Ad

செவ்வாய், 15 மார்ச், 2022

``2024-ல் காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது” - பிரசாந்த் கிஷோர் சொல்லும் தென் - கிழக்கு கணக்கு

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை எதிர்த்து களம் காண முடியுமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். இதனால் ஒரு புறம் ஆம் ஆத்மி கட்சியும், மற்றொரு புறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸின் இடத்தை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்

இந்நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ``காங்கிரஸ் கட்சியால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சவாலை கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், பேசுகையில், ``காங்கிரஸ் கட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியால் கடுமையான சவாலை கொடுக்க முடியும். 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் தெற்கு, கிழக்கு பகுதியில் 200 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இங்கு பாஜகவால் 50 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனவே காங்கிரஸ் கட்சி மறுஅவதாரம் எடுக்கவேண்டும். கட்சியில் தொண்டர்கள், கொள்கை மற்றும் ஐடியாக்கள் இருக்கிறது.

ஆனால் மற்ற அனைத்தும் புதிதாக இருக்கவேண்டும்” என்றார். தொடர்ந்து, `அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக யார் இருக்கவேண்டும்’ என்று கேட்டதற்கு, அது குறித்து பதில் கூற மறுத்த பிரசாந்த் கிஷோர், ``காங்கிரஸ் மனது வைத்தால் ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் பாஜகவை தோற்கடிக்கவேண்டும் என்று நினைப்பவர்களை ஒன்று சேர்த்தால் பாஜகவை எதிர்கொள்ள முடியும். காந்தி குடும்பம் காங்கிரஸ் தலைமையில் இருந்து விலகினாலும், காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற முடியாது. காங்கிரஸ் மீண்டும் அடிப்படை கட்டமைப்புகளை சரியாக செய்யவேண்டிய நேரம் இது. காங்கிரஸ் கட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை. உட்கட்சி ஜனநாயகம் கூட இல்லை. காங்கிரஸ் தலைவர் களத்தில் இறங்கி வேலை செய்யாவிட்டால் எதுவும் நடக்காது. பாஜக-வுக்கு மாற்றாக வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தால் 10 முதல் 15 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்கவேண்டும். குறுகிய கால திட்டங்களாக இருக்ககூடாது.

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலை பாதிக்காது. உத்தரப்பிரதேச தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள் 2012-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக நான்காவது இடத்திற்கு வந்தது. ஆனால் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. அரசியலில் 2 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும் நன்றாக அறிவார். தற்போது நடந்திருப்பது லீக் ஆட்டம். இதில் வெற்றி பெற்ற அணியை கொண்டு இறுதிப்போட்டியில் ஆடினால் அதில் வெற்றி கிட்டும் என்பது என்ன நிச்சயம்?” என்று கேள்வி எழுப்பினார்.



source https://www.vikatan.com/news/politics/prasanth-kishore-says-congress-has-a-chance-in-2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக