Ad

வெள்ளி, 20 நவம்பர், 2020

இதெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் மாடித்தோட்டம் அமைப்பீங்க... வாங்க! - வீட்டுக்குள் விவசாயம் - 2

``நம்ம நோக்கம் என்ன? விவசாயம் செய்யணும். ஆனா, வெளிய அதுக்கு வாய்ப்பில்ல. அதனால என்ன ப்ரோ... வீட்டுக்குள்ளயே விவசாயம் செய்வோம். அதைப்பத்தி தெரிஞ்சுக்குவோம்"னு போன அத்தியாயத்துல சொன்னதைப் பலரும் பாராட்டி வரவேற்பு கொடுத்திருக்கீங்க.

Also Read: வீட்டுக்குள்ளயே விவசாயம் செய்யவேண்டிய நேரம் வந்தாச்சு... ஆரம்பிக்கலாங்களா? - புதிய தொடர் - 1

சில பேர் `இன்னும் எதிர்பார்க்குறோம்'னு சொல்லியிருக்கீங்க. உங்க எதிர்பார்ப்பு நிறைவேறும். இந்தத் தொடர்ல வீட்டுத்தோட்டம் பற்றி நான் மட்டும் பேசப்போறதில்லீங்க. இதுல பழம்தின்னு கொட்டை போட்ட பலபேர் இருக்காங்க. வீட்டு விவசாயத்துல முன்னோடியா இருக்கவங்க, அது தொடர்பா ஆலோசனை சொல்றவங்க, தோட்டக்கலைத்துறையைச் சேர்ந்தவங்க, விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள், பூச்சியியல் வல்லுநர்கள்னு நிறைய பேர் உங்களோட பேசப்போறாங்க. அவங்களோட ஆலோசனை, வழிகாட்டுதல்கள் மூலமா ஒவ்வொரு வீட்டுலயும் ஒரு விவசாயி உருவாகணும். அதுதான் இந்தத் தொடரின் நோக்கம். சரி, நாம இப்ப விஷயத்துக்கு வருவோம்.

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம் பற்றிய வரலாறு போன தடவை பார்த்தோம். இந்தத் தடவை வீட்டுத்தோட்டம் அமைக்குறதுல அடிப்படை விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம். `மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'ன்னு சொல்லுவாங்களே... அதுதாங்க இதுக்கு முக்கியம்.

சேலத்தைச் சேர்ந்த அருள், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவால ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயத்துக்கு வந்தவர். இவர் ஆலோசனையில உருவான வீட்டுத்தோட்டங்கள் 2,000-க்கும் அதிகம். வீட்டுத்தோட்டம் அமைக்குறதுல அடிப்படை விஷயங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பா அவர் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

``வீட்டுத்தோட்டம் அமைக்கிறது ஒரு வாழும் கலை. எல்லோரும் இதைச் செய்யணும். வீட்டுல விவசாயம் செய்றதால மனசுக்கு ஆரோக்கியம், உடம்புக்கு உடற்பயிற்சி கிடைக்குது. அதோட காய்கறி செலவு குறையுறதோட மருத்துவ செலவும் குறையும். வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வம்தான்ங்க அடிப்படை. அது இருந்தா செயல்ல இறங்கிடலாம். இதுக்கு ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. அதிக செலவும் செய்யத் தேவையில்ல. இதுக்காக விற்பனையாகுற பையிலதான் செடிகளை வளர்க்கணும்னு இல்லீங்க.

நம்ம வீட்டுல பயனில்லாம இருக்க

வாட்டர் கேன்,

உடைஞ்ச குடம்,

சிமென்ட் தொட்டி

- இப்படி கிடைக்குற பொருள்ல செடிகளை வளர்க்கலாம். வீட்டுல கிடைக்குற காய்கறி வேஸ்ட்டை உரமாக்கலாம். அரிசி கழுவுற தண்ணியில திறன்மிகு நுண்ணுயிரினு சொல்லக்கூடிய இ.எம் இருக்குது. அது செடிகளுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கி. இப்படி எல்லாம் நம்மகிட்டயே இருக்குது. கையில வெண்ணெய்யை வெச்சுகிட்டு நெய்க்கு அலைஞ்ச கதையாதான் இருக்கு நம்ம பொழப்பு.

அருள் பரமசிவம்

இன்னிக்கு அவசர உலகத்துல இருக்கோம். சமைக்கிறதுக்கு நேரம் இல்லாம ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுறோம். துணி, கால்ல போடுற செருப்பு எல்லாத்துலயும் பிராண்ட் பார்க்குறோம். ஆனா, நம்ம ஆரோக்கியத்தைக் காக்குற காய்கறிகள்ல நாம அந்த அக்கறையைக் காட்டுறதில்லை. தக்காளி இல்லைன்னா, கத்திரிக்காய், அதுவும் இல்லைன்னா வெண்டைக்காய்ன்னு கிடைக்கிறதை வாங்கிட்டுப் போயிட்டே இருக்கோம்.

சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும். நம்ம உடம்பு ஆரோக்கியமா இருந்தாதானே அவசர உலகத்துல ஓட முடியும். அதுக்கு உதவுறதுதான் வீட்டுத்தோட்டம்.

அந்தக் காலத்துல அடுப்புல இருக்க சட்டியில எண்ணெய்யை ஊத்திட்டு, ஓடிப்போய்க் கறிவேப்பிலை பறிச்சுட்டு வந்து போடுவாங்க. அப்படி வீட்டுலயே தேவையான செடிகளை வளர்த்த பாரம்பர்யம் நம்முடையது. இப்ப மறுபடியும் அப்படியொரு நிலைமை உருவாகிட்டு இருக்கு.

வீட்டுத்தோட்டம் அமைக்குறவங்களுக்கு ஆர்வம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிகம் பொறுமை வேணும். இந்தப் பொறுமை இல்லாமதான் பலபேர் ஆர்வத்துல வீட்டுத்தோட்டம் போட்டுட்டு பிறகு, அதைக் கைவிட்டுட்டுப் போயிடுறாங்க. அதனால பொறுமைதான் அடிப்படை விஷயங்கள்ல முக்கியமானது.

- முதல்ல எந்த மீடியத்துல செடிகளை வளர்க்கப் போறோம்னு முடிவு பண்ணிக்கோங்க.

பை,

பழைய சாக்கு,

பிளாஸ்டிக் குடம்,

வாட்டர் கேன் - இப்படி எதுவேணாலும் இருக்கலாம். அதை எடுத்துக்கிட்டு அதுல செடிகள் வளரத் தேவையான பொருள்களைச் சேர்க்கணும்.

தேங்காய் நார்க்கழிவு,

எரு,

செம்மண் - இது மூணுதான் அந்தப் பொருள்கள்.

- இதை இஷ்டத்துக்குப் போடக்கூடாது. 30 % தேங்காய் நார்க் கழிவு, 30 % எரு (சாண எரு அல்லது மண்புழு உரம்) 40 % செம்மண் போடணும்.

- பலபேர் வெறும் செம்மண் மட்டும் போடுறாங்க. அதுல தொடர்ந்து தண்ணி ஊத்துறதால கொஞ்ச நாள்ல அது கட்டியாகி செங்கல் மாதிரி ஆகிடும். அதுனால செம்மண்ணை மட்டும் தனியா பயன்படுத்துறதைத் தவிர்க்கணும்.

- மேலே சொன்ன விகிதத்துல மூணு பொருள்கள் சேர்த்து பையை நிரப்பணும். அதுல விதையை நடவு செய்யலாம். ஒரு பையில ஒரு விதை அல்லது நாற்றுதான் நடவு செய்யணும். இதுல ரொம்ப கவனமா இருக்கணும். ரொம்ப பேர் செய்ற தவறு, ஒரு பையில பல விதைகளை நடவு செஞ்சிடுறாங்க. அப்படி செய்யக் கூடாது.

மத்தியில் இடைவெளி

ஒரு சாப்பாட்டை ஒருவர் சாப்பிடுறதுக்கும், ரெண்டு மூணு பேர் சாப்பிடுறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல? அதுதான் இங்கயும் நடக்கும்.

- அதேபோல ஒரு செடி மேல அடுத்த செடி மோதாத அளவுக்குப் போதுமான இடைவெளி இருக்கணும். அதுபோல ஓரங்கள்ல மஞ்சள் கலர் பூப்பூக்குற சாமந்தி மாதிரியான பூக்களை வைக்கணும். இது பூச்சித்தாக்குதல்ல இருந்து செடியைக் காப்பாத்த உதவும். ஏன்னா, முதலில் பூச்சிகளை சாமந்தி பூ ஈர்த்திடும்.

- ஒரு பயிர் மகசூல் முடிஞ்சதும் அந்தப் பையில அதே பயிரை மறுபடியும் நடவு செய்யக் கூடாது. வேற பயிரைச் சாகுபடி செய்யணும். உதாரணமா தக்காளி மகசூல் முடிஞ்சதும் அடுத்த முறை தக்காளியைத் தவிர்த்துக் கத்திரி, வெண்டையென வேறு பயிர்களைச் சாகுபடி செய்யணும்.

- இப்படி மூன்று வெவ்வேறு பயிர்களைப் பயிர் செஞ்ச பிறகு நான்காவது முறைதான் அந்தப் பையில தக்காளியைச் சாகுபடி செய்யணும். செடிகளுக்குத் தண்ணீர் ஊத்துறதுல கவனமா இருக்கணும்.

- மாடித்தோட்டத்தில காலையில மட்டும்தான் தண்ணீர் ஊத்தணும். மாலை நேரங்கள்ல ஊற்றக் கூடாது. காலையிலிருந்து சூரிய ஒளியில செடிகள் சூடாகி இருக்கும். அந்தச் செடிகளுக்குச் சாயங்காலம் தண்ணி ஊத்தும்போது, உடனே குளிர்ந்து போகும். இது செடிகளுக்கு ஆபத்து. இது தொடர்ச்சியா நடந்தா செடி செத்துப்போயிடும்.

- அதே போல மாடியில செடி வைக்கிற பையை நேரடியா தரையில வைக்கக் கூடாது. தரை வெயில்ல சூடேறும்போது கூலிங்கான இடத்தைத் தேடி வெப்பம் குவியும். மாடியில கூலிங்கான இடம்னா நாம செடி வைச்சிருக்க பைகள்தான். அதுனால சூடு அங்க போயிடும். அதுனால செடி வைக்குற பையுக்கும், மாடியோட தரைக்கும் இடையே `மைக்ரோ கேப்' கிடைவெளி இருக்கணும். செங்கல் மேல வைக்கிறது. பலகை மேல வெச்சு இடைவெளியை உருவாக்கணும்.

தரைக்கும் பைகளுக்கும் இடைவெளி

- சிலர் மாடியில தொட்டி கட்டுறாங்க. என்னோட பரிந்துரை மாடியில தொட்டி கட்டி வளர்க்கக் கூடாது. இப்ப பைகள் மாதிரியான மற்ற ஊடகங்கள்ல வளர்க்கும்போது தோட்டத்தை நம்ம தேவைக்கு ஏத்த மாதிரியா மாத்தி அமைச்சுக்கலாம். மாடியில ஒரு சின்ன ஃபங்ஷன் நடக்குதுன்னா, பைகளை மையமாக வைக்கலாம். ஓரமாக வைக்கலாம். வட்டமா வைக்கலாம். சதுரமாக வைக்கலாம். எப்படி வேண்டும்னாலும் வைக்கலாம். ஆனா, தொட்டியில அதைச் செய்ய முடியாது.

- அதே நேரம் மாடிச் சுவரை ஒட்டி தொட்டி போலக் கட்டி அதுல செடிகளை வளர்க்கலாம்.

- மாடித்தோட்டத்துல ரொம்ப பேர் `ஹைபிரிட்' விதைகளை நடவு செய்றாங்க. அது தவறு. மாடித்தோட்டம் வைக்குறதுக்கான அர்த்தமே நாம ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டெடுக்கத்தான். அதுக்கு நாட்டு விதைகளைப் பயன்படுத்துறதுதான் சரியான முறை.

- இன்னிக்கு நாட்டு விதைகள் ஊர் ஊருக்குக் கிடைக்குது. விவசாய சம்பந்தமான `வாட்ஸ் அப்' குழுக்கள்ல விதை வெச்சிருக்க விவசாயிகளோட முகவரி, தொடர்பு எண் எல்லாம் வருது. நாம தேடணும். தேடுனா கிடைக்காதது ஒண்ணும் இல்லீங்க.

- ஆரோக்கியமா இருக்க இயற்கையான காய்கறிகளைச் சாப்பிடணும். அதுக்கு மாடித்தோட்டம் கட்டாயம் அமைக்கணும். நம்ம உற்பத்தியாளர்களையோ, வியாபாரிகளையோ குறை சொல்லக் கூடாது. அது நம்ம வேலையும் இல்ல. நமக்குத் தேவையான காய்கறிகளை நாமளே உற்பத்தி பண்ணிக்கணும்.

நம்ம செடியில 100 காய்கள் காய்க்க வேண்டாம். 10 காய்கள் காய்த்தாலும் போதும். அதோட சுவை வேற மாதிரி இருக்கும்.

கத்திரிக்காய்

அத்தனை ஃபிரெஷ்ஷான காய்களை வேற எங்கேயும் வாங்க முடியாது. `காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு'ன்னு சொல்ற மாதிரி நாம உற்பத்தி செஞ்சு சாப்பிடுறப்போ மனசு மகிழ்ச்சியாயிடுது. நஞ்சில்லா காய்கறிகளைச் சாப்பிடுறதுனால உடம்பும் ஆரோக்கியமாயிடுது.''

மாடித்தோட்டம்

மாடித்தோட்டம் அமைக்குறவங்க செடிகளை எந்த ஊடகத்துல வளர்க்கணும். என்னென்ன தவறுகளைச் செய்யக் கூடாதுனு பல விஷயங்களைப் பகிர்ந்துகிட்ட அருள், முதன்முதல்ல மாடித்தோட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயி, என்னென்ன பயிர்களை முதல்ல வளர்க்கணும், அதை எப்படிப் பராமரிக்கணும்னு இன்னும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதை அடுத்த பகுதியில பார்க்கலாம். அடுத்த பகுதி திங்கள் அன்று வெளியாகும். தொடர்ந்து இணைந்திருங்க... `வீட்டுக்குள் விவசாயம்' தொடர்பான உங்க கேள்விகள் / சந்தேகங்களை கமென்ட்ல கேளுங்க!

- வளரும்


source https://www.vikatan.com/news/agriculture/an-initial-guidance-to-set-up-terrace-garden-in-your-home-veetukkul-vivasayam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக