Ad

வியாழன், 18 மார்ச், 2021

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 9 | வெப்ப நோய்கள் தீர்க்கும் வெயிலுகந்தாள் திருக்கோயில்!

காய்ச்சல் தீர காய்ச்சல்காரம்மன், வெப்பம் தீர மழை பொழிய மாரியம்மன், உடலில் உண்டாகும் உஷ்ண சம்பந்தமான அம்மை போன்ற நோய்களை நீக்க ஆங்காங்கே அம்மன் ஆலயங்கள். இப்படி நமக்காக யாதுமாகி நிற்கும் அம்பிகை மதுரை திருப்பரங்குன்றத்துக்கு அருகே வெயிலுகந்த அம்மனாகவும் அமர்ந்திருக்கிறாள். வாழ்வின் வெம்மையிலிருந்து மாத்திரமல்ல வாட்டும் சூரியனின் வெம்மையிலிருந்தும் நம்மைக் காத்தருள்பவள் இந்தத் தாய். இந்த அம்மை இங்கு கோயில் கொண்டது எப்படித் தெரியுமா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொடிய மிருகங்களும் அஞ்சி நடுங்கும் கடும் கோடை காலத்தின் ஒரு நாள் அது. திருப்பரங்குன்றத்திற்கு அருகில் இருந்த தென்கால் கண்மாயில் சலசலவென குளுமையான நீர் ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட தொலைவு நடந்து களைப்புற்றவள் போன்ற தோற்றம் கொண்ட ஒரு சிறுமி, அந்த ஓடையில் நீரள்ளிப் பருகிக் கொண்டிருந்தாள்.

திருப்பரங்குன்றம்

பார்க்கவோ சிறுமி, ஆனால் அவர் பார்வையிலோ ஒரு சிறு வெயிலின் சுடர் போன்ற ஜொலிப்பு. அதுவரை அந்தச் சிறுமியை அந்தப் பகுதியில் பார்த்ததில்லையே என்று எண்ணிய சிலர், தாகத்துடன் நீரருந்தும் அவளை நெருங்கி,

"யாரம்மா நீ?" என்று கேட்டனர்.

நீர் அருந்திய குளுமையையும் மீறிய வெம்மையைத் தன் பார்வையில் கொண்டிருந்த அந்தச் சிறுமி,

" வெயிலுக்கு இளைப்பாற அமர்ந்திருக்கேன். இதோ, கொஞ்ச நேரத்தில கிளம்பிருவேன்" என்று சொன்னாள்.

அவள் பதிலில் சமாதானமுற்ற மக்கள், வேறு கேள்விகள் கேட்காமல் கிளம்பிப் போனார்கள். நீண்ட நேரம் கழித்து, அந்தப் பகுதி வழியாகச் சென்ற வேறு சிலர் ஒரு காட்சியைக் கண்டு திகைத்து நின்றனர்.

முன்பு சிறுமி அமர்ந்திருந்த இடத்தில், எட்டுகரங்களுடன், வலது காலினை மடித்து அமர்ந்திருந்தாள் ஆங்காரி. தனது இடதுகாலால் அசுரன் ஒருவனை மிதித்தபடி அமர்ந்திருக்கும் ஆவேசத் திருக்கோலம். இந்தக் காட்சியைக் கண்டவர்கள், அஞ்சி நடுங்கினர். ஊருக்குள் ஓடிச் சென்று இந்தத் தகவலை ஊர்மக்களிடையே சொன்னார்கள். மக்கள் வந்து பார்த்தபோது அங்கு அமர்ந்திருந்த அந்த அன்னையைக் காணவில்லை.

தாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து அமர்ந்த அந்தச் சிறுமி, அன்னை பராசக்தியின் வடிவே என்பதை அறிந்துகொண்டனர் மக்கள். அந்தச் சிறுமி அமர்ந்திருந்த இடத்தில் சிறு கல்லை நட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர். வெயிலுக்காக வந்து அமர்ந்ததால், அவளை 'வெயிலுகந்த அம்மன்' என்று அழைத்தனர்.

திருமலை நாயக்கர்

அன்னையின் திருவருளால் அங்கு வந்து வேண்டிக்கொண்டவர்களின் நோய்கள் நீங்கின. அன்னையின் புகழும் பரவியது. திருமலை நாயக்க மன்னனின் காதுகளுக்கு அம்மனின் பெருமைகள் சென்று சேர்ந்தன. ஓடிவந்து அம்மனைத் தொழுதுகொண்டான். அந்த இடத்தில் அம்மனுக்கு ஓர் ஆலயத்தை அமைக்கவும் ஏற்பாடு செய்தான். அந்த ஆலயம்தான் தற்போது திருப்பரங்குன்றம் மலை அருகே அமைந்திருக்கும் வெயிலுகந்த அம்மன் கோயில்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியிருக்கும் வீதியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு முன்பாக இரண்டு பிரமாண்ட துவார பாலகர்கள் நிற்க மூல தெய்வமாக வெயிலுகந்த அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறாள். இந்த ஆலயத்தில் விநாயகர், கருப்பண்ணன், கால பைரவர், நவகிரகங்கள், நாக புற்று, அர்த்தநாதீஸ்வரர், மாணிக்கவாசகர், கத்தரிக்காய் சித்தர், வேதாலம்மன் ஆகிய தெய்வங்கள் மற்றும் அவதார புருஷர்களின் சந்நிதிகளும் அமைந்துள்ளன. திருக்கோயிலின் பிராகாரங்களில் தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டு காண்போரைக் கவர்கின்றன.

மதுரையை நவாபின் படையெடுப்பின் போது வெயிலுகந்த அம்மனின் ஆதி சிலையின் தலைப்பகுதி வெட்டப்பட்டுவிட்டது. எனவே, தலையில்லாத அந்த சிலைக்கு மாற்றாக வேறு ஒரு சிலையினைச் செய்து பிரதிஷ்டை செய்துவிட்டபோதிலும், பழைய சிலையையும் ஆலய வளாகத்திலேயே வைத்திருக்கின்றனர். தினமும், மூல அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுவதுபோலவே, இந்த சிலைக்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

கருவறையில் இருக்கும் அம்மனின் சிரசில் தினமும் மதியம் 12 மணி முதல் 12.15 வரை வெயில் விழுகிறது. கடுமையான வெயிலைத் தாங்கிக்கொண்டு அம்மன், மக்களுக்குக் குளுமையை வழங்குவதாக ஐதிகம். அதனால், வெயிலினால் உண்டாகும் நோய்கள் தீர இங்கே மக்கள் நேர்ந்துகொள்கிறார்கள். அன்னையும் அவற்றைக் கனிவோடு நீக்கி, அருள்கிறாள்.

வெயிலுகந்த அம்மன் கோயில்

குறிப்பாக, வெயிலினால் உண்டாகும் தோல் நோய்கள் நீங்க இங்கே வந்து நேர்ந்துகொள்கிறார்கள். நோய் குணமானதும் இங்கே வந்து உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொள்வது, பாத பொம்மை காணிக்கையிடுவது, சேவல் தானம் செய்வது, பொங்கல் வைப்பது என்று பல்வேறு முறைகளில் பிரார்த்தனைகளைச் செலுத்துகிறார்கள்.

உப்பும், மிளகும் வாங்கிக் கோயிலில் போட்டால், நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது இங்குள்ள பக்தர்கள் நம்பிக்கை. மேலும், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், வேண்டிக்கொண்டு, பொம்மை கொண்டு வரும் சடங்கைச் செய்கிறார்கள். எத்தனை கோரிக்கைகளை வைத்தாலும் அம்பிகை அதைக் கனிவோடு அருள்வாள் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

Also Read: வைகை நதிக்கரை ஆலயங்கள் - 8 | கனவுகளை நனவாக்கும் வில்வ மரத்தடி விநாயகர்... முக்தி அருளும் ஈசன்!

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் இங்கு திருவிழா களைகட்டும். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாசிமாதத்தில் காப்புக் கட்டித் திருவிழா கொண்டாடுகிறார்கள். இந்தக் கோயிலின் உற்சவர் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். உற்சவக் காலங்களில் அந்த மூர்த்தம் கொண்டு வரப்பட்டு தினவும் காலையும் மாலையும் உலா நடைபெறும். உற்சவ காலத்தில், கோயிலில், பொங்கல் வைத்தல், மாவுசாத்துதல், பூப்பல்லக்கு முதலியன இங்கு சிறப்பாக நடைபெறும். அந்த வேளையில் அம்மனுக்கு பக்தர்கள் குளிர்ச்சியான பொருள்களை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.

இந்தக் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலின் முன்பாக நடைபெறும் நாடகம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பல தலைமுறைகளாக இந்த நாடகத்தை நடத்தும் கலைஞர்களுக்கு ஒரு காலத்தில் 60 கட்டி உப்பில்லா சோறும், 6 மரக்கா மிளகும் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டதாம். ஒரு முறை, இந்த நாடகத்தைக் காண வந்த திருமலைநாயக்கர் , அந்த நாடகத்தைக் கண்டு மனம் மகிழ்ந்து அவர்களுக்கு வேண்டிய அளவு நிலத்தை தானமாக வழங்கினார் என்று சொல்கிறார்கள். அந்தக் குழுவினரை திருமலை நாயக்கரால் மெச்சியதால் 'திருமலை மெச்சான்' என்ற பெயரும் அவர்களுக்கு நிலைத்தது. இப்போதும், அந்தக் கலைஞர்கள், தங்கள் மரபுப்படி, உப்பில்லா சோறும், மிளகு ரசமும் மட்டுமே பெற்றுக்கொண்டு நாடகம் நடத்திக்கொடுக்கிறார்கள்.

காளி அம்மன்
இந்தப் பகுதி மக்களை மட்டுமல்ல, ஒருமுறை வந்து வணங்கிச் செல்லும் அனைத்து பக்தர்களையும் வாழ்நாள் முழுவதும் உடனிருந்து காப்பாள் வெயிலுகந்த அம்மன். எனவே, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தவறாமல், அருகில் இருக்கும் வெயிலுகந்தம்மனையும் வழிபட்டு நல்லருள் பெறலாம்.


source https://www.vikatan.com/spiritual/temples/temples-of-madurai-9-the-glory-and-history-of-veyilugantha-amman-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக