கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டப்பட்டு ஏழு ஆண்டுகளாகியும், குடிநீர், மின்வசதி இல்லாமல் அங்கு பயிலும் குழந்தைகள் அல்லாடுவதாக புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகில் இருக்கிறது மகிளிப்பபட்டி கிராமம். இந்த கிராமத்தில் எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு அருகில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கன்வாடி குழந்தைகள் மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு கடந்த 2014 -ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
மேற்கொண்டு இதுகுறித்து பேசும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ``குழந்தைகளுக்கு தேவையான மின்வசதி, குடிநீர் வசதி ஆகிய பணிகளுக்கு கட்டட ஒப்பந்ததாரர்கள் உரிய மின் விசிறி, மின் விளக்குகள் குடிநீர் குழாய்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து கொடுத்திருந்தனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக மின் இணைப்பு கொடுக்கப்படாததால் குழந்தைகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதி, மின்விசிறி, மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், 30-க்கு மேற்பட்ட குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை நாங்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
குழந்தைகளின் பெற்றோர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேட்டபோது, 'ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்துக்கு செல்லுங்கள்' என்று கூறி உள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திலோ, 'கிராம ஊராட்சி மன்றம் தான் செய்து தரவேண்டும்' என்று இருவரும் ஒருவரையொருவர் மாற்றி அலைக்கழித்து வருகின்றனர். இதனால், குழந்தைகள்தான் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் மாவட்டத்தில் இப்படி ஓர் அவலம். இதை எங்கே போய் சொல்றது?" என்று கலங்கினார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/no-electricity-connection-in-karur-anganwadi-for-7-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக