புயல் மற்றும் கனமழை காரணமாக சம்பா சாகுபடி அழிந்ததால் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8,000 நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அந்தப் பணம் முழுமையாக கிடைக்காததால் விவசாயி ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடைகாரமூளை கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி கிருஷ்ணமூர்த்தி. இவர் சாகுபடி செய்திருந்த 4 ஏக்கர் சம்பா நெற்பயிர் கனமழையின் காரணமாக முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழிந்துவிட்டது. இதனால் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி மிகுந்த வேதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் மழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 8,000 வழங்கப்படும் என்று அறிவித்த நிவாரண தொகை கொடைகாரமூளை கிராமத்திலுள்ள பல விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. விவசாயி கிருஷ்ணமூர்த்தி பயிரிட்ட 4 ஏக்கருக்கு ரூ. 32 ,000 கிடைக்கவேண்டிய நிவாரண தொகைக்குப் பதிலாக அவரது வங்கி கணக்கில் நிவாரண தொகை ரூ 4,000 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருந்தது . இதனையறிந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயி கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் விஸ்வநாதன் கூறுகையில், ``பழையபாளையம் மற்றும் கொடைகாரமூளை கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் கிடைக்கவில்லை. விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 அல்லது 3,000 தொகை மட்டுமே வந்துள்ளது.
கிருஷ்ணமூர்த்தியின் வங்கி கணக்குக்கு ரூ. 4,000 மட்டுமே வந்துள்ளதால் அவர் மிகுந்த வேதனையிலிருந்து மன உளைச்சலில் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். அரசின் நிவாரண தொகையை முறையாக வழங்கியிருந்தால் இந்த மரணம் ஏற்பட்டிருக்காது. எனவே இறந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக ரூ.20 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும்"என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/government-announced-relief-not-credited-farmer-died-in-shock
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக