உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி வகித்துவந்தார். அந்தக் கட்சியினருக்கே முதல்வரின் மீது அதிருப்தி நிலவிவந்த நிலையில், திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியிலிருந்து விலகினார். புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் என்பவர் பதவியேற்றார்.
தீரத் சிங் ராவத் முதல்வராகப் பதவியேற்ற சில தினங்களிலேயே, தொடர்ந்து சர்ச்சையான பேச்சில் சிக்கிவருகிறார். நேற்று நைனிடாலிலுள்ள ராம் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ராவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய ராவத், ``இந்த கொரோனா ஊரடங்கில் 10 குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு 50 கிலோவும், 20 குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு 100 கிலோவும், இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு 10 கிலோவும் ரேஷன் பொருள்கள் கிடைத்தன.
இப்போது, குறைந்த குழந்தைகளைக்கொண்டவர்கள் பொறாமைப்படுகிறார்கள். இதற்கு யார் காரணம்? நேரம் இருந்தபோது, நீங்கள் இரண்டு குழந்தைகளை மற்றும் பெற்றெடுத்தீர்கள். ஏன் 20 குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை" என்று மக்கள் திகைக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
மேலும், ``சர்வதேச அளவில் சுகாதாரத்துறையில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கடினமான சூழலில், மோடியைத் தவிர்த்து வேறு யார் பிரதமராக இருந்தாலும் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கும். பிரதமர் மோடிதான் நம் அனைவரையும் காப்பாற்றியுள்ளார். இருந்தபோதிலும், அவர் கூறும் வழிமுறைகளைப் பொதுமக்கள் சரியாகப் பின்பற்றுவது இல்லை. ஒரு சிலரே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற விதிகளை முறையாகப் பின்பற்றுகிறார்கள்.
`` கொரோனாவை இந்திய அரசு திறமையாகக் கையாண்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆட்சிபுரிந்த அமெரிக்கா, கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறது" என்று கூறினார். இந்தியாவில், 1858-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் அரசு ஆட்சி நடத்தியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், இந்தியாவை அமெரிக்கா ஆட்சி செய்தது என்று அவர் பேசியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
Also Read: `பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது என்ன மாதிரியான செயல்?' - உத்தரகாண்ட் முதல்வர் சர்ச்சை கருத்து
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், பெண்கள் கிழிந்த ஜீன்ஸ்கள் அணிவது குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. `முழங்கால்களைக் காண்பிப்பது, கிழிந்த டெனிம் அணிந்து பணக்காரக் குழந்தைகளைப்போல தோற்றமளிப்பது, இதெல்லாம் எங்கிருந்து தொடங்குகிறது... வீட்டிலிருந்துதானே... ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளின் தவறு என்ன... முழங்கால்களைக் காட்டும் ஜீன்ஸ் அணியும் என் மகனை நான் எவ்வழியில் அழைத்துச் செல்கிறேன்? பெண்களும் குறையில்லாமல் தங்களின் முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? மேற்கத்திய உலகம் நமது பாரம்பர்யத்தைப் பின்பற்றி, `மூடிமறைக்கும்’போது, இந்தியர்கள் நிர்வாணத்தை நோக்கி ஓடுகிறார்கள்’’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/20-children-more-ration-america-ruled-india-tirath-singh-rawat-controversies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக