கோபமாக தனது கேபினில் வந்து அமர்ந்த ஏஞ்சல் கையில் இருந்த செல்போனை மேஜையில் தூக்கி வீசினாள். தட் என்ற சத்ததுடன் அது விழ, பக்கத்து கேபினில் அமர்ந்திருந்த மானஸ் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவனை பார்த்து திரும்பியவள், “இந்த பொண்ணுங்க ஏன் இப்படி முட்டாளா இருக்காங்க?” என கேட்டாள்.
மானஸ் சிரித்தபடி, “அப்படியா எனக்கு தெரிஞ்ச பொண்ணு ரொம்ப புத்திசாலியாச்சே...” என சொல்ல அந்தக் கோபத்திலும் ஏஞ்சலுக்கு சிரிப்பு வந்தது.
“யாரு நான் புத்திசாலியா?” என ஏஞ்சல் சிரித்தபடியே கேட்டாள்.
“ஆமா... பயங்கர புத்திசாலி!”
“அது எப்படி உனக்குத் தெரியும்?”
“நானும் அந்தப் பொண்ணு மனசில இடம்பிடிக்க எவ்வளவோ பிட்டு போட்டு பாக்குறேன். அந்தப் பொண்ணு அசைஞ்சு கொடுக்க மாட்டேங்குதே...”
ஏஞ்சல் புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.
“இன்னைக்கு என்ன பிரச்னை மார்க்ஸோட?” என்றான் மானஸ்.
“யார் சொன்னது எனக்கும் மார்க்ஸுக்கும் பிரச்னைன்னு?”
“இல்ல... பொதுவா ஏஞ்சல் கோபமா இருந்தா அதுக்கு மார்க்ஸ்தான் காரணமா இருப்பான். அதான் கேட்டேன்!”
“என்னோட கோபம் மார்க்ஸ் மேல இல்ல... திவ்யா மேல!”
“ஓ... இது என்ன புதுக்கதை...'' என ஆர்வமானான் மானஸ்.
“நேத்து திவ்யாவைப் பார்க்க மார்க்ஸ் அவங்க ஹோட்டலுக்கு போயிருக்கான்... மழை பெய்யுது இங்கயே தங்கிக்கோன்னு அங்க தங்க வச்சிருக்காங்க”
மானஸ் சிரித்தான்...
“என்ன சிரிப்பு?” என எரிச்சலாக கேட்டாள் ஏஞ்சல்.
“தங்குனா தங்கிட்டு போறான்... இதுல உங்களுக்கு என்ன பிரச்னை?”
“பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்ல... திவ்யா என்ன கிஸ் பண்ணிட்டான்னு ஆபிஸ் பூரா சொன்னவன் அவன். அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு போயி அவங்க சப்போர்ட் பண்றாங்கன்னு நினைச்சாலே கடுப்பாகுது..."
மானஸ் சிரித்தபடியே, “உங்க பிரச்சனைக்கு நான் ஒரு சொல்லியூஷன் சொல்லட்டா?”
“சொல்லு” என்பது போலப் பார்த்தாள் ஏஞ்சல்.
“சீக்கிரமா நீங்க யாரோடயாவது கமிட் ஆவுங்க... அப்பதான் மார்க்ஸ் பத்தி யோசிக்கிறதை நிறுத்துவீங்க!”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல... இவன் மேல இருக்கிற கோபத்தில அவசரமா நாம ஒருத்தரைப் பிடிக்க முடியாதுல்ல...” என்றாள் ஏஞ்சல்.
“அவசரப்பட வேண்டாம் பொறுமையாவே தேடிப்பாருங்க... பல சமயத்தில நல்ல பசங்க பக்கத்துலயே இருப்பாங்க. நாமதான் கவனிக்காம மிஸ் பண்ணிருவோம்” என மானஸ் சொல்ல ஏஞ்சல் புன்னகைத்தாள்.
“அழகா சிரிக்கிறீங்க...”
“இந்த பாவப்படுறது... பாராட்டுறது எல்லாம் பழைய ஸ்டைல்... புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க” என்றாள் ஏஞ்சல்.
“முயற்சி பண்றேன்” என மானஸ் சிரித்தான். அந்த சிரிப்பு ஏஞ்சலுக்கு ஆறுதலாக இருந்தது.
மார்க்ஸ் தனது அறையில் அமர்ந்திருக்க இன்டர்காம் ஒலித்தது. போனை எடுத்தவன் “ஹலோ” எனச் சொல்ல மறுமுனையில் திவ்யா.
“ஹலோ... 12 மணிக்கு ஃபினான்ஸ் ஹெட்டோட பட்ஜெட் மீட்டிங்!”
“ஆமா... மெயில் பார்த்தேன்” என்றான் மார்க்ஸ்.
“புது ஃபினான்ஸ் ஹெட் மும்பையில இருந்து வந்திருக்காரு”
“ ஆமா சொன்னாங்க... பேரு கூட என்னவோ...” என மார்க்ஸ் யோசிக்க
“அலோக்” என்றாள் திவ்யா....
“ஆங் அலோக்... அவருக்கு என்ன?”
“ஒண்ணும் இல்ல அவர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி!”
மார்க்ஸுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரியவில்லை.
“அலோக்ன்னா மும்பை ஆஃபிஸ்ல எல்லாருக்கும் பயம். ரொம்ப ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட்.. பயங்கரமா கோபம் வரும். ஆனா பொறுமையா சொன்னா புரிஞ்சுப்பாரு” என திவ்யா மெதுவாக சுற்றி வளைக்க...
“நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல...” என்றான் மார்க்ஸ்
“மீட்டிங்ல அந்தாளு கோபப்பட்டா கூட நீ அமைதியா இரு. உடனே பதிலுக்கு நீயும் டென்ஷன் ஆயிடாதே!”
மார்க்ஸின் முகத்தில் புன்னகை...
“என்ன சத்தத்தையே காணோம்!”
“நேர்ல இருந்தா நான் ஸ்மைல் பண்றதை நீங்க பார்த்திருப்பீங்க!”
திவ்யாவும் புன்னகைத்தாள்.
“இப்ப நீங்க ஸ்மைல் பண்றீங்க கரெக்டா!” என்றான் மார்க்ஸ்.
“பெரிய இவரு... போன்லயே எல்லாத்தையும் கண்டுபிடிச்சிருவாரு...”
“மனசுக்குப் பிடிச்சவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கண்டுபிடிக்க டெலிபோன் தேவையில்ல... டெலிபதி போதும்” என மார்க்ஸ் சிரித்தான்.
“பேச்ச மாத்தாத... அந்த அலோக் ஏதாவது கோபமா கேட்டா கூட நீ பொறுமையா பதில் சொல்லு... முதல் மீட்டிங்லயே பிரச்னை வேணாம்!”
“அவர் எதுக்கு என்கிட்ட கோபப்படணும்?”
“இங்க பார்... அமைதியா இருன்னு சொல்றேன்... கேக்க மாட்டியா? திரும்ப திரும்ப கேள்வி கேட்டுக்கிட்டு?”
“இல்லங்க எதுக்கு நான்...” என மார்க்ஸ் மீண்டும் ஆரம்பிக்க...
“நான் சொல்றேன் செய்வியா மாட்டியா?” என சட்டென சொன்னவள் உதட்டைக் கடித்து இதைச் சொல்லியிருக்க வேண்டாமே என யோசிக்க... மார்க்ஸுக்கு அவளது அக்கறை புரிந்தது...
“நான் கோபப்படல பொறுமையாவே அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்றேன் போதுமா?”
“ஓகே” என திவ்யா போனை வைத்தாள்.
“எதுக்காக மார்க்ஸின் மேல் இத்தனை அக்கறை உனக்கு?” என அவள் தன்னைத்தானே கேட்டும் கொண்டாள்.
ஃபைனான்ஸ் டிப்பார்ட்மென்ட் என்பது எல்லா அலுவலகங்களிலும் தனி சாம்ராஜ்யம். பணம் கையாளக்கூடிய துறை என்கிற திமிர் அங்கு இருக்கும் அனைவரது நடத்தையிலும் தெரியும். அந்தத் துறையின் கடைநிலை ஊழியன்கூட சேனல் ஹெட்டை மெயில் அனுப்பி விளக்கம் கேட்க முடியும். எதுக்கு விளக்கம் கொடுக்கணும் எனக் கேட்டால் “தப்பு பண்ணலைன்னா ஏன் விளக்கம் கொடுக்க யோசிக்கணும்?” என்பதுதான் பதிலாக வரும்.
ஒட்டு மொத்த அலுவலகத்தையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டும் என்பது போலவே அவர்களுக்குக் கற்று கொடுக்கப்பட்டிருக்கும். எல்லா பில்லிலும் நிறுவனத்தை ஏமாற்றும் சூழ்ச்சி இருக்கிறது என்பது போலவே அவர்கள் அதை அணுகுவார்கள். ஆபிஸ் மெயின்டனன்ஸ் தொடங்கி, பெரிய நிகழ்ச்சிகளுக்கான பட்ஜெட்டுகள்வரை அனைத்திலும் சராமாரியாகக் கேள்விகள் கேட்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. யாராக இருந்தாலும் விளக்கம் சொல்லித்தான் ஆக வேண்டும்.
கேன்டீனில் நட்பாகப்பேசி சிரித்து விட்டு செல்லும் ஃபினான்ஸ் டீம் நபர் அடுத்த கணம், "உன்னோட ட்ராவல் பில் சரியில்லை" என மெயில் அனுப்புவான். இவ்வளவு நேரம் பேசியவனா இவன் என்பது போல யோசிக்கத்தோன்றும். அவர்களோடு கோபித்துக் கொள்ள முடியாது. பட்ஜெட் அப்ரூவ் ஆகாமல் எந்த வேலையும் நடக்காது. "இப்படி என்ன சந்தேகப்பட்டு கேள்வி கேக்குறியே... நான் என்ன திருடனா?" என கோபமாக கேட்டால், “என் வேலையைத்தான் நான் செய்யுறேன்” எனச் சாதாரணமாக அவர்களிடமிருந்து பதில் வரும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் எந்த அளவுக்கு ஃபினான்ஸ் டிபார்ட்மென்ட்டை திட்டுகிறார்களோ அந்த அளவுக்கு அந்த டீம் நன்றாக வேலை செய்வதாக நிறுவனம் கருதும் என்பதால் மற்றவர்களின் வசவுகளை அவர்கள் பாராட்டாகவே எடுத்துக் கொள்வதுண்டு.
பட்ஜெட் டிஸ்கஷன் என்றாலே அனைவருக்கும் கிலி எடுக்கும். கடன் தரக்கூடிய வட்டி கடைக்காரனை போல கேள்விகளை கேட்டு தள்ளுவார்கள். “என்னமோ அவன் பாக்கெட்டுல இருந்து எடுத்து தர்ற மாதிரி நடந்துக்கிறானுங்களே” என மனதுக்குள் புலம்பிக் கொள்ளலாம். அவ்வளவுதான். அவர்களை முறைத்துக்கொண்டால் கேள்விகள் அதிகமாகும், அப்ரூவல்கள் தாமதமாகும், நம்முடைய வேலைகள் கெட்டுபோகும் என்பதால் பெரும்பாலும் ஃபினான்ஸ் டீமிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்வதில்லை.
மேனேஜர் லெவலில் இருப்பவர்கள் கூட ஃபினான்ஸ் டிபார்ட்மென்ட்டில் இருக்கும் சாதாரண நபரிடம் அந்த பில்லை கொஞ்சம் பாஸ் பண்ணக்கூடாதா எனக் கெஞ்சலாகக் கேட்டு வாங்குவார்கள். ஃபினான்ஸ் டிப்பார்ட்மென்ட்டுக்கு வருபவர்கள் எல்லாமே முசுடுகளா இல்லை அந்த டிபார்ட்மென்ட் அவர்களை அப்படி மாற்றி விடுகிறதா என்ற கேள்வி எப்போதுமே மார்க்ஸுக்கு வருவதுண்டு.
மார்க்ஸின் எதிரில் இருந்த லேப்டாப் அலாரம் அவனது 12 மணி மீட்டிங்கை நினைவூட்டியது. மார்க்ஸ் எழுந்தான். அணைத்து வைக்கப்பட்டிருந்த டிவியில் அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டான்.
'திவ்யா சொல்லியிருக்கா கோபப்படக்கூடாது' என அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பெருமூச்சு விட்டு தன்னை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டபடி அங்கிருந்து நகர்ந்தான்.
அலோக், ஜெனரல் மேனேஜர் ஃபினான்ஸ் என்கிற அறைக்கதவை திறந்து கொண்டு மார்க்ஸ் உள்ளே நுழைந்த போது திவ்யா ஏற்கெனவே அங்கு அமர்ந்திருந்தாள். மார்க்ஸ் 50 வயது அலோக்கை எதிர்பார்த்துதான் உள்ளே நுழைந்தான். ஆனால் அலோக்கின் தோற்றம் முப்பதுகளின் இறுதியிலிருந்தது. மடிப்பு கலையாத உடையுடன் கால்மேல் கால் போட்டு அவன் அமர்ந்திருந்த தோரணையும் அவன் சற்று கடுமையானவன் என்பதை சொல்லாமல் சொல்லியது. முகத்தில் துளியும் சிரிப்பு இல்லை.
மார்க்ஸ், “ஹாய் சார்” எனப் புன்னகைத்தபடி தனியாக இருந்த சோஃபாவில் அமர்ந்தான். அதை அவன் சற்றும் கண்டுக்கொள்ளாத பாவனையில் இருந்தான். மார்க்ஸின் 'ஹாய்' சேருமிடம் தெரியாமல் காற்றில் அலைந்தது. ஏசி குளிரும் அலோக்கின் மெளனமும் அந்தச் சூழலை மேலும் இறுக்கமாக்கியது.
திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள். 'பொறுமையாக இரு' எனச் சொன்னது அவள் பார்வை.
அலோக் அவர்கள் அனுப்பியிருந்த பட்ஜெட் ஷீட் மற்றும் தயாரிப்பாளர்கள் விவரங்கள் அடங்கிய ஃபைலை எடுத்து புரட்டியவன்...
“குட் வொர்க் திவ்யா... இந்த புரொடியூசர்ஸை எல்லாம் அப்ரூவலுக்கு முன்னால நான் பார்க்கணும்...” என்றான்.
“யெஸ் ஸார்” என்று வழக்கத்துக்கும் குறைவான சத்தத்தில் சொன்னாள் திவ்யா.
“பட்ஜெட்டுக்குன்னு புது ஃபார்மெட் அனுப்பியிருக்கேன். அந்த ஃபார்மெட்ல இதை ரீவொர்க் பண்ணி அனுப்புங்க...”
“யெஸ் சார்!”
அவளது ஃபைலை டேபிளில் வைத்தவன் மார்க்ஸின் ஃபைலை கையில் எடுத்தான்.
மார்க்ஸ் அலோக்கைப் பார்த்தபடி இருந்தான்.
“என்னைய்யா இது...” என அவமரியாதையான குரலில் அவன் ஆரம்பிக்க மார்க்ஸுக்கு சுர்ரென ஏறியது....
“புரொடியூசர்ஸ்ன்னு யார் யாரையோ ரெக்கமெண்ட் பண்ணியிருக்க... யார் இவங்க எல்லாம்?”
“இல்ல சார் அவங்க எல்லாருமே புது ப்ரொடியூசர்ஸ்...”
“இது என்ன உன் அப்பன் வீட்டு கம்பெனின்னு நினைச்சுகிட்டு இருக்கியா? இஷ்டத்துக்கு எவனை வேணா புரொடியூசர் ஆக்குறதுக்கு? உன்னைப் பார்த்து மத்தவங்க வேணா பயப்படலாம் நான் பயப்படமாட்டேன். உன்ன மாதிரி 1000 பேர பார்த்துட்டுத்தான் நான் இந்த சீட்ல வந்து உட்கார்ந்திருக்கேன்” எனக் கோபமாக அலோக் சொல்ல யாரோ மார்க்ஸைப்பற்றி மொத்தமாக போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்பது திவ்யாவுக்குப் புரிந்தது.
திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள். அவன் மெலிதாக புன்னகையுடன் அமர்ந்திருந்தான். கோபப்பட வேண்டிய இடத்தில் புன்னகைத்தால் மார்க்ஸ் உச்சபச்ச கோபத்தில் இருக்கிறான் என அர்த்தம்.
“உன் இஷ்டத்துக்கு எல்லாம் கம்பெனி ஆட முடியாது. இங்க இருக்கிற ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸுக்கு கீழ வேலை செய்யுறதா இருந்தா வேலை செய்... இல்லைன்னா போய்கிட்டே இரு!”
மார்க்ஸின் புன்னகை இன்னும் சற்று அதிகமானது.
“என்னடா சிரிக்கிற... உன் இஷ்டத்துக்கு ஏதாவது ஃபைல குடுப்ப நான் அப்ரூவ் பண்ணி அனுப்பணுமா? இனிமே அது நடக்காது. உன்னோட பட்ஜெட்டுல இருக்கிற ஒவ்வொரு லைனுக்கும் விளக்கம் வேணும். என்கிட்ட திமிர் காட்டலாம்னு நினைச்சே அடிச்சுக் காலி பண்ணிடுவேன்.”
திவ்யா, மார்க்ஸின் கண்களை பார்க்க முயல அவன் நேராக அலோக்கைப் பார்த்தான்.
“சார்... பன்ச் டயலாக் எல்லாம் உங்களைவிட நான் சூப்பரா பேசுவேன்... பட்ஜெட் பத்தி பேசலாமா?” என மார்க்ஸ் புன்னகை மாறாமல் கேட்க அத்தனை நேரம் தான் பேசிய அனைத்தையும் குப்பையாக மார்க்ஸ் ஒதுக்கி தள்ளியதை உணர்ந்தான் அலோக். கோபத்தை எதிராளியால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அலட்சியத்தை?! கோபம் தலைக்கேற கையில் இருந்த ஃபைலை மார்க்ஸின் முகத்தில் தூக்கி அடித்தான் அலோக். அறை முழுக்க பேப்பராகப் பறந்தன...
திவ்யா அதை எதிர்பார்க்கவில்லை.
மார்க்ஸ் மெதுவாகக் குனிந்து பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுக்கத் தொடங்கினான். அடுத்து அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு இருந்தது மார்க்ஸின் பொறுமை. பேப்பர்களுடன் மார்க்ஸ் மெதுவாக எழுந்தான்.
“நான் உங்களுக்கு ஒரு புரொடியூசர் லிஸ்ட் அனுப்பியிருக்கேன். பட்ஜெட் ஷீட் அனுப்பியிருக்கேன். அதுல எது சரி தப்புன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு... என்ன அவமானப்படுத்துற உரிமை உங்களுக்கு இல்ல!”
“என்னடா பண்ணுவ?” என அலோக் அதே கோபத்துடன் கேட்க...
மார்க்ஸ் அலோக்கைப் பார்த்தான். திவ்யாவை திரும்பிப் பார்த்தான். திவ்யா கண்களால் அவசரப்பட்டு எதையும் செஞ்சிராத எனக் கெஞ்சலாக பார்க்க மீண்டும் மார்க்ஸின் பார்வை அலோக்கை நோக்கித் திரும்பியது.
“அவமானத்தை எப்பவுமே வாங்கி வெச்சுக்கிறது இல்ல... உடனே திருப்பி குடுத்துடுறது” என ஃபைலை அலோக்கின் முகத்தில் விசிறி அடித்தான் மார்க்ஸ்... அதை எதிர்பார்க்காத அலோக் ஆடிப்போனான். திவ்யா ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தாள்.
அலோக்கின் கைகள் ஆடியது. அடித்தே பழக்கப்பட்ட அதிகார வர்கத்தின் கரம் அல்லவா அது! இப்படி ஒரு விஷயம் நிகழக்கூடும் என்பதை அவன் கனவிலும் நினைத்ததில்லை. கோபமும் அவமானமும் அவனைக்கூறு போட உதடுகள் துடிக்க அமர்ந்திருந்தான் அலோக். எப்படி பதிலுக்கு ரியாக்ட் பண்ணுவது என்பது கூடப் புரியாமல் அவன் உறைந்து போயிருந்தான்.
மார்க்ஸ் நிதானமாக அறையை விட்டு நகர்ந்தான். திவ்யாவும் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
அறை முழுக்க பேப்பர்கள் சிதறிக் கிடந்தன.
பார்க்கிங் ஏரியாவில் திவ்யா பதற்றமாக நின்று கொண்டிருந்தாள். நடந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அலோக் நடந்து கொண்ட விதம் தவறுதான். ஆனால் பதிலுக்கு மார்க்ஸ் நடந்து கொண்ட விதம்? எங்கிருந்து வருகிறது இவ்வளவு கோபம், இந்தத் துணிச்சல்?
கையிலிருந்த வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள முயன்றாள். பதற்றம் அப்படியே இருந்தது. அவளது போன் அடிக்க போனை எடுத்து பார்த்தவள் கட் பண்ண.... மீண்டும் போன் அடிக்க அவள் மீண்டும் கட் செய்தாள்.
பாட்டில் தண்ணீரால் முகத்தைக் கழுவிக் கொண்டு நிமிர மார்க்ஸ் அவளைத் தேடிக் கொண்டு வருவது தெரிந்தது.
மார்க்ஸ் மெதுவாக அருகில் வந்தவன் “திவ்யா” என ஆரம்பிக்க...
“எதுவும் பேசாதே...”
“இல்ல திவ்யா நான்...” என மார்க்ஸ் ஆரம்பிக்க, அவனை இடை மறித்தவள்... “எல்லாரும் சொன்னாங்க... இந்த உலகத்திலயே உனக்கு முக்கியம் உன்னோட ஈகோதான்னு. அதை இன்னைக்கு நானே என் கண்ணால பார்த்துட்டேன். நீ யாருன்னு புரிஞ்சிருச்சு!”
“நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு...”
“நான் சொன்னதை நீ கேட்டியா? கோபப்படாதேன்னு எத்தன தடவ சொன்னேன் கேட்டியா?”
“அவன் பண்ணது சரியா சொல்லு?”
“அவன் என்னமோ பண்றான், எப்படியோ போறான்... நீ என் ஃபிரண்ட். நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன். அதை நீ பண்ணியா?”
மார்க்ஸ் என்னப் பேசுவது என தெரியாமல் பார்த்தான்.
“பதில் சொல்லு?!”
“நான் என்ன பண்ணியிருக்கணும்னு நீ நினைக்கிற!”
“அமைதியா போய் மேனன் சார்கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணி இருக்கணும்!”
“பண்ணியிருந்தா... அவர் என்ன செஞ்சிருப்பாரு?”
“அவரு என்னமோ செய்றாரு..... ஆனா நீ இதைத்தான் பண்ணியிருக்கணும்!”
“திவ்யா அவன் என்னை என்ன வேணா சொல்லட்டும்... என் வேலை சரியில்லைன்னு சொல்லட்டும் , பட்ஜெட் தப்புன்னு சொல்லட்டும் நான் கொண்டு வந்த ப்ரொடியூசரை அப்ரூவ் பண்ணாம போகட்டும்... எல்லாத்துக்கும் அவனுக்கு உரிமை இருக்கு... ஆனா என்னோட சுயமரியாதைய சுரண்டுறதுக்கு அவனுக்கு யார் உரிமை கொடுத்தது?”
“அவன்தான் தப்பு பண்றான். நீயும் திரும்ப அதையே பண்ணா என்ன அர்த்தம்?”
“அவன் பண்ணது தப்பு... நான் பண்ணது அவன் என்ன தப்பு பண்ணான்னு அவனுக்குப் புரிய வச்சது!”
இவனிடம் என்னப் பேசுவது என்பது போல திவ்யா பார்க்க...
மார்க்ஸூம் அவளைப் பார்த்தபடி நிற்க...
“உங்கப்பா உன்கிட்ட இப்படி நடந்துகிட்டா பதிலுக்கு நீயும் இப்படித்தான் நடந்துப்பியா?”
“அவர் ஒரு போதும் இப்படி நடந்துக்க மாட்டார்!”
“ஒரு வேளை இப்படி நடந்துகிட்டா?!”
“மாட்டாரு... நான் அவரோட பையனா இருந்தாலும், என் மேல அவருக்கு எல்லா உரிமையும் இருந்தாலும் அவர் என் சுயமரியாதைய உடைக்கிற மாதிரி ஒரு காரியத்தை எப்பவுமே பண்ணதில்ல… பண்ணவும் மாட்டார்!”
“சரி இப்படி ஒரு விஷயத்த நான் பண்ணா?!”
மார்க்ஸ் அவளை ஏறிட்டு பார்த்தான்...
“சொல்லு நான் பண்ணா என்ன செய்வ?”
“என்ன திவ்யா இப்படி எல்லாம் கேக்குற?”
“நிஜம் சொல்லு... நானே கோபத்துல ஏதோ தப்பு பண்ணிடுறேன்... பதிலுக்கு பாவம்ன்னு விட்டு கொடுப்பியா? இல்ல இப்படித்தான் திருப்பி அடிப்பியா?!”
மார்க்ஸ் பதில் சொல்லாமல் மெளனமாகப் பார்த்தான்.
“பதில் சொல்லு?!”
சிறிது நேரம் யோசித்தவன் “தெரியல” என்றான்.
“நானும் தெரிஞ்சுக்க விரும்பல...” என்ற திவ்யாவின் குரலில் எதையோ முடிவு செய்த உறுதி தெரிந்தது.
“திவ்யா...” என மார்க்ஸ் அவள் அருகில் வர பின்னே சென்றவள்,
“இங்க பார் மார்க்ஸ்... உனக்கும் எனக்கும் நடுவுல ஏதாவது இருந்துதான்னு எனக்குத் தெரியல... அப்படி ஏதாவது இருந்திச்சுன்னு நீ நினைச்சா இன்னையோட அது முடிஞ்சு போச்சுன்னு வச்சுக்க... உன் வேலைய நீ பாரு... உனக்கு என்ன பிடிக்குமோ அதைப் பண்ணு... சண்டை போடு... கோபப்படு... அடி உதை... எனக்கு எது பத்தியும் கவலையில்ல...”
“இல்ல திவ்யா நான்..!”
“எனக்காக ஏதாவது பண்ணனும்னு நிஜமா யோசிச்சா என்னை விட்டு தள்ளி இரு... அவ்வளவுதான்!” என அவள் விறுவிறுவென நடந்து செல்ல மார்க்ஸ் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தொலைதூரம் செல்கிற ஒரு ரயில் பயணத்தில் கடைசி வரை நம்மோடு பயணிக்கப் போகிறாள் என நினைத்த ஒருத்தி முதல் நிறுத்தத்திலேயே இறங்கிப் போவதுபோல உணர்ந்தான் மார்க்ஸ்!
- Stay Tuned...
source https://cinema.vikatan.com/literature/idiot-box-part-20-divya-and-marx-have-a-disagreement-over-an-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக