Ad

வியாழன், 31 மார்ச், 2022

ஆம்பூர்: நேரக் கட்டுப்பாட்டு? ; தறிகெட்டு ஓடிய வேன், லாரிமீது மோதியதில் 4 பேர் பலி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் காலணி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றில், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலர் வேலை செய்கிறார்கள். இந்தப் பெண்களை தினந்தோறும் காலையில் பணிக்கு அழைத்து வந்து, மாலையில் அவரவர் பகுதியில் கொண்டு சென்றுவிடுவதற்காக தொழிற்சாலைத் தரப்பில் வேன்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை வழக்கம்போல், வாணியம்பாடி மார்க்கத்திலிருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் தொழிற்சாலையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. 9 மணிக்குள் தொழிற்சாலைக்குள் வேன் வந்துவிட வேண்டும் என்ற நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஓட்டுநர் அதிவேகமாக வேனை இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் நொறுங்கிய வேன்

சோலூர் என்றப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தறிகெட்டு ஓடி தடுப்புகளை உடைத்துகொண்டு எதிர்த்திசையில் பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரியில் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், வேனின் முகப்புப் பகுதி நொறுங்கியது. வேன் ஓட்டுநர் ராமன் மற்றும் வேனுக்குள் இருந்த பெண் தொழிலாளர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 15 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். லாரி ஓட்டுநரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவ இடத்தில் எஸ்.பி பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். தொடர்ந்து, வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்களைச் சந்தித்து, விசாரணை மேற்கொண்டார். இந்தச் சம்பவம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/road-accident-in-ambur-4-persons-died

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக