Ad

வெள்ளி, 5 மார்ச், 2021

நீலகிரி: தேயிலைத் தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெண் சிறுத்தை! -விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில்‌ உள்ளது புடியங்கி கிராமம். இந்த கிராமத்தின் அருகில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை ஊர் மக்கள் சிலர் கண்டனர்.

leopard death

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர், சிறுத்தை இறந்திருப்பதை உறுதி செய்தனர். உடனே தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுத்தையின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்வினை மேற்கொண்டனர். ஆய்வுக்காக சிறுத்தையின் உடலில் மாதிரிகளை சேகரித்து, பின் உடலை எரியூட்டினர்.

இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறையினர், "இந்த பகுதி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்டது. இறந்த சிறுத்தைக்கு 7 முதல் முதல் எட்டு வயது இருக்கலாம். இது ஒரு பெண் சிறுத்தை. இறந்து ஏழு நாள்களுக்கு மேல் ஆகியிருக்கலாம். உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

leopard death

இது குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் ஜனார்த்தனன், "சமீப காலமாக தனியார் தேயிலைத் தோட்டங்களில் மர்மமான முறையில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. கிராம பகுதிகளில் மக்கள் வளர்த்துவரும் செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளை சிறுத்தைகள் இரையாக்குவதால், வன உயிர்கள் விஷம் வைத்து கொல்லவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/leopard-death-in-tea-estate-forest-department-investigating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக