Ad

வியாழன், 31 மார்ச், 2022

வன்னியர் உள் இட ஒதுக்கீடு: ``அடிப்படைத் தரவுகள் சரியாக இல்லாததால்தான்..!" - துரைமுருகன் விளக்கம்

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, ``உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், உள் இட ஒதுக்கீடு வழங்கும்போது, அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு கொடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``அதிமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல, சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்தச் சிறப்பு ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால்தான் உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை ரத்துசெய்திருக்கிறது. திமுக ஆட்சியில் அருந்ததியினர், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டன. சரியான ஆதாரங்கள் அடிப்படையில் திமுக கொண்டுவந்த ஒதுக்கீடுகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதல்வர் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு முழு மூச்சுடன் முயற்சி மேற்கொண்டும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்'' என்று அதில் துரைமுருகன் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் இது குறித்து தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில் பேசிய அவர், ``உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இது முடிவு அல்ல... தொடர்ச்சிதான். தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றை அமைத்து, புள்ளிவிவரங்களைத் திரட்டி மீண்டும் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும். வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறிய ஏழு காரணங்களில் ஆறு காரணங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-duraimurugan-slams-admk-government-regarding-vanniyar-reservation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக