அப்போது, மேற்கு வங்க முதல்வர் என்றால் ஜோதிபாசுதான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். தான் உயிருடன் இருந்தவரை, அதாவது தான் விரும்பியவரை முதல்வராக இருந்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் ஜோதிபாசு. அவர் முதல்வராக இருந்த கடைசி சில ஆண்டுகளில், வங்கத்தில் பெண் சிங்கமாக வலம் வந்து அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மம்தா பானர்ஜி. ஜோதி பாசு ஆட்சியில் இருந்து விலகிய சில ஆண்டுகளில் இடதுசாரிகளின் கோட்டையை உடைத்து மம்தா பானர்ஜி முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். இதற்காக அவர் கொடுத்த விலை, மிகவும் கடுமையானது.
மம்தா பானர்ஜி தனது அரசியல் வாழ்க்கையை 15 வயதிலேயே தொடங்கிவிட்டார். அப்போதே காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அவர் எதையும் துணிந்து பேசக்கூடியவர் என்பதால் விரைவிலேயே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்தன.
1970-களில் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய மம்தா பானர்ஜி, 1976-ம் ஆண்டு மாநில மகளிர் அணிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
1984-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியைத் தோற்கடித்து முதன்முறையாக மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்... இந்தியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் அரசை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வந்ததோடு, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தயங்காமல் குரல் கொடுத்து வந்தார். 1989-ம் ஆண்டு மீண்டும் தேர்தலில் நின்றபோது தோல்வியைத் தழுவியபோதிலும், 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், மேற்கு வங்க அரசை எதிர்த்துப் போராட அவருக்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததாலும், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்பட்டதாலும் காங்கிரஸ் தலைமை மீது மிகவும் அதிருப்தியடைந்தார்.
புதிய கட்சி உதயம்!
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்தால் தனக்கு எதிர்காலம் இல்லை என்று மம்தா பானர்ஜி நினைத்தார். இதற்காக காய்களை நகர்த்த ஆரம்பித்தார். கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போராட வேண்டுமானால் தனக்கு முழுமையான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அது காங்கிரஸ் கட்சியில் இருக்கும்வரை கிடைக்காது என்றும் நினைத்தார். எனவே 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
1998, 1999-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மிகவும் சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2001-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 60 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி, மம்தா பானர்ஜிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
1999-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, அதில் மம்தா பானர்ஜி இணைந்து ரயில்வே அமைச்சரானார். அதன் பிறகு 2003-04, 2009-11-ம் ஆண்டுகளில் மத்திய அமைச்சராக இருந்தார். தேசிய அரசியலில் கவனம் செலுத்தினாலும் தனக்கான அரசியல் களம் மேற்கு வங்கம்தான் என்பதை மம்தா உணர்ந்தார். இடதுசாரி அரசை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் தீவிரமாகப் போராடவேண்டுமென்று நினைத்தார். இதற்காக, தெருவில் இறங்கி பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்த ஆரம்பித்தார்.
அரசியல் வாழ்வு கொடுத்த சிங்குர்!
மம்தாவின் வேகத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நந்திகிராம், சிங்குர் பிரச்னை அமைந்தது. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நந்திகிராமில் தொழிற்சாலைகளுக்கு விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 25 நாள் போராட்டத்தில் குதித்தார்.
இப்போராட்டம்தான் மம்தா பானர்ஜியை மேற்கு வங்கம் முழுக்க மக்களின் கவனத்தைப் பெறவைத்தது. தொடர்ச்சியான போராட்டம் காரணமாக சிங்குரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை மாநில அரசு கைவிட்டது. இப்போராட்டத்தில் கிடைத்த செல்வாக்கை 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி அறுவடை செய்தார். இத்தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் இருந்த கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தார்.
இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், 2011-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடக்கவிருந்த சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு என்ற வெறியுடன் கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். அவரது கடினமாக உழைப்பு அவருக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது.
30 ஆண்டுக்கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி... மம்தாவின் பெரும் வெற்றி!
2011-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கம்யூனிச அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலகிலேயே அதிக நாள்கள் ஆட்சியில் இருந்த பெருமையுடன், வங்கத்தில் இருந்து வந்தது. அதனை தனது ஆக்ரோஷமான போராட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து, அதே ஆண்டு மே 20-ம் தேதி மம்தா முதல்வராகப் பதவியேற்றார்.
எப்போதும் காட்டன் சேலை மட்டுமே கட்டி மிகவும் எளிமையுடன் இருப்பார் மம்தா பானர்ஜி. அவரை எதிர்த்து அரசியல் செய்ய, மேற்கு வங்கத்தில் துடிப்பான இடதுசாரி தலைவர்களோ, காங்கிரஸ் தலைவர்களோ இல்லாமல் இருந்தனர். இது மம்தா பானர்ஜி 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் எளிதில் வெற்றி பெற வகை செய்தது. தொடர்ந்து, மேற்கு வங்க அரசியலில் இருக்கும் காலி இடத்தை நிரப்பும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியது. இதில் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது.
பா.ஜ.க பக்கம் தாவிய ஆதரவாளர்கள்!
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதே வேகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பா.ஜ.க ஆக்ரோஷமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பல தலைவர்களை தங்களது பக்கம் பா.ஜ.க இழுத்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மேற்கு வங்கத்தில் முதுகெலும்பு இல்லாமல் இருப்பதால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் கோட்டையைத் தகர்த்துவிட வேண்டும் என்று பா.ஜ.க துடிக்கிறது. இதற்காக மம்தா பானர்ஜியின் நெருங்கிய நண்பர்களைக்கூட பா.ஜ.க தன் வசம் இழுத்துவிட்டது. தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.கவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கடுமையான யுத்தத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற துடிப்புடன் மம்தா பானர்ஜி களம் கண்டிருக்கிறார். இதற்காக மம்தா பானர்ஜி வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியை விட்டுவிட்டு, தனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில், மம்தாவுடன் நெருங்கிய நண்பராக இருந்து, இப்போது பா.ஜ.கவுக்குச் சென்றுள்ள சுவெந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
Also Read: முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்; மருத்துவமனையில் அனுமதி!-தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க முடிவு
காலில் அடி, வீல் சேரில் பிரசாரம்!
மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை தேர்தல் பிரசாரத்திற்கு நந்திகிராமிற்கு சென்றபோது, யாரோ 4, 5 ஆட்கள் தன்னை காரில் தள்ளி கதவை அறைந்ததில் தன் காலில் அடிபட்டுவிட்டது என்று கூறி கட்டுப்போடப்பட்ட காலுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வீல்சேரில் சென்று பிரசாரம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மம்தா.
மம்தா பானர்ஜிக்கு வாழ்வா, சாவா என்ற சவாலை ஏற்படுத்தி இருக்கும் இத்தேர்தல், பா.ஜ.கவுக்கு கவுரவப் பிரச்னையாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையுடைய மம்தா பானர்ஜி, இப்போது மூன்றாவது முறையாக முதல்வர் வேட்பாளராகத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார்.
அரசியல் நகர்வுகளின் திசையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
source https://www.vikatan.com/news/politics/the-rise-of-mamata-banerjee-a-lady-who-breached-communists-fort
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக