Ad

வெள்ளி, 12 மார்ச், 2021

சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?- சிந்திக்கவைக்கும் இளம் வாக்காளர்கள்

கட்சிகள், கொள்கைகள், திட்டங்களைக் கடந்து மக்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களுக்காக பணியாற்றுபவர்கள் தொகுதி வேட்பாளர்கள். அரசியலின் ஆழம் காணாமல் முதல் முறை வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்கள், களத்தில் இருக்கும் வேட்பாளர்களை மையப்படுத்தி தங்கள் வாக்கைச் செலுத்துவார்களா, அல்லது என்ன அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்று தெரிந்து கொள்ள இளைஞர்களிடம் பேசினோம். அவர்கள் கூறிய பதில்கள் இங்கே.

ஃபயாஸ்
ஃபயாஸ் - திருச்செந்தூர், கல்லூரி மாணவர்

``வேட்பாளர்கள் யாராக இருந்தாலும், எனக்குப் பிடித்த கட்சிக்குத் தான் வாக்களிப்பேன். நான் வாக்களிக்கும் கட்சிக்கு, சில கொள்கைகள் இருக்கும். அதனடிப்படையில் தான் நான் கட்சியைத் தேர்வு செய்வேன். கட்சி, என்னுடைய தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்துகிறதோ அவருக்குத் தான் வாக்களிப்பேன். கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர், நிச்சயமாகக் கட்சியின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டுத் தான் நடப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தலைமை சரியாக இருந்தால் வேட்பாளரும் சரியாகத் தான் இருப்பார். அதனால், நான் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, கட்சிக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.”

ரேவதி - கல்லூரி மாணவி, மதுரை

``வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன். எனது பெற்றோர் தங்கள் தொகுதிக்கு எந்த வேட்பாளர் வந்தால் தமது கோரிக்கையை நிறைவேற்றுவார் என்பதை அறிந்து தான் வாக்களிப்பார்கள். என்னையும் அப்படித்தான் வாக்களிக்க அறிவுறுத்தி இருக்கின்றனர். எனவே நானும் வேட்பாளரை அறிந்து வாக்களிக்க நினைக்கின்றேன். சுயேச்சையாக நிற்பவர்கள் எந்த தகுதியுடன் போட்டியிடுகிறார்கள் என்பதைப் பார்த்து முடிவு செய்வேன். அதிகபட்சமாக யார் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வார்களோ தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகுந்த கொள்கைகள் உடையவர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிப்பேன்.”

ரேவதி
ஏனோஸ் வின்ஸ்டன் - கல்லூரி மாணவர், தூத்துக்குடி

``மக்கள் நலன் மீது அக்கறையோடு இருக்கும் கட்சிக்குத் தான் வாக்களிப்பேன். அதே சமயம், கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் தொகுதி வேட்பாளரின் செயல்பாடுகள், வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றையும் ஆராய்ந்து அறிந்து கொள்வேன். எனக்குப் பிடித்த கட்சியின் சார்பில் நிறுத்தப்படும், தொகுதி வேட்பாளர்களின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், அவருக்கு வாக்களிக்க மாட்டேன். அதற்குப் பதிலாக, தொகுதிக்கு பரிட்சயமான, தொகுதி மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக வந்து உதவக்கூடிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பேன்.”

கிறிஸ்டி - போட்டி தேர்வு மாணவி, புதுக்கோட்டை

``காலத்தைப் பொருத்து மாறுபடலாம். ஆனால், வேட்பாளர்கள் யார் என்பதை பார்த்தே வாக்களிப்பேன். சுயேச்சை வேட்பாளராக நிற்பவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள். அரசியலில் குறையை மட்டுமே சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு மத்தியில் நாம் ஏதாவது செய்து பார்ப்போம் என சுயேச்சையாக நிற்பவர்களை பாராட்ட வேண்டும். ஆனால், ஆளும் கட்சி எதிர்க் கட்சியாவதும். எதிர்க் கட்சி ஆளும் கட்சியாவதும். ஆளும் கட்சியிலிருந்து எதிர்க் கட்சிக்கு தாவுவதும், எதிர்க் கட்சியிலிருந்து திரும்பவும் ஆளும் கட்சிக்கு தாவுவதும் என இருக்கும் தற்போதைய அரசியல் சூழலில், சுயேச்சைகள் போட்டியிட்டும் பயனில்லை என்றே நினைக்கிறேன். தற்போது இருக்கும் பரிட்சயமான கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பதை பொருத்தே நான் வாக்களிப்பேன்.

ஏனோஸ் வின்ஸ்டன்
புரோ சேகர் - கல்லூரி மாணவர், திருநெல்வேலி

``தொகுதி மக்களுடைய அடிப்படை பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய வேட்பாளர்களுக்குத் தான் வாக்களிப்பேன். சுயேச்சை வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஏனென்றால், தொகுதி மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், சுயேச்சை வேட்பாளர் தான் களத்தில் நிற்பார். எனவே, என்னுடைய ஓட்டு சுயேச்சை வேட்பாளருக்குத் தான். என்னுடைய தாத்தா, பாட்டி குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு வாக்களித்து வந்தனர். இளைஞர்களாகிய நாங்கள், வேட்பாளர்களின் செயல்பாடுகளைப் பொருத்துத் தான், ஓட்டுப் போடுவோம்.”

ரூப சுந்தரி - கல்லூரி மாணவி, மதுரை

``நான் முதலில் கட்சியின் கொள்கைகளைப் படித்து அது நாட்டின் உயர்வுக்கும் நலனுக்கும் உதவுமா என்று பார்ப்பேன். பின், அக்கட்சியின் வேட்பாளர்களைப் பார்த்து அவர் எவ்வகையில் செயல்பட்டிருக்கிறார் என்பதையும் ஆராய்ந்து முதல் கட்டமாக என்னுடைய முடிவை எடுப்பேன். பின் சுயேச்சையாக நிற்பவரது கொள்கைகளையும், அவர் இதற்கு முன்பு மக்களுக்கு எவ்வாறு பணிபுரிந்தார் என்பதையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துத் தெளிவுடன் என்னுடைய வாக்கை அளிப்பேன். நான் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் மக்களுக்கு நலப் பணிகளைச் செய்யத் தகுதி உடையவரா என்பதை மட்டுமே பார்ப்பேன். அவர் மிகப்பெரிய ஸ்தாபனங்களில் இருந்து வரவேண்டிய அவசியமில்லை.”

ரூப சுந்தரி
கயல் - கல்லூரி மாணவி, சேலம்

``வேட்பாளர்கள் எங்கள் தொகுதி பற்றி, மக்களைப் பற்றி நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். நம் தேவைகளை நிறைவேற்றுவதில் முதல் ஆளாக நிற்க வேண்டியது அவர்களே. எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாக நிற்கும் வேட்பாளர்களைப் பிடித்திருந்தால் அவர்களுக்குத் தான் முன்னுரிமை. ஆனால் வேட்பாளர் யார்? அவருடைய கருத்துக்கள், கொள்கைகள், பின்புலம் ஆகியவற்றை அறிந்து வாக்களிப்பேன்.

கயல்
சாம் - கல்லூரி மாணவர், விழுப்புரம்

``கொள்கைகளுக்குத் தான் முக்கியத்துவம். கட்சிகளின் கொள்கைகளை ஆராய்ந்து வாக்களிப்பேன். ஏனென்றால் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்கள் கட்சிகளின் கொள்கைக்கு ஏற்றவாறு தான் செயல்படுவார்கள். சுயேச்சை வேட்பாளர்கள் ஒருவேளை நல்ல கொள்கைகளைக் கொண்டிருந்தால் நிச்சயம் ஆதரிப்பேன். நான் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் தேர்தல் வாக்குறுதிகளும் முக்கிய பங்காற்றும்.”

சாம்
பெ. சுவாதி - கல்லூரி மாணவி, துறையூர்

``எல்லோருமே இது அல்லது அது என இரண்டு பிராண்டை மட்டும் தான் பார்க்கிறார்கள். மற்ற கட்சியினரின் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது என்று கூறினாலும், இரண்டு கட்சிகளில் ஒன்று தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி,மீண்டும் அவர்களுக்கே வாக்களிக்கின்றனர். அதனால், நான் புதிதாக களம் காண்பவர்களுக்கு வாக்களித்து சோதித்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். எனவே என் ஓட்டுச் சுயேச்சை வேட்பாளர்களுக்குத் தான்.”

பெ. சுவாதி

Also Read: Election: `ஓட்டுக்கு பணம் பெறுவது சரியா?’ - என்ன சொல்கிறார்கள் முதன்முறை வாக்காளர்கள்?

வேட்பாளர்களின் பெயர்களைக் கூட தெரிந்து கொள்ளாமல் ... "எங்க குடும்பமே இந்த கட்சி தான்" என்று சொல்லித் திரிந்து, சின்னங்களைப் பச்சை குத்திக்கொண்டு, அதே சின்னத்துக்கு வாக்கையும் செலுத்தி வந்த காலம் மாறிவிட்டது. தற்போது கட்சிக் கொள்கைகளுடன் சேர்ந்து வேட்பாளர்களையும் படிக்கத் தொடங்கி உள்ளனர் இளைஞர்கள். நாம் தேர்ந்தெடுக்கும் நபர் தொகுதிக்கு என்ன செய்வார். இதுவரை ஏதாவது செய்துள்ளாரா, என ஆராயத் தொடங்கியுள்ளனர். நான் இந்த கட்சிக்கு தான் வாக்களிப்பேன் என்று தீர்கமாக இருக்கின்றனர். குடும்பத்தினர் மாற்று கருத்து சொன்னாலும், தான் எடுத்த முடிவு சரியானது எனக் கருதும் இளைஞர்கள், வேட்பாளர்கள் என்ன கொள்கைகளைக் கொண்டுள்ளனர் என்பதனை பெற்றோருக்கு எடுத்துரைத்து அவர்களையும் சிந்திக்க வைக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/first-time-voters-speak-about-election-candidates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக