Ad

புதன், 16 மார்ச், 2022

காங்கிரஸ்: ``அனைத்து மட்டங்களிலும் முடிவெடுக்கும் தலைமை” - ஜி23 கூட்டத்தில் நடந்தது என்ன?

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், ஜி-23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள்

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தோல்விக்கு பிறகான சந்திப்பு காரணமாக இந்த கூட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது. டெல்லியில் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ஆனந்த் சர்மா, கபில் சிபல், மணீஷ் திவாரி, பூபிந்தர் சிங் ஹூடா, அகிலேஷ் பிரசாத் சிங், சந்தீப் தீட்சித், பிஜே குரியன், குல்தீப் சர்மா, விவேக் தன்கா, எம்.ஏ. கான், ராஜிந்தர் கவுர் பட்டல், ராஜ் பப்பர், பிருத்விராஜ் சவான், சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து கூட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அதில், ``காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான நாங்கள், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், நமது தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் ஆகியவற்றால் மனச்சோர்வடைந்த விளைவுகளைப் பற்றி ஆலோசிக்கச் சந்தித்தோம். அனைத்து மட்டங்களிலும், அனைவரையும் உள்ளடக்கிய தலைமை, அனைத்து கட்டங்களிலும் முடிவெடுக்கும் தலைமையை காங்கிரஸுக்கு ஏற்றுக்கொள்வதே ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம்.

பாஜகவை எதிர்க்க, காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவது அவசியம். 2024 -ம் ஆண்டிற்கான நம்பகமான மாற்றுக்கு வழி வகுக்கும் ஒரு தளத்தை உருவாக்க, மற்ற ஒத்த எண்ணம் கொண்ட சக்திகளுடன் உரையாடலைத் தொடங்க காங்கிரஸ் கட்சியை நாங்கள் கோருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கும் தெரிந்து தான் நடத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இன்று குலாம் நபி ஆசாத் சோனியா காந்தியை சந்தித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் பேச உள்ளதாகவும் சோனியா காந்தி ஒதுக்கும் நேரத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-g-23-leaders-meet-in-delhi-and-discussed-about-the-loss-in-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக