Ad

புதன், 21 அக்டோபர், 2020

மனநலம் பாதிக்கப்பட்ட பேத்தி, புற்றுநோய் பாதிப்பில் பாட்டி... ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை!

``நாங்க நல்லா வாழ்ந்த குடும்பம்யா... இப்படி நாதியத்து நிப்போம்'னு கனவுலகூட நினைச்சுப் பாத்தது கிடையாது. இதோ நிக்கிறா பாருங்க... இவ என் பேத்தி, புத்தி சுவாதீனம் இல்லாதவ. இவளுக்கு என்னை விட்டா யாருமில்ல. ஆனா, இந்த உசுரு அவளுக்கு ஆதரவா இன்னும் எவ்வளவு நாளைக்கு இருக்கும்னு தெரியல" தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்த லெட்சுமி அதற்குமேல் பேச முடியாமல் பெருங்குரலெடுத்து அழுகிறார். தன் நிகழ்காலத்தையும் பேத்தியின் எதிர்காலத்தையும் நினைத்தாலே கண்ணீர் பெருக்கெடுக்கிறது லெட்சுமிக்கு.

சேலம் மாவட்டம், களரம்பட்டியைச் சேர்ந்த லெட்சுமிக்கு வயது 60-க்கு மேல் இருக்கும். தன் வாழ்வின் முதுமைப் பருவத்தில் அவர் அனுபவிக்கும் துயரம் சொல்லில் அடங்காதது. `அடி மேல் அடி... இடி மேல் இடி' என்று கிராமத்தில் சொல்வார்களே... லெட்சுமியின் வாழ்வு அப்படியானதுதான். ``மருமகள், மகன், கணவன் என தன் குடும்ப நபர்களை ஒவ்வொருவராக அடுத்தடுத்து இழந்த லெட்சுமி, மனநிலை பாதிக்கப்பட்ட தன் பேத்தியை தனி ஆளாக வளர்த்து வந்தார். இந்தச் சூழலில், லெட்சுமியை வாய் புற்றுநோய் தாக்கியிருக்கிறது. ஆனால், தனக்குப் புற்றுநோய் இருப்பது இன்னும் அவருக்குத் தெரியாது" என்று ஒரு மருத்துவர் மூலம் நமக்குத் தகவல் கிடைக்க, லெட்சுமியைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றோம்...

லெட்சுமி, ஸ்வேதா

குடிசை மாற்று வாரியத்தில் வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடு... உள்ளே குடும்பம் வசிப்பதற்கான அடையாளத்துக்குகூட எந்தச் சாமான்களும் இல்லை. உடைந்த கட்டில்... பழுதான ஸ்டவ்... பெயருக்கு சில பாத்திரங்கள் இருக்கின்றன அவ்வளவுதான். கிட்டத்தட்ட பாழடைந்த நிலையில் இருக்கிறது இந்த வீடு. அறைக் கதவைத் திறந்ததும் திமிறி ஓடி வருகிறார் லெட்சுமியின் பேத்தி ஸ்வேதா மேரி. பேத்தியை ஆசுவாசப்படுத்திவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார் லெட்சுமி.

``என் வீட்டுக்காரர் பேரு அண்ணாமலை. எங்களுக்குப் பிறந்தது ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் மூணு பிள்ளைங்க. ஒரு பொண்ணை சின்னதுலயே என் நாத்தனாருகிட்ட கொடுத்துட்டோம். ஒரு பெண்ணையும் ஆணையும் நாங்க பாசத்தைக் கொட்டி வளத்தோம். பையன் பேரு ரவி, பொண்ணு பேரு கவிதா.

அப்போ என் வீட்டுக்காரர் டிரைவர் வேலைக்குப் போயிக்கிட்டிருந்தார். கிடைக்கிற வருமானம் கொஞ்சம்தான்னாலும் சந்தோஷத்துக்கு குறைச்சல் இல்லை. எம் பொண்ணு கவிதாவை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். அப்பாவைப் போலவே டிரைவர் வேலைக்குப் போன என் மகன் ரவி, ஆந்திராவுல இருந்து மாலதிங்கிற ஒரு பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டு வந்தான். மாலதி ரொம்ப தங்கமான பொண்ணு. எங்க பொண்ணுங்களைவிட என் மேலயும் என் வீட்டுக்காரர் மேலயும் அன்பா இருந்தா. இப்படி ஒரு மருமக கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்னு சொந்தகாரங்கள்லாம் சொல்லுவாங்க. யார் கண்ணு பட்டுச்சோ தெரியல... எங்க சந்தோஷம் கடற்கரையில கட்டுன மண் கோபுரத்தைப்போல சட்டுன்னு கரைஞ்சுருச்சு" அனிச்சையாக வழியும் கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார்...

``கல்யாணம் ஆன சில மாசத்துலயே என் மருமக கர்ப்பமாயிட்டா... சீக்கிரமா பேரனையோ பேத்தியையோ பெத்துக்கொடுன்னு சொல்லி நாங்கல்லாம் காத்துகிட்டிருந்தோம். ஆனா, பாவி சிறுக்கி... அழகான பெண் குழந்தையைப் பெத்துப் போட்டுட்டு அந்தக் குழந்தையோட முகத்தைக் கூட பார்க்காம பிரசவத்தப்போவே செத்துப் போயிட்டா. அவளோட சாவை எங்க யாராலயும் ஏத்துக்க முடியல. `அவ போனாலும் அவளோட மறு உருவமா ஒரு பெண் குழந்தையை பெத்துக் கொடுத்துட்டு போயிருக்கா'ன்னு சொல்லி மனசைத் தேத்திக்கிட்டு குழந்தையை வளர்க்க ஆரம்பிச்சோம். ஆனா என் மகன், மாலதியோட நெனப்புல இருந்து மீளவே இல்ல. நடை பிணமாவே சுத்திகிட்டிருந்தான். என் மருமக செத்து ஆறு மாசம் கூட ஆகலலை. ஒருநாள் உட்கார்ந்திருந்த வாக்குல அப்படியே என் மகன் உசுரு போயிருச்சு. நானும் என் வீட்டுக்காரரும் சுக்குநூறாயிட்டோம். அதுக்கு மேல வாழவே பிடிக்கலைன்னாலும், எங்க பேத்தி ஸ்வேதா மேரியை வளர்த்து ஆளாக்கணும்ங்கிற ஒரே காரணத்துக்காக வாழ்க்கையை ஓட்டினோம்.

அப்போல்லாம் என் பேத்திக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. நல்லாத்தான் இருந்தா. அவளை அவங்க அம்மா போலவே அன்பானவளா வளர்த்து ஆளாக்கணும்னு நினைச்சோம். நாங்க யாருக்கு என்ன பாவம் செஞ்சோமோ தெரியல. அந்த நெனப்புலயும் மண்ணு விழ்ந்துச்சு. என் பேத்திக்கு மூன்றரை வயசு இருக்கும்போது ஒரு தென்னை மட்டை தலையில விழுந்திருச்சு. அதுல புத்தி பேதலிச்சுப் போனவதான்... இப்போ 18 வயசு ஆகுது இன்னும் சரியாகலை. எங்க சக்தியை மீறி கேரளா, பெங்களூருன்னு பல இடங்கள்ல வைத்தியம் பார்த்தோம். ஆனா, ஒரு பிரயோசனமும் இல்ல. திருவண்ணாமலை, சேலத்துல வின்சென்ட், கன்னங்குறிச்சின்னு நாலஞ்சு ஹோம்லயும் சேர்த்துப் பாத்தாச்சு. `ஆத்தா கூடத்தான் இருப்பேன்'னு சொல்லி அடம்பிடிச்சதால அங்கிருந்து அனுப்பிவிட்டுட்டாங்க. இதுக்கு மேல நம்ம பேத்தியை எங்கயும் அனுப்ப வேணாம் நம்ம உசுரு இருக்கவரை நாமளே பாத்துக்கலாம்'னு என் வீட்டுக்காரர் தைரியம் கொடுத்தார். ஆனா..." என்ற லெட்சுமியின் குரல் மீண்டும் ஒரு பெரும் சோகத்தைச் சொல்ல இயலாமல் உடைகிறது...

`வாசன் சாரிடபிள் டிரஸ்ட்' மூலம் கொடுக்கப்பட்ட பொருள்கள்

``வயசானதுக்குப் பிறகு என் வீட்டுக்காரரால டிரைவர் வேலைக்குப் போக முடியலை. வாட்ச் மேன் வேலைக்குப் போய்கிட்டிருந்தார். அவருக்கு கிடைக்கிற வருமானத்தையும் என் மகள் கவிதாவோட வீட்டுக்காரர் அப்பப்போ செய்யற உதவியிலயும்தான் வாழ்க்கையை ஓட்டிகிட்டிருந்தோம். பத்து மாசத்துக்கு முன்னாடி திடீர்னு என் வீட்டுக்காரர் படுத்த படுக்கையா ஆகிட்டார். `மூளையில கட்டி இருக்கு... காப்பாத்த முடியாது'ன்னு ஆஸ்பத்திரில சொல்லிட்டாங்க. கொஞ்ச நாள்லயே செத்துப்போயிட்டார்" என்று கலங்கியவர், ``தெய்வம் அதோட எங்களை சோதிக்கிறதை நிறுத்தல, என் மருமகனுக்கும் `ஹார்ட் அட்டாக்' வந்து கை கால் விழுந்துருச்சு. என் மக ஒரு பக்கம் ரெண்டு பிள்ளைகளை வெச்சுகிட்டு கஷ்டப்படுறா... நான் ஒரு பக்கம் புத்தி சுவாதீனம் இல்லாத பேத்தியை வெச்சுகிட்டு கஷ்டப்படுறேன்.

என் வீட்டுக்காரரை ஆஸ்பத்திரியில வெச்சிருந்தப்போ பணம் இருக்கிறதா நினைச்சு ரேஷன் கார்டு, ஆதார் கார்டுலாம் இருந்த பையை யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க. ரேஷன் கார்டு இல்லாததால இலவச அரிசிகூட வாங்க முடியல. சாப்பாட்டுக்கே வழி இல்லை. பக்கத்துல இருக்கிற இட்லி கடையில கடனுக்கு காலையில இட்லி வாங்கிக் கொடுத்திருவேன். யாராவது உதவி பண்ணாதான் சாப்பாடு. நாங்க குடியிருக்க வீட்டுக்கு மாசம் 350 ரூபா கட்டணும். ஒரு வருஷத்துக்கு மேல கட்டல. இந்தச் சூழல்ல எனக்கும் உடம்புக்கு முடியாமப் போகுது, வாய்ல புண் வந்திருச்சு. வலி உசுரு போகுது. ஸ்கேன் பண்ணணும்... தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்றார். என் பேத்தியை வெச்சுகிட்டு நான் எங்க தொடர்ந்து சிகிச்சைக்குப் போறது? இவளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கறதுக்கே தெருத்தெருவா அலைய வேண்டியிருக்கு. இந்த லட்சணத்துல நான் எங்க வைத்தியம் பாக்கப் போறது. ஸ்டவ் அடுப்பு கெட்டுப் போயிருச்சு... வீட்ல ஒரு பாத்திரமும் இல்லை உங்களால ஏதாவது உதவ முடியுமா?" என்றார் கண்ணீருடன்.

மணி மற்றும் அவரின் நண்பர் மனோகர் உதவியபோது...

விகடனின் `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்' மூலம் லெட்சுமியின் உடனடித் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய ஸ்டவ் அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கினோம். இந்தத் தகவலை நம் மூலம் தெரிந்துகொண்ட சேலத்தைச் சேர்ந்த மணியும் அவரின் நண்பர் மனோகரும் சேர்ந்து லெட்சுமி வீட்டுக்குத் தேவையான பாத்திரங்களும் மேலும் அரிசி மற்றும் மளிகை பொருள்களும் வழங்கினர். இவையனைத்தும் லெட்சுமியிடம் சேர்க்கப்பட்டன. அடுத்த சில மாதங்களுக்கு லெட்சுமிக்கு பிரச்னை இல்லை. ஆனால், அதற்குப் பிறகு?



source https://www.vikatan.com/news/general-news/a-tragic-story-of-salem-old-woman-lakshmi-and-her-family

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக