இந்தியா பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தாலும், தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட மிக முக்கியமான பொருட்களை மற்ற உலக நாடுகளிடம் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. அந்த வகையில் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் பாமாயிலை அதிக அளவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. அதாவது மொத்த சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் இறக்குமதியில் இந்த இரண்டு நாடுகளிடம் இருந்து மட்டுமே 90% எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
இப்போது இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக போர் நடந்து வருவதால், எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் சிக்கல் உருவாகியிருக்கிறது. மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளதாலும் அங்கிருந்து பொருட்களை சகஜமாக இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அச்சம் காரணமாக முற்றிலுமாக இறக்குமதி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம்.
இதன் காரணமாக இந்திய சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயிலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.40-50 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு லிட்டர் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் தற்போது ரூ.190-ஆக உயர்ந்துள்ளது.
பாமாயில் முதல் தரம், லிட்டர் ரூ.130-க்கு இரு வாரங்களுக்கு முன் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.170-ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இந்தோனேஷியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சில ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாகவும் இத்தகைய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவின் இறக்குமதி அளவு!
இந்தியா ஒவ்வொரு வருடமும், மொத்தம் 25 மில்லியன் டன் அளவுக்கு சமையல் எண்ணெய்யை உலக நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. இதில் பாமாயில் சதவிகிதம் 56%, சோயாபீன் ஆயில் 26%, சூரியகாந்தி எண்ணெய் 16% மற்றும் மற்ற எண்ணெய்கள் 4%. உலக நாடுகளின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் 55% எண்ணெய்களை இந்தியாவே இறக்குமதி செய்கிறது.
அதனால்தான் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்றும் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில்தான் எண்ணெயின் பயன்பாடு அதிகம். உணவுகள் சமைக்க, நொறுக்கு தீனிகள் தயாரிக்க, பிஸ்கட்கள் மற்றும் ஷாப்பூ தயாரிக்க என பல பயன்பாடுகளுக்கு எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் மக்கள் அதிக அளவில் எண்ணெய்யை பயன்படுத்துகிறார்கள் என்பதால், கடந்த சில வருடங்களாகவே உள்நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியை அரசாங்கம் அதிகப்படுத்த நினைத்தது. ஆனால் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு இணையான உற்பத்தியை இந்தியாவால் ஏற்படுத்த முடியவில்லை. தேவை அதிகரிப்பு, விநியோகச் சங்கிலியில் சிக்கல் போன்ற பல காரணங்களால் 2017-ல் இருந்த சமையல் எண்ணெய் விலையானது தற்போது இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 2022-ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை மட்டுமே 8,43,377 டன் சூரிய காந்தி எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. இதில் 85% எண்ணெய்யை உக்ரைனில் இருந்தும், 14.3% எண்ணெயை ரஷ்யாவில் இருந்தும் மீதியை அர்ஜென்டீனாவில் இருந்தும் இறக்குகுமதி செய்திருக்கிறது என Solvent Extractors’ Association of India (SEAI) அறிக்கை சொல்கிறது. துறை சார்ந்த நிபுணர்கள் சொல்வது போல, இந்தியா ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 1.50 - 2 லட்சம் டன்கள் வரை சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. ஆனல் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும், அது 70,000 டன்னாக குறைந்திருக்கிறது.
ஏனெனில் அந்த மாதத்தில்தான் ரஷ்யா- உக்ரைனுக்கு இடையிலான போர் சூழல் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் இறக்குமதி முற்றிலுமாக தடைபட்டது. இதன் காரணமாக மற்ற நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய அரசாங்கம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் தேவை மற்றும் விநியோகச் சங்கிலியில் சிக்கல் உருவாகியிருப்பதை பயன்படுத்திக் கொண்டு, சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 20% வரை அதிகமாகியிருக்கிறது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் விலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டன் ஒன்றுக்கு 130- 190 டாலர் வரை அதிகரிப்பு!
துறை சார்ந்த வட்டாரத் தகவல்கள் சொல்வது போல, உலகளவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சோயாபீன் மற்றும் பாமாயிலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்பதை அமெரிக்க வேளாண்மைத் துறையின் மார்ச் மாத அறிக்கையும் தெளிவாக விளக்குகிறது.
அந்த அறிக்கையில், ``தற்போதைய போர் சூழல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சோயாபீன் மற்றும் பாமாயிலின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. பிப்ரவரி 2022-ல் அர்ஜென்டினாவில் ஒரு டன் சோயாபீன் எண்ணெயின் சராசரி விலை 1,532 டாலராக இருந்தது. ஜனவரி 2022 உடன் ஒப்பிடும்போது ஒரு டன்னுக்கு 159 டாலர் அதிகரித்துள்ளது. இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் ஒரு டன் பாமாயிலின் சராசரி விலை 1,551 டாலர் மற்றும் 1,541 டாலர் ஆகும். ஜனவரி மாத விலையுடன் இதை ஒப்பிடும் போது 139 டாலர் மற்றும் 188 டாலர் அதிகரித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால் காத்துக் கொண்டிருக்கிறது!
மேலும், உலக சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் பங்கு 75%. இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே அதி பயங்கரமான போர் நடைபெற்றுக் கொண்டிருப்பது. அனைத்து உலக நாடுகளுக்கு ஒரு வித பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும் என்றே சொல்லலாம்.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம் எப்படி அனைத்து உலக நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறதோ, அதே போல சமையல் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகளும் வர்த்தகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அச்சத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இவ்விரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் நின்றால்தான், சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய் உள்பட பெரும்பாலான பொருட்களின் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்பட்டு, மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும்.
source https://www.vikatan.com/business/news/how-ukraine-russia-war-impacted-in-cooking-oil-price-rise
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக