறுகளிலிருந்தும், தேம்ஸ் நதி மற்றும் பிற நதிகளின் மறுசீரமைப்பு நடைமுறைகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நதிகளை மாசுபடுத்தும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிப்பதிலேயே சென்னை கவனம் செலுத்திவருகிறது. மைய நகரப் பகுதியில் போதிய கொள்ளளவு இல்லாத, பழைய, சிதைந்த கழிவுநீர்க் குழாய்கள்... விரிவாக்கப் பகுதிகள் சிலவற்றில் முறையாகக் கழிவுநீர்க் குழாய்கள் இல்லாதது... இப்படி நிறைய சிக்கல்களைச் சென்னை எதிர்கொள்கிறது. பல வீடுகளின் கழிவுநீரை மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக வெளியேற்றுவதால் அது இறுதியில் ஆறுகளில் கலந்துவிடுகிறது. செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அந்தக் கழிவுகளை சிறிதளவு கட்டணம் செலுத்திக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒப்படைக்கலாம். அவர்களோ சட்டவிரோதமாக அவற்றை நதிகளில் கொட்டுகின்றனர். இதையெல்லாம் முறைப்படுத்த சரியான நடைமுறை இல்லை.
சென்னை நகருக்குள் வருவதற்கு முன்பே இந்த நதிகளில் விவசாயக் கழிவுகளும் கலக்கின்றன. மழைக்காலங்களில் குப்பைகள், கழிவுகள், எண்ணெய் என்று ஏராளமான அசுத்தங்கள் மழைநீரில் கலந்துவந்து நதியில் சேர்கின்றன. நதிகளை மாசுபடுத்துவதில் இதற்கு 40 சதவிகிதப் பங்கு உள்ளது. இதைத் தடுக்க சென்னை இதுவரை பெரிதாக எதையும் செய்ததில்லை. பசுமைக் கூரைகள், பசுமைச் சுவர்கள், பசுமை அகழிகள், மழைத் தோட்டங்கள், மரங்கள், பூங்காக்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். இவை மழைநீரை சேமிக்கும்; வடிகட்டும்; மழைநீரில் கழிவுகள் கலந்து நதிகளில் வந்து விழுவதைத் தடுக்கும்.
கூவம் மற்றும் அடையாறு நதிகளில் ஊரகப்பகுதிகளில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கலந்து மாசுபடுத்துகின்றன. அங்கிருந்து ஆரம்பித்து முழுமையாக மறுசீரமைப்பு செய்வதே சரியான அணுகுமுறை. நகர்ப்புறத்தில் மட்டுமே மாசடைந்த நதியை மீட்டெடுப்பது பயனற்றது.
நதிகளைப் பாதுகாக்க முக்கியமாகச் செய்ய வேண்டியது, அடர்த்தியான தாவரங்கள் நிறைந்த ஆற்றங்கரைப் பகுதியை உருவாக்குவதுதான். இயற்கையான அல்லது உருவாக்கப்பட்ட ஈரநிலங்களைக் கொண்டதாக இது இருக்க வேண்டும். ஈர நிலங்களே இயற்கையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களாகச் செயல்படுகின்றன. கழிவுகள், உலோகங்கள் மற்றும் பிற நச்சுகள் உள்ளிட்ட மாசுக்களை உயிரியக்க முறை வாயிலாக இவை தூய்மைப்படுத்துகின்றன. எனவே, ஆற்றுப் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்களிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது அவசியம். ‘நதியோர இடையகம்’ எனப்படும் இது, போதுமான அகலத்துடன் இருக்க வேண்டும். இதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய, தனியாருக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்துவது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அர்த்தமுள்ளது என ஆய்வுகள் காட்டுகின்றன. CRRT மேற்கொண்ட நதியோர இடையகம் உருவாக்கும் திட்டம் போதுமானதாக இல்லை.
சுற்றுச்சூழல் உறவுகள் சிக்கலான தன்மை கொண்டவை. பெரிய அணைகள், சிறிய தடுப்பணைகள், வலுவூட்டப்பட்ட ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ளத்தடுப்புச் சுவர்கள் போன்ற செயற்கைத் தடைகள் தாவர விதைகளின் பரவலைத் தடுக்கின்றன. பல வகையான நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச்சுழற்சியையும் சீர்குலைக்கின்றன. குறிப்பாக, முட்டையிடுவதற்காக நீரோட்டத்துக்கு எதிராக இடம்பெயர்கின்ற மற்றும் வெள்ளப்பெருக்கு சமவெளிகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகின்ற பலவகை நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச்சுழற்சி சீர்குலைகிறது. ஆற்றங்கரைத் தாவரங்களும் நீர்வாழ் உயிரிகளுக்கு வாழ்வாதாரம் வழங்குகின்றன. அவை இல்லாமல்போவது, நதியின் உயிர்ச்சூழலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஓர் ஆற்றின் மேற்பரப்பு நீருக்கும் நிலத்தடி நீருக்கும் இடைப்பட்ட மண்டலம், ஆற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதுவே தண்ணீரை வடிகட்டக்கூடிய நுண்ணுயிரிகள் மற்றும் பிற தனித்துவமான விலங்கினங்களைக் காக்கிறது. அவற்றின் முட்டைகளுக்கு அடை காப்பகமாகச் செயல்படுகிறது. அறிவியல்சாரா முறையில் தூர்வாருவதும், மணல் மற்றும் சரளை மண்ணை அள்ளுவதும் இந்த முக்கியமான மண்டலத்தையும் அதனுடன் சேர்ந்து நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாத வரை, என்னதான் நீரின் தரம் மேம்பட்டாலும் சென்னையின் ஆறுகளில் செழிப்பான நீர்வாழ் உயிரினங்களை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமாகாது.
அணைகள், தடுப்பணைகள், செயற்கையான ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ளத் தடுப்புச்சுவர்கள் போன்ற எந்தவித செயற்கையான தடைகளும் இல்லாமல் சுதந்திரமாக நதி ஓட வேண்டும். அதன் கரைப்பகுதியில் பசுமை மற்றும் ஈரநிலங்கள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால், நதி இயல்பாகவே தன்னை சுத்தம் செய்துகொள்ளும்.
இதை வேறுவிதமாகச் சொல்வதென்றால், நதிகளை உயிர்ப் பிப்பது என்பது தொழில் நுட்பத்தை மையப்படுத்தியதாக இல்லாமல் சுற்றுச்சூழலை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். ஆனால், சென்னை நதிநீர் மறுசீரமைப்பு இப்போதும் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய மனநிலையில்தான் தேங்கியிருக்கிறது. மேலும் பல தடுப்பணைகள், வெள்ளத்தடுப்புச் சுவர்கள், மாற்றுக் கால்வாய்கள் கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
சமூக நெருக்கடிகள் இருப்பதால், நாம் சுற்றுச்சூழலை மையப்படுத்திய அணுகுமுறையை எல்லா இடங்களிலும் சாத்தியப்படுத்த முடியாது. அதற்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தடுப்பணைகளை அகற்றி விவசாயிகளின் பாசன உரிமைகளைப் பறிப்பது நியாயமற்றதாகத் தோன்றலாம். அதைச் செய்யாவிட்டால், இந்த நதிகள் மாசுபட்ட நீரினைச் சென்னைக்குச் சுமந்துவருவதை நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
சென்னையின் நதிகளை வெற்றிகரமாக மீட்க, சில நிர்வாக நடவடிக்கைகள் அவசியம். முதலில், நதிகளின் ஆரோக்கியம் குறித்த மதிப்பீட்டை CRRT அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். நதியின் பாதை முழுக்க குறிப்பிட்ட இடங்களில் நீரின் தரம், உயிரினங்களின் ஆரோக்கியம், நீரோட்டத்தின் தரம், நதிக்கு அடுத்துள்ள சமதளப்பரப்பின் வளமை போன்ற பல்வேறு அளவீடுகளை வைத்து இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்தால்தான் ஆற்றின் மிகவும் சீரழிந்த பகுதிகள் எவை, அதற்கான காரணங்கள் என்னென்ன, நதியின் ஆரோக்கியம் மேம்படுகிறதா அல்லது மோசமடைகிறதா என்றெல்லாம் கண்டறிய முடியும். கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று நீர்வழிச்சாலைகளின் ஆரோக்கியம் குறித்த ஆண்டறிக்கை ஒன்றை CRRT வெளியிட்டு, மறுசீரமைப்புப் பணியின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்.
இரண்டாவது விஷயம், நதிகளை மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமான திட்டமாகும். இதைச் சிறப்பாகச் செய்ய, மிகச் சிறந்த அதிகாரிகளை CRRT-யில் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்குப் போதுமான பதவிக்காலத்தையும் (5 ஆண்டுகள்) முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.
மூன்றாவதாக, நதிகளைக் காப்பது சமூகக்கடமை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். நதிகளுக்கும் மக்களுக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட வேண்டும். நதிக்கரையில் நடைபாதை, சைக்கிள் ஓடுபாதை போன்றவற்றை உருவாக்கி, மக்களுக்கும் நதிகளுக்கும் நெருக்கம் ஏற்படுத்த வேண்டும்.
நதி மறுசீரமைப்புக்கு நீடித்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதி மற்றும் நல்ல நிர்வாகம் ஆகியவை தேவைப்படும் ஒரு நீண்ட காலச் செயல்முறை. உடனடித் தீர்வுகள் இதில் சாத்தியமில்லை. சிங்கப்பூரிலுள்ள சிங்கப்பூர் நதியையும் (வெறும் 3.2 கி.மீ நீளம்) கல்லாங் நதியையும் (10 கி.மீ நீளம்) மறுசீரமைப்பதற்கு 10 ஆண்டுகள் ஆயின. ஷாங்காயில் உள்ள சுசோ க்ரீக் நதியை (125 கி.மீ நீளம்) மறுசீரமைப்பதற்குச் சுமார் 25 ஆண்டுகள் ஆயின. மேற்கு ஐரோப்பாவின் பல நகரங்கள் வழியே பாயும் ரைன் நதியினை (1,233 கி.மீ நீளம்) மறுசீரமைப்பதற்குச் சுமார் 40 ஆண்டுகள் ஆயின. உயிரியல்ரீதியாக இறந்துபோன நதிகள் என்று சொல்லப்பட்ட இவற்றில் இன்று நன்னீர் ஓடி, உயிர்கள் செழித்து வளர்கின்றன.
எனது கணிப்பின்படி, சென்னை நீர்வழிப் பாதைகளின் மறுசீரமைப்பு முயற்சிகள் 40 சதவிகிதம்கூட நிறைவடையவில்லை. சரியான அறிவியல் முறைகளைப் பின்பற்றினால், இதை முழுமையாகச் செய்துமுடிக்க இன்னும் 15 ஆண்டுகள் ஆகலாம். இதற்கு நிதி என்பது உண்மையில் ஒரு தடையல்ல. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களுக்காக சுமார் ரூ.85,000 கோடியைத் திரட்டக்கூடிய ஒரு நகரத்தினால், நதிகளை மறுசீரமைக்கத் தேவைப்படும் மிகக் குறைவான நிதியை நிச்சயமாகத் திரட்டவியலும். இதுபோன்ற பசுமை முயற்சிகளுக்கு, பல நிறுவனங்களிடமிருந்து தாராளமான நிதியுதவி கிடைக்கிறது.
சென்னை ஓர் உலகளாவிய நகரமாக மாற வேண்டுமென விரும்பினால், அதன் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற கூவத்துக்கும் அடையாற்றுக்கும் பக்கிங்காம் கால்வாய்க்கும் உயிர் கொடுக்க வேண்டும்.
source https://www.vikatan.com/news/general-news/special-story-about-cooum-river
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக