Ad

ஞாயிறு, 20 மார்ச், 2022

கங்கைக்கரையில் ஒலித்த அற்புத ஷெனாய் இசை - பிஸ்மில்லா கான் வாழ்க்கை நமக்குச் செல்லும் 5 பாடங்கள்!

அர்ப்பணிப்பு உணர்வு

நாட்டுப்புற இசைக் கருவிகளில் ஒன்றாக மட்டுமே விளங்கிய ஷெனாய்க்குப் பெரும் அந்தஸ்து ஏற்படவும், அதை மேடைக் கச்சேரியில் முக்கிய இசைக்கருவியாக மாற்றியதற்கும் முக்கியக் காரணமாக விளங்கியவர் பிஸ்மில்லா கான். தனது ஷெனாய் இசைக்கருவியை ‘பேகம்’ (மனைவி) என்று கூறிக் கொள்வார் பிஸ்மில்லா கான். அந்த அளவு அந்த இசைக்கருவியை நேசித்தார்.

பிஸ்மில்லா கான்

பிற மதங்களிடம் சகிப்புத்தன்மை

பிறப்பால் இஸ்லாமியர்; அதே சமயம், பிற மதங்களையும் மதித்தவர் அவர். கங்கை நதியைப் புண்ணிய நதியாகக் கருதி அதன் கரையில் அடிக்கடி ஷெனாய் வாசிப்பார். இந்து ஆலயங்களிலும் அவர் இசைக்க மறுத்ததில்லை. அல்லாவை மனமுருகித் தொழுதவர். அதே நேரம் தனது திறமைக்கு முக்கிய காரணம் காசி ஈசனான விஸ்வநாதர்தான் என்று அவர் அடிக்கடி கூறியதுண்டு.

திறமைகளில் உச்சம் தொடுங்கள்

பல இந்துஸ்தானி ராகங்களை அவர் உருவாக்கிப் பிரபலமடைய வைத்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் செ​ங்கோட்டையில் ஷெனாய் வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மிகவும் நெகிழ்ந்தார். காலப்போக்கில் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

எளிமையே பெருமை

பிஸ்மில்லா கானின் சீடர்களில் ஒருவர், “ஐயா உங்களைப் பார்க்க உலகத்தின் பல பகுதிகளிலிருந்து எல்லாம் வருகிறார்கள். ஆனால் நீங்கள் பழைய உடைகளை அணிகிறீர்கள். சில நேரம் கிழிந்த உடைகளைக் கூட அணிகிறீர்கள். இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறினாராம்.

அதற்கு பிஸ்மில்லாகான் “எனது இசைக்காகத்தான் எனக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. உடைக்காக அல்ல. இன்றிருப்பது நாளை இருக்காது. இசைதான் என்றைக்கும் நிரந்தரமானது” என்றாராம் உணர்வு கொப்பளிக்கும் குரலில்.

பிஸ்மில்லா கான்

தாய் நாட்டின் மீது ஆத்மார்த்தமான பற்று

தனது தாய் நாட்டை ​மிகவும் நேசித்தவர் அவர். பல நாடுகளுக்குச் சென்றாலும் அவற்றில் எங்கும் அவர் செட்டிலாக விரும்பியதில்லை. அமெரிக்காவில் ஷெனாய் கற்றுத் தரும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘உங்களுக்கு வாரணாசி மிகப் பிடித்த நகரம் என்பதால் அதே போன்ற பின்னணியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறோம்’ என்று கூட கூறினார்கள்.

“என்ன இருந்தாலும் உங்களால் கங்கையை இங்கு கொண்டு வர முடியுமா?” என்று கேட்டு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். 1966-ல் நடைபெற்ற பிரபல சர்வதேச எடின்பரோ திருவிழாவில் அவர் கலந்து கொண்டாக வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தும் வரை அவர் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் இசைக்கக் கிடைத்த வாய்ப்புகளைக்கூட மறுத்தே வந்தார்.



source https://www.vikatan.com/social-affairs/music/five-lessons-we-need-to-learn-from-the-life-of-the-legendary-bismillah-khan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக