மயிலாப்பூர் என்றாலே கபாலீஸ்வரரும் கற்பகாம்பிகையும் தானே நினைவுக்கு வரும். இன்று 26-3-2021 அறுபத்தி மூவர் திருவிழா நடைபெறுகிறது. இதனால் அங்கு செல்பவர்கள் கபாலீஸ்வரர் கோயில் மட்டுமின்றி மயிலையில் அமைந்துள்ள மற்ற 8 சிவாலயங்கள், மூன்று விஷ்ணு ஆலயங்கள், அருள்மிகு முண்டக கண்ணியம்மன் (ராகு ஸ்தலம்), அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்), தர்மராஜா பாண்டவர்கள் ஆலயம், அங்காள அம்மன் ஆலயம், நவசக்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களுக்கும் சென்று வரலாம். இதோ ஒரு சிறிய வழிகாட்டுதல்...
வெள்ளீஸ்வரர் ஆலயம்: நவகிரகங்களில் சுக்கிரனுக்கான தலம் இது. சுக்கிரன் எனும் வெள்ளி அதாவது சுக்ராச்சாரியார் இந்த ஆலய ஈசனை வழிபட்டு, இழந்துபோன தன் கண் பார்வையைப் பெற்றார் என்கிறது தல வரலாறு. ஈசன் வெள்ளீஸ்வரன்; இறைவி காமாட்சி.
இங்கு வெள்ளிக்கிழமை அன்று செந்தாமரை மலர்கொண்டு ஈசனை வழிபட்டால் கண் தொடர்பான பிரச்னைகள் நீங்கும், செல்வ வளம் சேரும். இங்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் சகல அச்சங்களில் இருந்தும் மீளலாம்.
விருபாட்சீஸ்வரர் ஆலயம்: திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த பூம்பாவை வசித்த தலமே இன்று விருபாட்சீஸ்வரர் ஆலயம் ஆனது என்பர். அலை பாய்ந்து கொண்டிருக்கும் ஜீவன்களின் ஆன்மாவை நிலைப்படுத்தும் மூன்றாவது திருக்கண்ணை கொண்டவர் விருபாட்சீஸ்வரர். இறைவி விசாலாட்சி.
இங்கு சுவாமிக்கு வியாழன் அன்று நெய் விளக்கிட்டு மல்லிகை மலர் சார்த்தி வழிபட்டால் நீடித்த வாழ்வு பெறலாம், இக்கட்டான நிலையில் இருப்பவரும் குணமடைந்து மீண்டும் சுக வாழ்வு அடையலாம் என்கிறார்கள்.
காரணீஸ்வரர் ஆலயம்: சகல ஜீவன்களுக்கும் காரணமாக விளங்கக்கூடிய ஈசன் என்பதால் காரணீஸ்வரர் என்றானார். இங்குள்ள ஈசன், திருக்கடையூர், காலஹஸ்தி போன்று சதுர வடிவ லிங்கத் திருமேனியராக எழுந்தருளி உள்ளார். அதனால் இது சித்தர்கள் ஸ்தாபித்த லிங்கம் எனப்படுகிறது. இறைவி சொர்ணலதாம்பிகை.
இங்கு புதன்கிழமை அன்று விளக்கேற்றி வில்வம் சார்த்தி வழிபட்டால் அமைதி இல்லாத மனம் அமைதி பெரும். நோய் நொடிகள் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.
தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம்: மாசிமாத நீராட்டலில் மயிலையின் ஏழு ஈச மூர்த்தங்களில் தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இவரே தீர்த்தபாலீஸ்வரர் என்ற பெயர் கொண்டார். இறைவி திரிபுரசுந்தரி. அகத்தியர் இங்கு வந்து வணங்கி நலம் பெற்றாராம்.
இங்கு திங்கள்கிழமை அன்று விளக்கேற்றி கதம்ப மலர்கள் சார்த்தி வணங்கினால் கர்மவினைகள் நீங்கும். முக்தியும் ஞானமும் கிட்டும் என்பது நம்பிக்கை.
வாலீஸ்வரர் ஆலயம்: வாலி வணங்கி வழிபட்டதால் இங்கு சுவாமி வாலீஸ்வரர் என்றானார். அம்பிகை பெரிய நாயகி. இங்குள்ள பஞ்சலிங்கத்திற்கு செவ்வாய்க்கிழமை அன்று மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்வது சிறப்பானது. இதனால் வேண்டிய வரங்கள் கிட்டும் என்கிறார்கள்.
மேலும் இங்குள்ள பிரகார சுற்றுச் சுவரில் பல்லியின் உருவ புடைப்புச் சிற்பத்துக்கு மஞ்சள் சந்தனம் பூசி வழிபடுகின்றனர். இதனால் சகல தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள்.
மல்லீஸ்வரர் ஆலயம்: மல்லிகை வனத்தில், ஈசன் எழுந்தருளியிருந்ததால் மல்லீஸ்வரர் என்றானார். பிப்ரவரி மாதக் கடைசியில் தொடர்ச்சியாக 15 நாள்கள், இந்த ஈசனின் மீது சூரிய கதிர்கள் விழுந்து அருள் செய்வது சிறப்பானது. இறைவி மரகதாம்பாள்.
இங்கு வெள்ளிக்கிழமை மல்லிகை மலர்கள் சார்த்தி விளக்கேற்றி வணங்கினால் கடன் பிரச்னைகள் நீங்கி, வியாபார விருத்தி உண்டாகும். நீங்காத புகழும், பதவி உயர்வும் கிட்டும் என்கிறார்கள்.
மேற்கண்ட சிவாலயங்கள் மட்டுமின்றி அருள்மிகு வீரபத்திரர் கோயிலும் மயிலையில் உள்ளது. தட்சனை சம்ஹாரம் செய்த வீரபத்திரர் இங்கு வந்து வெற்றிலைக் கொடியுடன் அமர்ந்து சாந்தமானார் என்கிறது தலவரலாறு. தாட்சயணியின் வேண்டுதலை ஏற்று தட்சனை மன்னித்து இங்கு தாட்சாயணியை மணந்து கொண்டார். அதனால் இங்குள்ள வீரபத்திரர் கல்யாண வீரபத்திரர் என்றும், அம்பிகை அபயாம்பாள் என்றும் வணக்கப்படுகிறார்கள்.
இங்கு வந்து வெற்றிலை மாலை சார்த்தி வணங்கினால் திருமணம் வரம் கிட்டும். மேலும் எதிரிகள், வழக்குகள் போன்ற தொல்லையில் இருந்து நீங்கலாம் எனப்படுகிறது.
அதுபோலவே அப்பர் சுவாமி என்ற பெரியவரின் நினைவாக எழுப்பப்பட்ட அப்பர் சுவாமி கோயிலும் இங்கு பிரசித்தி பெற்றது. இங்கு மூலவர் விஸ்வநாதர் என்றும் அம்பாள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் பாலித்து வருகின்றார்கள். இங்கு திங்கள்கிழமைகளில் வில்வம் சார்த்தி, விலக்கேற்றி வழிபட சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வல்லவர்களாக விளங்குவர் என்பது நம்பிக்கை.
பங்குனி உற்சவ விழா நடைபெறும் இந்த வேளையில் அங்கு செல்பவர்கள் மேற்கண்ட இந்த ஆலயங்களையும் தரிசித்து அருள் பெற்று வாருங்கள். நலமே உண்டாகும்.
source https://www.vikatan.com/spiritual/temples/famous-and-iconic-temples-to-visit-in-mylapore-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக