Ad

வெள்ளி, 20 நவம்பர், 2020

சோளிங்கரில் களமிறங்கும் அன்புமணி - சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க ரெடி! #TNElection2021

அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் ரெடி. தவிர, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்துக்கு வருவதாகத் தகவல். தி.மு.க-வில் அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தன் 100 நாள் பரப்புரைப் பயணத்தை திருக்குவளையில் தொடங்கிவிட்டார். தவிர, தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஜனவரி 5-ம் தேதியிலிருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கவிருப்பதற்கான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியில், கமல் பிரசாரம் செய்வதற்கான வாகனம் ரெடியாகிவிட்டது. நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் பிரசாரத்திலும் இறங்கிவிட்டார்கள். இப்படி தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு களமிறங்கிவிட்டன.

உதயநிதி ஸ்டாலின்

கொரோனா நெருக்கடியின் காரணமாக, தமிழகத்தில் மே மாதம் தேர்தல், நடக்குமா நடக்காதா என்று குழப்பம் நிலவிவந்த நிலையில், பீகார் தேர்தல் அறிவிப்பும், கொரோனா காலத்தில் நடத்தப்படும் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவிப்பை வெளியிட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். சரி, 'பீகாரில் எப்படித் தேர்தல் நடக்கிறது என்று பார்ப்போம்' என தமிழக அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், மூன்று கட்டமாக பீகாரில் வெற்றிகரமாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. கூடவே, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``பீகாரைப்போல, மற்ற மாநிலங்களிலும் சரியான நேரத்தில் தேர்தல் நடக்கும்'' என்று அறிவித்திருப்பது தமிழக அரசியல் கட்சிகளை இன்னமும் முடுக்கிவிட்டிருக்கிறது.

அந்தவகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியில், கூட்டணி குறித்து இன்னும் அந்தக் கட்சியிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வராமல் இருக்கிறது. அதேவேளையில், அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என முப்படைகளின் கூட்டங்கள் தொகுதிவாரியாக இணையவழியாக நடந்துவருகின்றன. இந்தநிலையில், அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் இந்த முறை அரியலூர் மாவட்டத்திலுள்ள, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாகவும், அ.தி.மு.க கூட்டணியில் துணை முதல்வர் பதவியைக் கேட்கத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி முதன்முறையாக, 2004-ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்வாகி, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டு, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி-யாக வெற்றிபெற்றார். அடுத்ததாக, 2016-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கி, தருமபுரி மாவட்டம் பென்னகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ச்சியாக, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்தநிலையில் தற்போது அவர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், மத்திய அமைச்சராகப் பணியாற்றிவர்; முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கியவர்; இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவாரா? அப்படியே போட்டியிட்டாலும், கடந்த சில மாதங்களாக, காடுவெட்டி குருவின் குடும்பத்துக்கும் அந்தப் பகுதி பா.ம.க-வினருக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தும், குருவின் மகன் கனலரசன் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைச் சந்தித்ததோடு மட்டுமல்லாமல், `தி.மு.க-வை ஆதரித்துப் பிரசாரம் செய்வோம்’ என்று அறிவித்திருக்கும் வேளையில், பா.ம.க இது போன்ற ஒரு முடிவை எடுக்குமா?

குருவின் மகன் கனலரசன்

பா.ம.க வட்டாரத்தில் பேசினோம்,

``தனித்துப் போட்டியிட்ட போதுதான் அவர் முதல்வர் வேட்பாளர். அ.தி.மு.க., தி.மு.க போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்போது எப்படி அதை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்... இந்த முறை கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதனால், எம்.எல்.ஏ-வாக போட்டியிடுவதில் ஒன்றும் தவறில்லை. ஆகவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் சின்ன அய்யா கண்டிப்பாகப் போட்டியிடுகிறார். ஆனால், ஜெயங்கொண்டம் தொகுதியில் இல்லை. அந்தப் பகுதி நிர்வாகிகள் சிலருக்கு அப்படியொரு விருப்பம் இருக்கலாம். அதனால், இது போன்ற செய்திகளைக் கிளப்பிவிடுகிறார்கள். எங்கள் சின்ன அய்யா, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள, சோளிங்கர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே, சோளிங்கர், பென்னாகரம் ஆகிய இரு தொகுதிகள் விவாதிக்கப்பட்டு கடைசியாகத்தான் பென்னாகரத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அங்கு அவரால் வெற்றிபெற முடியவில்லை.

Also Read: `அன்புமணி ஏன் எடுபடவில்லை... சீமானின் இலக்கு'-`முதல்வர் வேட்பாளர்' சொல்லும் லாஜிக் #TNElection2021

அதேவேளையில், சோளிங்கர் தொகுதியில் கடந்த முறை எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சரவணன், 51,000 வாக்குகள் வாங்கினார். அந்தத் தொகுதியில் எங்களுக்கு இருக்கும் வாக்குகள் நிலையானவை. அதனால் அந்தத் தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறோம், கண்டிப்பாக எங்கள் சின்ன ஐயா இந்த முறை வெற்றிபெறுவார். யாருடன் கூட்டணி என்பது இன்னும் முடிவாகவில்லை. வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் கோரிக்கைவைத்து இன்னும் அவர் அதை நிறைவேற்றவில்லை. ஆனால், ஸ்டாலின் அதை நிறைவேற்றுகிறேன் என வாக்குகுறுதி கொடுத்திருக்கிறார். ஆனால், கலைஞர் பலமுறை அது போன்ற வாக்குறுதியைக் கொடுத்து நிறைவேற்றவில்லை. அதனால் கூட்டணி குறித்து, அனைத்து விஷயங்களையும் சிந்தித்து அய்யா ராமதாஸ் நல்ல முடிவை எடுப்பார். துணை முதல்வர் குறித்த விஷயமெல்லாம் இன்னும் முடிவாகவில்லை'' என்கிறார்கள் அவர்கள்.

ராமதாஸ் - அன்புமணி

``1991-ல் தி.மு.க., அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டபோதே சோளிங்கரில், 22,600 வாக்குகள் பெற்றது பா.ம.க. அதற்கு அடுத்ததாக, 96-ல் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் மற்றும் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு, 31,431 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து, 2001, 2006-ல் நடந்த தேர்தல்களிலும் பா.ம.க அங்கம்வகித்த கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. ஒரேயொருமுறை, 2011-ம் ஆண்டில் பா.ம.க அங்கம்வகித்த கூட்டணிக்கு எதிர்க்கூட்டணியில் தே.மு.தி.க-வின் சார்பில் போட்டியிட்டவர் வெற்றி பெற்றிருக்கிறார். 2016-ல் தனியாகப் போட்டியிட்டதால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 2019-ல் அங்கு நடந்த இடைத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் அங்கு போட்டியிட்ட ஜி.சம்பத் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதில் பா.ம.க-வின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. அதனால் மற்ற தொகுதிகளைவிட சோளிங்கரைத் தேர்வு செய்தால் அது அன்புமணிக்கு நிச்சயமாகக் கைகொடுக்கும் என பா.ம.க-வினர் எடுத்த முடிவு சரியானதுதான்'' என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மட்டுமல்ல, கட்சிகளின் முடிவுகளும் மாறலாம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/anbumani-contest-in-cholingar-pmk-ready-for-2021-assembly-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக