மும்பை கோரேகாவ் பகுதியில் எஸ்.பி.ஐ வங்கிக்கு மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஏ.டி.எம் சென்டர் ஒன்று இருக்கிறது. இந்த ஏ.டி.எம் சென்டரில் தீடீரென தீப்பிடித்துக்கொண்டது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து விரைந்து சென்றனர். ஆனால் இதில் ஏ.டி.எம் சென்டர் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. வங்கி அதிகாரிகள் இது குறித்து விசாரித்துவந்தனர். ஏ.டி.எம் சென்டரில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஏ.டி.எம் சென்டருக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் மட்டும் மாயமாகியிருந்தன.
அதோடு ஏ.டி.எம் மெஷினுக்குள் பணம் வைக்கும் அறை தீ விபத்துகளால் பாதிக்கப்படாத பகுதியாகும். அந்த அறையை டெக்னீஷியன் மூலம் திறந்து பார்த்தபோது ஒரு சில ரூபாய் நோட்டுகள் மட்டும் எரிந்த நிலையில் கிடந்தன. எஞ்சிய நோட்டுகள் எரிந்ததற்கான அடையாளமோ அல்லது அவற்றின் சாம்பலோ அங்கு கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள் ஏ.டி.எம் மெஷினைப் பராமரிக்கும் ஊழியர்களைத் தேடியபோது அவர்கள் கிடைக்கவில்லை. பிரவின், ரிதிக், ராகுல் ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர்.
ஏ.டி.எம் மெஷினில் எவ்வளவு பணம் நிரப்பப்பட்டது என்ற விவரம் மெஷினில் பதிவாகியிருக்காது. ஆனால் அதில் பணம் நிரப்புபவரிடம் அத்தகவல் இருக்கும். ஏ.டி.எம் மெஷினில் எவ்வளவு பணம் இருந்தது என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள மெஷினில் பணம் நிரப்பும் ராகுலை வங்கி அதிகாரிகள் தேடியபோது அவரும் தலைமறைவாகியிருந்தார். அவருக்கு ஏ.டி.எம் பாஸ்வேர்டு தெரியும். அதைப் பயன்படுத்தி ராகுல் மற்ற இருவருடன் சேர்ந்து ஏ.டி.எம் மெஷினில் இருந்த ரூ.77 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். போலீஸாரின் விசாரணையை திசைதிருப்ப ஏ.டி.எம் சென்டருக்கு தீவைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து மூன்று பேர் மீதும் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து மூன்று பேரையும் தேடிவருகின்றனர். இந்தக் கொள்ளையில் வேறு ஊழியர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/rs-77-lakh-robbery-at-mumbai-atm-atm-set-on-fire-to-divert-police-attention
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக