திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அவர். மார்ச் 5-ம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் விளையாடச் செல்வதாகக் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் மகனைத் தேடி அலைந்துள்ளனர். எங்கும் அவர் கிடைக்காமல் போக மகனைக் காணவில்லை என துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, துறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். முதற்கட்ட விசாரணையிலேயே மாணவன் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த சர்மிளா (26) என்பரும் அதேநாளில் மாயமாகியது போலீஸாருக்குத் தெரியவந்தது.
அதையடுத்து காணாமல் போன மாணவருடன், ஆசிரியை சர்மிளாவும் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்தவகையில், ஆசிரியை சர்மிளாவின் செல்போன் நம்பரை போலீஸார் டிரேஸ் செய்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதில் சர்மிளாவின் செல்போன் சிக்னல் வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என மாறிக்கொண்டே வந்து கடைசியில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருப்பதாகக் காட்டியிருக்கிறது. எடமலைப்பட்டி புதூரில் உள்ள தோழி ஒருவருடைய வீட்டில் ஆசிரியை சர்மிளாவும், மாயமான அந்த மாணவரும் தங்கியிருப்பதை கடைசியில் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
``ரெண்டு பேரும் 5 வருஷமா போன்ல பேசிக்கிட்டும், மெசேஜ் செஞ்சிக்கிட்டும் இருந்தோம். எனக்கு அவன் மேலயும், அவனுக்கு என் மேலயும் விருப்பம் உண்டாச்சி." - ஆசிரியை
அதையடுத்து துறையூர் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் எடமலைப்பட்டி புதூருக்குச் சென்று ஆசிரியை சர்மிளா மற்றும் அந்த மாணவரை துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, ‘அவன் 7-வது படிச்ச சமயத்துல இருந்தே அவனுக்கும் எனக்கும் பழக்கம். ரெண்டு பேரும் 5 வருஷமா போன்ல பேசிக்கிட்டும், மெசேஜ் செஞ்சிக்கிட்டும் இருந்தோம். எனக்கு அவன் மேலயும், அவனுக்கு என் மேலயும் விருப்பம் உண்டாச்சி. ரெண்டு பேரும் வீட்டை விட்டுப் போய் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணி தஞ்சாவூர் கோயில்ல வச்சி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். அதுக்குப் பின்னாடி எங்க போறதுன்னு தெரியாம வேளாங்கண்ணி, திருவாரூர்ன்னு சுத்திக்கிட்டு இருந்தோம்’ என்றிருக்கிறார் ஆசிரியை சர்மிளா. அதையடுத்து 17 வயது மாணவனை ஆசை காட்டி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக, போலீஸார் ஆசிரியை சர்மிளாவை போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்துள்ளனர். மாணவர் திருச்சியிலுள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-trichy-school-teacher-in-pocso-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக