கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில், சாமி சிலைகள் வடிக்கும் பட்டறை ஒன்றில் 5 அடி உயரம்கொண்ட தொன்மையான நடராஜர் சிலையை, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் அந்தச் சிலை எந்தக் கோயிலுக்கு சொந்தமானது, அதன் மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கும்பகோணம், சுவாமிமலை அருகேயுள்ள டி.மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சிலை வடிக்கும் பட்டறை நடத்திவருகிறார். சதீஷ்குமார் தன் பட்டறையில் தொன்மையான சாமி சிலைகளைப் பதுக்கிவைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சி சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீஸார் சதீஷ்குமாரின் பட்டறையில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து சதீஷ்குமாரின் பட்டறையில் சோதனை நடத்தினர். இதில் சுமார் 5 அடி உயரம், 4 அடி அகலம்கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட தொன்மையான நடராஜர் சிலை பதுக்கிவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சதீஷ்குமாரிடம் நடராஜர் சிலை குறித்து ஆவணங்கள் எதுவும் இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிலைக்குரிய முறையான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை.
இதையடுத்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் தொன்மையான நடராஜர் சிலையைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் சாமி சிலைகள் வடிப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதுக்கிவைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலையை மீட்ட சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் டீமை காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் இயக்குநர் ஜெயந்த் முரளி ஆகியோர் பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், ``சிலை வடிக்கும் பட்டறையில் தொன்மையான சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப் பட்டறையில் சோதனை நடத்தியதுடன், மிகவும் தொன்மையான நடராஜர் சிலையைப் பறிமுதல் செய்தோம்.
இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் அந்தச் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறோம். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை தமிழகத்தில் உள்ள ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமானதா என்றும், அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/crime/statue-found-in-kumbakonam-police-investigating
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக