Ad

புதன், 23 மார்ச், 2022

ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் `சின்னம்மா’ சசிகலா பாசம்... ஓ.பி.எஸ் ஸ்கெட்ச் தான் என்ன?

``பொதுமக்களின் கருத்தாக சந்தேகம் இருக்கிறது என்று சொல்லித்தான் முதன்முதலாக நான் பேட்டி கொடுத்தேன். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு சின்னம்மா அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் நிரூபித்திருந்தால், அவர்கள் மேல் இருக்கிற குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் சின்னம்மா அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு'' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கும் கருத்து, அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழக அரசியல் வட்டாரத்தையே ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது.

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி மரணமடைந்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சைகளை உண்டாக்கியது. அப்போது, சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் என 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரணை நடத்தினர். கூடுதலாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

2017-ம் ஆண்டு, நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது. 154 சாட்சிகளிடம் விசாரணையை முடித்திருந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டது. அதில் மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் ஆணையத்தின் விசாரணை நடந்துவருவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடைவிதித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஆணையம் தன் விசாரணையைத் தொடங்கியது.

சசிகலா, இளவரசி

முதலில் சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் விசாரணை செய்த ஆணையம், தொடர்ந்து சசிகலாவின் உறவினரான இளவரசி, ஓ.பி.எஸ் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தியது. அப்போது, சசிகலாவின் வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணையில், `ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சையளித்தார்கள் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதில், சசிகலா எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. சசிகலா மீது தனிப்பட்ட முறையில், எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு' என ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்துகள்தான் தற்போது மிகப்பெரிய விவாதமாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெளியில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், சசிகலாவை சின்னம்மா எனக் குறிப்பிட்டு, அவரின் மீது மரியாதை இருக்கிறது எனப் பேசியிருப்பது அதிமுகவுக்குள் உஷ்ணத்தை அதிகரித்திருக்கிறது.

ஒரு குடும்பத்தின்(சசிகலா குடும்பம்) பிடிக்குள் கட்சியும் ஆட்சியையும் இருக்கக்கூடாது, என கடந்த காலங்களில் பேசிய ஓபிஎஸ் தற்போது இப்படிப் பேசியிருப்பதற்கான காரணம் என்ன?

அதிமுக வட்டாரத்தில் பேசினோம்,

``ஓபிஎஸ் ஆணையத்தில் பேசியிருக்கும் கருத்துகள் உண்மைக்கு மாறானவை அல்ல. ஆனால், கடந்த காலங்களில் சில அரசியல் நெருக்கடிகள் காரணமாக வேறு மாதிரி பேசியிருக்கலாம். அதேபோல, பொதுவெளியில் ஒரு கருத்தை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் ஆணையத்தில் அப்படிப் பேச முடியாது. தவிர, சசிகலா தரப்பு வழக்கறிஞரும் குறுக்கு விசாரணை நடத்தும்போது சரியான விளக்கம் அளிக்க வேண்டிவரும். இவை அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், தேவையான விஷயங்களோடு நிற்காமல், சசிகலாவின்மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என்று பேசியதற்கும் அவரை சின்னம்மா என அழைத்ததற்கும் பின்னால் அரசியல் காரணங்கள் இல்லாமல் இல்லை.

தர்மயுத்தம்

பல்வேறு காலக்கட்டத்தில், அதிமுக நிர்வாகிகளில் ஒரு பிரிவினர், ஓபிஎஸ்ஸை நம்பி களத்தில் இறங்குவதும் பின்னர் ஓ.பி.எஸ் பின்வாங்குவதுமாக பலமுறை இந்தக் காட்சிகள் அரங்கேறிவிட்டன. இனிமேல், யார் ஒருவரும் ஓபிஎஸ்ஸை துளியும் நம்புவதாகவும் இல்லை. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் சசிகலாவுடன் சேர்ந்துகொண்டு தன்னை ஓரங்கட்டலாம் என்று நினைக்கும் எடப்பாடி, கட்சிக்குள் உள்கட்சித் தேர்தல் நடத்தி அதில் தனக்கு ஆதரவானவர்களை அமர்த்தி, கட்சிக்குள் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார். இதற்காக நடக்கும் மூவ்கள் குறித்து ஓபிஎஸ்ஸுக்கும் தெரியும். அதனால்தான், சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார், இந்தநேரத்தில், தான் சசிகலாவின் மீது மரியாதை வைத்திருப்பவன் என்று சொல்வதன்மூலம், சமூக ரீதியாக தனக்கு ஆதரவான ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறார்.

நாளை கட்சியில் தன்னை ஓரங்கட்டினாலும், தனக்காக யாரும் வராவிட்டாலும் சசிகலாவுக்காகவும் சமூக ரீதியாகவும் ஆதரவாக பலர் நிற்பார்கள் என்பதுதான் அவரின் எண்ணம். அதனால்தான், அந்தப் பக்கமும் ஒரு துண்டைப் போட்டுவைத்துக் கொள்ள நினைக்கிறார். மற்றபடி முழுமையாக சசிகலா ஆதரவு நிலையில் ஓபிஎஸ் இறங்கிவிட்டார் என்கிற முடிவுக்கெல்லாம் நாம் வந்துவிட முடியாது'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-behind-opss-recent-words-about-sasikala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக