அன்னாஹசாரேவில் ஆரம்பித்து அர்ஜூனமூர்த்தி வரை அரசியலில் புதிதாக கால் பதிக்கும் அத்தனைபேரும் 'ஊழல் எதிர்ப்பு' என்ற ஒற்றைக் கொள்கையோடு களம் இறங்கிவிடுகிறார்கள். சமூக நீதி, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பொதுவுடமை தத்துவம் என எந்த சித்தாந்தங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், பாமரர்களை எளிய முறையில் கவர்ந்திழுக்க 'ஊழல் ஒழிப்பு' வாசகம் வசதியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் பரபரக்கும் அரசியல் சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் அண்மையில் இணைந்திருக்கும் மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையாவும் '50 ஆண்டுகால திராவிட கட்சிகளை ஒழித்துக்கட்டி, ஊழலை அகற்றுவோம்' என்று அச்சுப்பிசகாமல் முழங்க ஆரம்பித்திருக்கிறார். அவரைச் சந்தித்தோம்....
''திராவிடக் கட்சிகள் ஊழல் செய்துவிட்டன என்று சொல்கிற புதிய கட்சிகள் அனைத்தும் தி.மு.க-வை மட்டுமே குறிவைத்து தாக்கிவருவதன் பின்னணி என்ன?''
''ஊழல் என்று வரும்போது, தி.மு.க., அ.தி.மு.க என இந்த 2 கட்சிகளுமே ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆட்சியில் இருக்கும்போது எதிர்க்கட்சி மீது வழக்கு போடுவது, அதன்பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என இந்த 2 கட்சிகளுமே கூட்டுக்களவாணிகள்தான். இந்த 2 கட்சியிலுள்ள தலைவர்களுமே சாராய ஆலை நடத்தி வருகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் இவர்களது ஆலையிலிருந்து தொடர்ந்து சாராய கொள்முதலும் தங்குதடையின்றி நடந்துவருகிறதுதானே!
ஆக, இவர்கள் இருவரிடையே ஒரெயொரு வித்தியாசம்தான்... காதில் உள்ள கடுக்கனை கழட்டிவிட்டுப் போவான் அ.தி.மு.க-காரன் என்றால், தி.மு.க-காரனோ காதையே அறுத்துக்கொண்டு போய்விடுவான்... அவ்வளவுதான்!''
''10 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவருகிற அ.தி.மு.க-வையும் எதிர்க்கட்சியாக இருந்துவருகிற தி.மு.க-வையும் ஒரே தளத்தில் நிறுத்தி விமர்சிப்பது சரியானதுதானா?''
''எடப்பாடி பழனிசாமியும் ஊழலில் குறைந்தவரா என்ன? 2 திராவிடக் கட்சிகளுமே ஊழலில் வேறுபட்டவர்கள் அல்ல. எனவே இந்த 2 கட்சிகளுமே அகற்றப்பட வேண்டும். ஜெ., மறைவுக்குப் பிறகு எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு தொடர்ந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்யவேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விடவும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களே அதிகம் விரும்பினர். காரணம், அந்தளவு எதிர்க்கட்சியினரையும் 'சிறப்பாக கவனித்து'க் கொண்டவர் எடப்பாடி!
டெல்லி அரசியலில், மோடி முதல் முறையாக ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது, கடந்த காலத்தில் தி.மு.க செய்திருந்த 2ஜி ஊழல்! அதாவது, நெறி சார்ந்து ஆட்சி நடத்திய மன்மோகன் சிங்கைத் தோற்கடிக்க வைத்ததே, தி.மு.க-வின் ஆ.ராசா செய்த 2 ஜி ஊழல்தான்! இதுகுறித்த வழக்கு விசாரணையில் ஏற்கெனவே ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் ஒன்றரை ஆண்டு சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் 2ஜி குறித்த வழக்கு மேல்முறையீட்டு வழக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே சொன்னதுபோல், காதையே அறுத்துக்கொண்டு போகிற தி.மு.க-காரன் மேல் கொஞ்சம் கூடுதலாக கோபம் வருகிறது... அவ்வளவுதான்!''
''2 ஜி வழக்கு விசாரணையின் குற்றச்சாட்டுகளுக்குத்தான் ஆதாரம் இல்லை என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதே?''
'' 'குற்றச்சாட்டு சரியாக மெய்ப்பிக்கப்படவில்லை; சான்றாவணங்கள் சரியாக வைக்கப்படவில்லை' என்றுதான் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் சொல்லப்பட்டதே தவிர, ஆ.ராசா இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. கடந்தகாலத்தில், எப்படி ஒரு நிலையில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு, மற்றொரு நிலையில் தண்டிக்கப்பட்டாரோ அதுபோன்ற நிலைதான் இது!''
''கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சித் திட்டமும் ஏற்படவில்லை என்கிறீர்களா?''
''அப்படிச் சொல்லவில்லை. நாம் வரியாக செலுத்துகிற 100 விழுக்காட்டுத் தொகையில் வெறும் 60 விழுக்காடு தொகைக்கான பலன் மட்டுமே மக்களுக்கு திரும்பக் கிடைக்கிறது என்று சொல்கிறேன். வாய்க்கால் வெட்டினாலும், அணை கட்டினாலும் அல்லது சாலை போட்டாலும் இதுதான் நிலைமை! 6 ஆயிரம் ரூபாயை மட்டுமே அரசுக்கு வருமானமாக தரும் மணல், மக்களுக்கு 40 ஆயிரம் ரூபாயில் விற்கப்படுகிறது என்றால், இந்த 2 கட்சிகளின் ஆட்சிகளும் ஒழிக்கப்பட்டு தூய அரசியல் வரவேண்டாமா?''
Also Read: குமரி: பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் எவை... யாருக்கு சீட்?
''ஊழலை மட்டுமே முதன்மைப்படுத்தி, சமூக நீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட முற்போக்கு அரசியலை பின்னுக்குத் தள்ளுவது நியாயம்தானா?''
''வாஜ்பாயோடு சேர்ந்த தி.மு.க-வும் மோடியோடு சேர்ந்த அ.தி.மு.க-வும். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. எனவே, இவர்கள் இருவருக்குமே சிறுபான்மையினத்தவர்கள் வாக்களிக்கக்கூடாது. இந்த 2 கட்சிகளுமே தமிழ்நாட்டு உரிமைகளை மத்திய அரசிடம் அடகுவைப்பவைதான். அதில், அ.தி.மு.க அரசின் அடிமைத்தனம் ஊருக்கே தெரிந்த விஷயம்!
வாஜ்பாயோடு அன்றைக்குத் தி.மு.க கூட்டணி சேருகிற அளவுக்கு நாட்டில் என்ன சிக்கல் ஏற்பட்டது? ஈழத்தில் தமிழர்களுக்கு சிக்கல் வருகிறபோது, 'நாங்கள் ஆட்சியை விட்டு வெளியேறுகிறோம்' என்று தி.மு.க கூறியிருந்தால், சிங்களவன் தமிழனை அழித்திருப்பானா? ஆக, வாஜ்பாயோடு கூட்டணி சேர்ந்த தி.மு.க-வுக்கு நாளையே அமைச்சர் பதவி தருகிறேன் என்று மோடி சொன்னால், பா.ஜ.க-வோடு கூட்டணி சேரவும் தயங்காது! தி.மு.க-வின் இயல்பு தெரிந்து சொல்கிறேன்... இப்போதும் மோடிதான் தி.மு.க-வைத் தள்ளி வைத்திருக்கிறாரே தவிர... தி.மு.க., மோடியைத் தள்ளி வைக்கவில்லை!''
''தி.மு.க மீது இன்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிற பழ.கருப்பையாவும் கடந்த காலங்களில் இதே கட்சியில் 2 முறை பயணித்தவர்தானே?''
''உண்மைதான். 'அடைமழை பெய்தபோது, நல்ல வீடு பார்த்து ஒதுங்கமுடியாமல், ஏதோ ஒரு வீட்டில் ஒதுங்கிவிட்டாய். இப்போது மழை நின்றுவிட்டது உரிய வீட்டுக்கு வா. என் காலம் உள்ள வரையில் நீ தி.மு.க-வில் இருக்கவேண்டும்; திராவிடத்தை கட்டிக் காக்கவேண்டும்' என்று கலைஞர் என்னை அழைத்தார்.' அதனால், 2-வது முறையாக நானும் தி.மு.க-வில் இணைந்தேன்! ஆனால், அப்படி நான் தி.மு.க-வுக்குள் சென்ற 4-வது நாளே உடல்நலம் குன்றி மருத்துவமனைக்குப் போய்விட்டார் கலைஞர்.
நான் அடிப்படையில், திராவிடன் - தமிழன். தமிழ் மீது பெரும்பற்று கொண்ட, சமய சார்பின்மை கொள்கையுடையவன். ஆனால், 'தி.மு.க-விலும் 90% இந்துக்கள்தான் இருக்கின்றனர்' என்று திராவிட உணர்வே இல்லாமல் சொல்லிவருகிற ஸ்டாலினோடு என்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்துதான் நானாகவே கட்சியிலிருந்து வெளியேறினேன். மற்றபடி தி.மு.க-விலிருந்து எனக்கு எந்தவித நெருக்கடியும் தரப்படவில்லை.''
Also Read: `மோடியால் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது!’ - சீதாராம் யெச்சூரி
''உங்கள் கொள்கைகளை ம.நீ. ம கட்சியின் வழியேதான் வென்றெடுக்கமுடியும் என்று நம்பி இணைந்திருக்கிறீர்களா?''
''இல்லையில்லை... நேர்மைக்காக ஒற்றை ஆளாக உறுதியாக நிற்கிறார் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டோமே என்பதையெல்லாம் அவர் நினைக்கவில்லை. நாம் எடுத்துக்கொண்ட கொள்கையை கொண்டு செலுத்துவோம் என்று மட்டுமே எண்ணுகிறார்.
இப்படியொரு சூழலில், 'வாருங்கள்... ஒன்றுகூடி இந்தத் தேரை இழுக்கலாம்' என்று கமல்ஹாசன் என்னை அன்பு பாராட்டி அழைத்தார். எனக்கும் வெற்றி, தோல்வி பற்றிய கவலை எல்லாம் கிடையாது; செய்கிற காரியம் நல்லதாக இருக்கவேண்டும் என்றே நினைப்பவன்!''
source https://www.vikatan.com/government-and-politics/policies/both-dmk-admk-are-corrupt-parties-pazha-karuppaiah-interview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக