தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரண்டு இடங்களில் கமல் வந்த வாகனத்தினை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். `நேர்மையானவரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அதிகாரிகள் இது போன்ற செயலினை தொடர்ந்து செய்வதாக’ நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தஞ்சாவூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக தனி ஹெலிஹாப்டர் மூலம் பட்டுக்கோட்டை வந்திறங்கினார். பின்னர் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான டாக்டர் சதாசிவம் உள்ளிட்டவரகளை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த பின்னர் மதியத்திற்கு மேல் ஹெலிஹாப்டர் மூலம் தஞ்சை வந்தடைந்தார்.
இதையடுத்து தனியார் ஹோட்டல் ஒன்றில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தவர், மாலை தஞ்சாவூர் ரயிலடியில் பிரசாரம் மேற்கொண்டார். ``இப்போதைக்கு அரசியல் நிலமை மோசமாக உள்ளது. அதனால் தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல, உங்கள் மரியாதை. வாக்கு விற்பனைக்கு அல்ல, ஆட்சியாளர்கள் செய்து கொடுக்கும் வசதிகள் எல்லாம் அவர்கள் செய்யும் தர்மமும் அல்ல.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாகும் வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை செய்வார்கள். அப்படி செய்யவில்லை என்றால் நானே அவர்களை நீக்கி விடுவேன்” என பேசி வாக்குகளை சேகரித்தார். பின்னர் கமல் சென்ற வேனை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். தஞ்சாவூர் வந்திறங்கிய போதே சோதனை செய்த பிறகும், மீண்டும் மீண்டும் சோதனையிட்டது, அக்கட்சி நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்தது.
இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் தரும.சரவணன் என்பவரிடம் பேசினோம், ``தலைவர் கமல்ஹாசன் ஹெலிபேடில் வந்து இறங்குவதற்கு அனுமதி கொடுப்பதில் தொடங்கி பிரசாரம் செய்கிர வரை அதிகாரிகள் தரப்பில் பல அழுத்தங்களை கொடுத்தனர். ஒவ்வொரு ஊரிலுல் ஹெலிஹாப்டர் இறங்குவதற்கு ஊருக்கு வெளிபகுதியிலேயே அனுமதி கொடுக்கின்றனர்.
திருத்துறைப்பூண்டியில் வேட்பாளரின் கொல்லையில் ஹெலிபேடினை இறக்கி பிரசாரத்திற்கு சென்றோம். தஞ்சாவூருக்கு ஹெலிஹாப்டரில் வந்து இறங்கிய உடனேயே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து விட்டனர். பின்னர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட பிறகு பிரசாரத்திற்கு வந்தார். அப்போது எங்களை தொடர்பு கொண்ட அதிகாரிகள் வாகனத்தை மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றனர்.
இந்த தகவலை தலைவர் கமல்கிட்ட சொன்னோம். அதன் பண்ணீட்டாங்களே அப்புறம் ஏன் மறுபடியும் என கேட்டதுடன் சில விநாடிகள் யோசித்தவர், பரவாயில்லை மடியில் கனம் இல்லை நமக்கு எந்த பயமும் இல்லை செய்யட்டும் என்றார். ரயிலடியில் பிரசாரம் செய்து விட்டு திருச்சிக்கு கிளம்பியவரை வேனை மறித்து சோதனை செய்தனர். அப்போதும் அரசு தன் கடமையை செய்யட்டும் என கூறி முழு ஒத்துழைப்பு கொடுத்தார் தலைவர்.
வேனுக்குள் ஐந்து ரூபாய் பிஸ்ட்கட் பாக்கெட் அஞ்சும், இரண்டு கடலை மிட்டாய் பாக்கெட்டுகளும் இருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். குடிக்க தண்ணீர் பாட்டில் கூட இல்லை. சோதனை முடிந்த பிறகு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், `சாரி சார்’ என கூற கமலஹாசன், `இட்ஸ் ஓகே, நோ பிராபளம்’ என புன்னகைத்தார். ஊரை அடிச்சு உலையில் போட்ட ஆட்சியாளர்கள் ஹாயாக சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் காரை நிறுத்தி சோதனை செய்வதில்லை. ஆனால் நான் நேர்மையானவன் என்னால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களும் நேர்மையானவர்கள் சேவை செய்வதற்காவே அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். சம்பாதிப்பதற்காக வரவில்லை மக்களுக்கு நேர்மையான முறையில் சேவை செய்ய வேண்டியது என் கடமை என தலைவர் கமலஹாசன் கூறி வருவதுடன் நேர்மையாகவும், கண்ணியத்துடனும் நடந்து வருகிறார்.
அவருடைய நேர்மையை களங்கப்படுத்தவே, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிலரின் தூண்டுதலில் பேரில் ஒரே இடத்தில் இரண்டு முறை சோதனை செய்கின்றனர். இவற்றை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அழுத்தங்களை எல்லாம் தாண்டி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறப் போவது உறுதி” எனத் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/politics/kamalhaasan-campaign-van-was-two-times-checked-by-the-election-flying-squad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக