விழுப்புரம் பேருந்து நிலையம்:
சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை!
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள், 28, 29 ஆகிய 2 நாள்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்ப்பதால், வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பணிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு மாநில தொழிற்சங்கங்களும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப்., கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன்படி இன்று தொடங்கிய வேலைநிறுத்த போராட்டத்தில் இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பஸ் போக்குவரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இன்று திங்கள்கிழமை என்பதால், வேலைகளுக்கு செல்லும் மக்களும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.
வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. சென்னையிலும் இன்று11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்க இருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/india/live-updates-on-national-wide-strike-against-union-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக