கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் முழுமையாகத் திறக்கவில்லை. கிராமப் பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர்கள் நண்பர்களுடன் விளையாடி பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் விளையாடும் சிறுவர், சிறுமியரை பெற்றோர் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
பாளையங்கோட்டையை அடுத்த முத்தூர் காமராஜர் நகர் பகுதியில் வசிப்பவர், முத்தையா. விவசாய கூலி வேலை செய்து வருகிறார். அவரது மகன் சதீஷ். 12 வயதான சிறுவன் சதீஷ், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
Also Read: `விளையாட்டு வினையானது' - தோழிகள் கண்முன்னே பறிபோன சிறுமியின் உயிர்
கொரோனா ஊரடங்கு காரணமாக சிறுவன் சதீஷூக்கு வகுப்புகள் நடைபெறவில்லை. பெற்றோர் வயல் வேலைக்குச் சென்று விடுவதால், சக நண்பர்களுடன் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
வயல் வெளியில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடியதுடன், வாய்க்கால் தண்ணீரில் குளித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அப்போது அங்குள்ள வயலில் பூச்சிகள் தாக்குதல் அதிகம் இருந்ததால் அவற்றைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து வாங்கி வைத்திருந்துள்ளனர்.
அது விஷம் என்பது தெரியாத சிறுவன் சதீஷ், அதைக் குடிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அப்போது உடனிருந்த நண்பர்கள் அவனைத் தடுத்துள்ளனர். ஆனாலும், விளையாட்டாக நினைத்த சிறுவன் சதீஷ், அந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளார்.
விஷம் அருந்திய சிறுவன் சதீஷ், அங்கேயே வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததால் அச்சம் அடைந்த நண்பர்கள், ஊருக்குள் ஓடிச் சென்று நடந்தவற்றைப் பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு சென்ற ஊர்க்காரர்கள், சிறுவனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் சதீஷ் உயிரிழந்தார். விளையாட்டாக விஷம் அருந்தி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெற்றோரையும் உறவினர்களையும் வேதனை அடைய வைத்துள்ளது. இதனிடையே, குழந்தைகளை பெற்றோர் கூடுதல் கவனத்துடன் கண்காணிப்பதுடன், எது நல்லது எது கெட்டது என்பது குறித்த அறிவைப் போதிக்க வேண்டும். அத்துடன், பூச்சி கொல்லி மருந்துகளை சிறுவர்கள் எளிதில் எடுக்கும் இடத்தில் வைக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
source https://www.vikatan.com/news/general-news/school-boy-consumed-poison-died-in-nellai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக