Ad

சனி, 13 மார்ச், 2021

நெல்லை: தேர்தலுக்காக மூடப்பட்ட காமராஜர் சிலை! - ஹரி நாடார் கோரிக்கையால் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்காக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தி வருகிறது.

தேர்தல் அதிகாரியிடம் மனு அளிப்பு

அதன்படி, அரசியல் கட்சியினர் பொது இடங்களில் எழுதிய சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அரசியல் தலைவர்களின் படங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முக்கிய தலைவர்களின் சிலைகளையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறைத்துள்ளனர்.

நெல்லையில் செல்லப்பாண்டியன் சிலை மற்றும் இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோரின் சிலைகள் மூடப்பட்டுள்ளன. ரயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலையையும் அட்டையை வைத்து மறைத்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார், காமராஜர் சிலையைத் திறக்க வேண்டும் எனத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார்.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

பாளையங்கோட்டை தேர்தல் நடத்தும் அதிகாரியான கண்ணன், நெல்லை தேர்தல் நடத்தும் அதிகாரியான சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் அவர் மனு அளித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதிகாரிகளிடம் பேசிய ஹரி நாடார், “காமராஜர் தேசியத் தலைவர். அவரது சிலையை மூடி வைத்திருப்பது தவறானது. பிற சமுதாயத் தலைவர்களின் சிலைகள் திறந்திருக்கும்போது, காமராஜர் சிலையை மட்டும் மூடியிருப்பதால் எங்கள் கட்சியினர் பலரும் தொடர்ந்து என்னிடம் இது பற்றிப் பேசுகிறார்கள்.

திறக்கப்பட்ட காமராஜர் சிலை

அதனால் 15-ம் தேதிக்குள் காமராஜர் சிலையைத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் எங்களது பனங்காட்டுப்படை கட்சியினருடன் வந்து சிலையைத் திறப்பேன்” என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேசிய பின்னர், உடனடியாக காமராஜர் சிலையை மூடியிருப்பதை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் சிலையை மூடியிருந்த அட்டை மற்றும் துணியை அகற்றினார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/kamarajar-statue-closed-for-election-norms-is-reopened-tirunelveli

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக