தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ``அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைதளத்தில் என்னை, `இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா?’ என ஒருமையில் விமர்சனம் செய்து திட்டியிருந்தார். திட்டுவதைக்கூட அழகு தமிழில் மரியாதையாகக் திட்டுங்கள்” எனக் கண்கலங்க வேதனையுடன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம் இன்று நடைபெற்றது.
இதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழிசை செளந்தரராஜன், ``இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் பல்வேறு பணிகளுக்கு இடையில் தெலங்கானாவிலிருந்து வந்துள்ளேன். நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி என்பதும் அதற்கு முக்கியக் காரணம். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும். மரக்கன்றுகள் நடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இங்கு பலா மரக்கன்றை நடுவதற்காகக் கொடுத்தார்கள். எட்டயபுரம், திருவல்லிக்கேணி, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து மண் கொண்டு வந்திருந்தார்கள். அந்த மண்ணில் மரக்கன்றை நட்டுவைத்தேன்.
பாரதியாரின் பாடல்கள் குறித்து நாம் நிறைய அறிந்திருப்போம். அவரின் உரைநடைப் புத்தகங்களையும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும். உடல் நலன் பெறுவது குறித்து பாரதியார் தனது உரைநடையில் தெரிவித்துள்ளார். உடல்நலம் பேணுவது மிகவும் முக்கியம். நாம் சங்க காலம் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், கொரோனா காலம் என்பதை இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் தெரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் நமது உணவு முறை அதை மாற்றிவிட்டது. உடல்நலமும் மனநலமும் பெற்றால் எல்லா நலமும் பெறலாம் என பாரதியார் கூறியுள்ளார்.
பெண்கள் உயர்வுக்காக பாரதியார் மிகவும் பாடுபட்டுள்ளார். நிமிர்ந்த நடையும், நேர்க்கொண்ட பார்வையும் வேண்டும் என்று தெரிவித்த அவருக்கு பெண்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். சமூக இணையதளங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதைக் கண்டால் பயமாக உள்ளது. இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறோம். எனவே இணையத்தில் தமிழ் மொழியைச் சரியாகப் பயன்படுத்துங்கள். திட்டுவதைக்கூட அழகு தமிழில் மரியாதையுடன் திட்டுங்கள். விமர்சனத்துக்கும் மரியாதையான சொற்களையே பயன்படுத்த வேண்டும்.
அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை சமூக வலைதளத்தில், `இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா?’ என்று ஒருமையான வார்த்தையைப் பயன்படுத்தித் திட்டியிருக்கிறார். திட்டுவதைக்கூட தமிழ் மொழியில் உள்ள அழகான வார்த்தையில் மரியாதையுடன் பயன்படுத்தித் திட்டுங்கள்” எனக் கண்கலங்கத் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilisai-soundararajan-talks-about-social-media-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக