Ad

சனி, 13 மார்ச், 2021

''எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி!''- கலங்கும் கருணாஸ்

அ.தி.மு.க மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி கூட்டணியிலிருந்து வெளியேறிய 'முக்குலத்தோர் புலிப்படை கட்சி', தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. திடீரென தி.மு.க ஆதரவையும் விலக்கிக்கொண்டு வெளியேறிய அந்தக் கட்சி, தற்போது ம.நீ.ம தலைமையிலான 3-வது அணியில் பங்கேற்கும் முயற்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

பரபரப்பான இந்தச் சூழலில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து மு.பு.க வெளியேறியது ஏன் என்பது குறித்து கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸுடன் பேசினோம்....

''அ.தி.மு.க ஆட்சிக்காலம் முழுவதும் ஆதரவு தெரிவித்துவந்த நீங்கள் தேர்தல் சமயத்தில் ஆதரவை விலக்கிக்கொண்டது ஏன்?''

''சட்டசபையில் ஆளும் கட்சியைப் பார்த்து எதிர்க்கட்சி குற்றச்சாட்டு சொல்வதும், கடந்த காலத்தில் எதிர்க்கட்சி செய்ததை எடுத்துச்சொல்லி குற்றச்சாட்டு வைப்பதுமாக கடந்த 70 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியலே இதுதான்... கேட்டுக்கேட்டு புளித்துப் போய்விட்டது! அதேபோல், ஒருவர் ஒரு கூட்டணியிலிருந்து வெளியேறினால், உடனே 'பதவிக்காலம் முடிந்தபிறகு வெளியேறுகிறீர்களே...' என்று கேட்கிறார்கள்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

கடந்த 4 ஆண்டுகளில், என் தொகுதி சார்ந்த, சமூகம் சார்ந்த எத்தனையோ கோரிக்கைகளை சட்டசபையில் எழுப்பியிருக்கிறேன். ஆனால், எதையுமே இந்த அரசு செய்துதரவில்லை! உதாரணமாக என் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்தப் பணிகளை செய்வதற்கு ஏன் ஈரோட்டிலிருந்து, கோவையிலிருந்தும் ஒப்பந்ததாரர்கள் வரவேண்டும்? ராமநாதபுரத்தில் காண்ட்ராக்டர்களே இல்லையா?''

''அப்படியென்றால், உங்களது தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகினீர்களா?''

''என் தொகுதியிலுள்ள பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் நான் பேசிவருகிறேன். இதில், உரிய தகுதியுடைய காண்ட்ராக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதும் ஒரு பிரச்னை. ஆனால், இதை மட்டும் எடுத்துக்கொண்டு என் மீது நிறைய கேள்விகளை முன்வைக்கிறார்கள். அவர்கள் நினைப்பதுபோல், காண்ட்ராக்டர்களிடம் 'கமிஷன்' வாங்கும் பழக்கம் எதுவும் என்னிடம் கிடையாது. அப்படி நான் காசு வாங்கியிருந்தால், இன்றுவரை சொந்த வீடுகூட இல்லாமல், வாடகை வீட்டில் ஏன் இருந்துவருகிறேன்? 234 எம்.எல்.ஏ-க்களில் என்னைப்போல் வாடகை வீட்டில் குடியிருப்பவர் யார் எனச் சொல்லுங்கள் பார்ப்போம்!''

''கூவத்தூர் ரகசியங்கள் குறித்து ஒவ்வொன்றாக வெளியே சொல்வேன் என பகிரங்கமாக அறிவித்திருந்தீர்களே.... அது என்ன ரகசியம்?''

''4 ஆண்டுகளுக்கு முன்பு, அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க ஓ.பி.எஸ் முயற்சி செய்கிறார்; தமிழ்நாட்டு மக்களை மத ரீதியிலாக பிரித்தாள்வதற்கு முதல் அடிமையாக ஓ.பி.எஸ்-ஸை கையில் எடுத்துவிட்டது மத்திய பா.ஜ.க அரசு என்றெல்லாம் சொல்லித்தானே ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக கூவத்தூரில் அனைவரும் ஒன்றுகூடினார்கள். ஆனால், அதன்பிறகு அதே ஓ.பி.எஸ்-ஸையே ஆட்சிப்பொறுப்பில் சேர்த்துக்கொண்டு சசிகலாவை எதிர்ப்பதென்பது என்ன நியாயம்?

கூவத்தூரில், ஜெயலலிதா புகைப்படத்தின் முன் அகல் விளக்கு ஏற்றிவைத்து, 'சசிகலாவுக்கு நேர்ந்த அநீதியைத் தட்டிக்கேட்போம்; என்றென்றைக்கும் அவருக்கு உறுதுணையாக இருப்போம்; சிறையிலிருந்து சசிகலா திரும்பி வரும்வரை கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காப்பாற்றுவோம்' என்றெல்லாம் அ.தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் சத்தியம் செய்திருக்கின்றனர்.

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் கையூட்டு கொடுக்கப்பட்டது. 'சசிகலாவுக்கு பக்கத் துணையாக இருப்போம்' என்று சத்தியம் செய்துகொடுத்த எடப்பாடி பழனிசாமியிலிருந்து அத்தனைபேரும் இன்றைக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்! இதைப்பற்றி ஏன் யாருமே பேசமாட்டேன் என்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்திலும்கூட, நீட் தேர்வில் ஆரம்பித்து எல்லா சமூக நீதியும் தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில், வள்ளுவருக்குக்கூட அய்யர் வேஷம் போட்டுவிட்டார்கள். இதைக்கூட இந்த அரசாங்கம் தட்டிக்கேட்கவில்லையே! தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருந்தால் போதும் என்ற சுயநலத்தில், ஒரு மாநிலத்தின் நலன்களையே அடகுவைத்துவிட்டது எந்தவிதத்தில் நியாயம்?''

Also Read: நயினார் நாகேந்திரன்: பா.ஜ.க பட்டியல் அறிவிப்புக்கு முன்பே வேட்புமனு தாக்கல்! -என்ன காரணம்?

''கூவத்தூரில் அனைவருக்கும் கையூட்டு வழங்கப்பட்டது என்று ஒப்புக்கொண்ட நீங்களே, இப்போது எடப்பாடி பழனிசாமி சுயநலமாக செயல்படுகிறார் என்று கேள்வி எழுப்பலாமா?''

''நானா உங்களிடம் வந்து காசு கேட்டேன்? அப்படி நான் காசுக்கு விலை போகிறவனாக இருந்தால், '6 கோடி தருகிறேன், 7 கோடி தருகிறேன்' என்று என் வீட்டு வாசலில் வந்து பெட்டியோடு நின்றார்களே ஓ.பி.எஸ் ஆட்கள்.... அவர்களிடம் அல்லவா நான் வாங்கிக்கொண்டு போயிருக்க வேண்டும்!''

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்

''சசிகலாவுக்காக இவ்வளவு பாசம் காட்டுகிற நீங்கள் இன்னும் அவரை நேரில் போய் சந்திக்கவில்லையே ஏன்?''

''சசிகலாவை நான் நேரில் போய் சந்தித்துவிடலாம்தான்... ஆனால், அவர் சமூகம் சார்ந்தவரை மட்டும் சசிகலா சந்திக்கிறார் பாருங்கள் என்றுகூட அவருக்கு எதிராக பேச்சுகள் எழலாம். ஏற்கெனவே அவரைச் சுற்றி நிறைய கெடுதல்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சூழலில், என்னால் நல்லது நடக்கவில்லை என்றாலும் ஏன் அவருக்கு கெடுதல் நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் ஒதுங்கியிருக்கிறேன்.

Also Read: புதுச்சேரி: `மூன்று தொகுதிகள்தான்!’ - கறார் காட்டும் பா.ஜ.க; வெளியேறுகிறதா அ.தி.மு.க?

சசிகலாவை குறிப்பிட்ட ஒரு சமுதாயவாதியாக ஒடுக்கிவிட வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய திட்டம். அவரது இந்தத் திட்டத்துக்கு விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாய அமைச்சர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இவர்கள்தான், 'இந்த சாதியை நாம் கையில் எடுத்துக்கொள்வோம்; இந்த சமுதாய மாநாட்டில் வந்து நீங்கள் கலந்துகொள்ளுங்கள்' என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள். மேலும், முக்குலத்தோர் சமுதாயத்தையே கள்ளர், மறவர், அகமுடையார் என தனித்தனியே பிரித்துவிடும் திட்டத்தையும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆக, தேசியத் தலைவரான தேவரை எப்படி ஒரு குறிப்பிட்ட சாதி வட்டத்துக்குள் அன்றைய காங்கிரஸ் கட்சி கொண்டுவந்ததோ அதே வேலையைத்தான் இன்றைக்கு இவர்களும் செய்துவருகின்றனர்.''

கருணாஸ்

''வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை விமர்சிக்கிறீர்களே.... சீர் மரபினர் என்ற வகையில், மறவர்களும் இந்த உள் இடஒதுக்கீட்டில் பயன்பெறுகிறார்கள்தானே?''

''68 சாதிகளைக்கொண்ட சீர்மரபினருக்கு வெறும் 7.5%., ஆனால் வன்னியர் என்ற ஒரு சாதிக்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடா? சாதி வாரி கணக்கெடுப்பு யார், எப்போது எடுத்தார்கள்? யாரிடம் இருக்கிறது அதுகுறித்த கணக்கு? யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்!

ஜெயலலிதாவுக்கு காசு வாங்கிக்கொடுக்கிற மீடியேட்டர் வேலையைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்துகொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டியவர் அன்புமணி ராமதாஸ். ஆனால், இன்றைக்கு அவரைக் கூப்பிட்டு உட்காரவைத்துத்தான் சீட் ஒதுக்கீடு செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆக, கட்சியை உருவாக்கிக்கொடுத்த ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை; ஆட்சியை உருவாக்கிக்கொடுத்த சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை! இவர்களையே நம்பி வந்த எங்களைப் போன்றவர்களையும் நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palanisamy-left-us-stranded-karunas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக