கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்துக்காக வருகிறார். இந்த நிலையில் நேற்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் திடீரென குளச்சல் தொகுதி பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். பின்னர் நாளை நாகர்கோவிலுக்கு வருகைதரும் முன்னாள் மத்திய அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குளச்சல் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ், "மாநில தலைவர் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் திடீரென அழைத்து நாளை குளச்சல் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்களை சந்திக்கவேண்டும் எனக் கூறினார். அவர் அவசரமாக சந்திக்கிறார் என்றாலே ஒரு அர்த்தம் இருக்கு அப்பிடித்தானே. எனவே குளச்சல் சட்டசபை தொகுதி நமக்குதான் சந்தேகமே வேண்டாம்" என்றார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தனியாக நின்ற பா.ஜ.க கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க இரண்டாம் இடம் பிடித்தது. எனவே இந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை பா.ஜ.க கேட்டதாகவும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படுவதால் இரண்டுதொகுதிகள் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். அதில் குளச்சல் தொகுதி உறுதியாக கிடைக்கும் என்றும், நாகர்கோவில் அல்லது விளவங்கோடு தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.
கிள்ளியூர் தொகுதி கூட்டணி கட்சியான த.மா.க-வுக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும், மற்ற மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குளச்சல் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட குமரி பா.ரமேஷ் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டால் கடந்தமுறை போட்டியிட்ட மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி மற்றும் மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்க்க வாய்ப்பு உள்ளது. விளவங்கோடு தொகுதி ஒதுக்கப்பட்டால் கடந்த முறை போட்டியிட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ் அல்லது ஜெயசீலனுக்கு சீட் வழங்க வாய்ப்பு உள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/which-are-the-constituency-will-given-for-bjp-in-kumari-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக