Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

`ரீடெயில் ராஜாவாகுமா ரிலையன்ஸ்?' ஃப்யூச்சர் டீலும், அமேசான் முட்டுக்கட்டையும்!

ஃப்யூச்சர் குழுமத்தின் ரீடெய்ல் பிரிவினை ரூ.24,713 கோடிக்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் வாங்கியது. இது தொடர்பான கேள்விக்குதான் கிஷோர் பியானி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமத்துக்கு விற்கக் கூடாது என அமேசான் நிறுவனம் சிங்கப்பூர் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு (எஸ்.ஐ.ஏ.சி) தொடுத்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 26-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

அமேசான் வழக்கு ஏன்?

ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தின் 49% பங்குகளை ரூ.1,430 கோடிக்கு அமேசான் வாங்கியிருந்தது. இந்த ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனம் ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் 7.2% பங்குகளை வைத்திருக்கிறது. அதாவது, மறைமுகமாக ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் சுமார் 5% பங்குகளை அமேசான் வைத்திருக்கிறது.

ஃப்யூச்சர் குழுமத்தின் பங்குகளை விற்பதாக இருந்தால் அமேசான் அனுமதிக்குப்பிறகே விற்கமுடியும் என ஒப்பந்தம் (right of first refusal) போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்ததத்தை ஃப்யூச்சர் குழுமம் மீறி இருக்கிறது. தவிர, ``நெகட்டிவ் பட்டியல் என நாங்கள் பட்டியல் செய்திருந்த நிறுவனங்களில் ரிலையன்ஸும் ஒன்று. எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி விற்க முடியும்?" என அமேசான் வழக்கு தொடுத்திருக்கிறது.

அமேசான்

மேலும், ``ஃப்யூச்சர் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்துக்கு இடையேயான ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில் ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தில் நாங்கள் ஏற்கெனவே செய்திருந்த முதலீடு வீணாகும்" என அமேசான் கருதுகிறது.

இதற்கிடையே ஃப்யூச்சர் குழுமம் சிக்கலில் இருந்தபோது நிறுவனத்தை விற்பது தொடர்பான தகவல்கள் வெளியாகின. அப்போது பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்துக்கு ஃப்யூச்சர் ரீடெய்லை விற்பதை அமேசான் விரும்பியது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மறைமுகமாக எடுத்தது. ஆனால், ஃப்யூச்சர் குழுமம் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்தை விட்டுவிட்டு ரிலையன்ஸூக்கு விற்க முடிவெடுத்தது.

பின்னணியில் ரீடெய்ல் சந்தை

ரீடெய்ல் சந்தையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் மிகப் பெரிய போட்டி நடந்துவருகிறது. ஒட்டுமொத்த ரீடெய்ல் சந்தையில் ஆன்லைன் பங்கு என்பது மிகவும் குறைவானது. இந்தக் குறைவான சந்தையில் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜியோமார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதனால் ஆஃப்லைன் (ரீடெய்ல் கடைகள்) சந்தையில் அமேசான் கவனம் செலுத்தியது.

அமேசான் மற்றும் சமரா கேபிடல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆதித்யா குழுமத்தைச் சேர்ந்த `மோர்’ நிறுவனத்தில் சுமார் ரூ.4,000 கோடியை முதலீடு செய்தன. இந்த நிறுவனம் வசம் சுமார் 620 கடைகள் மட்டுமே உள்ளன.

Mukesh ambani

தற்போது ரிலையன்ஸ் வசம் 12,000 கடைகள் உள்ளன. தவிர ஃப்யூச்சர் குழுமம் வசம் சுமார் 1,500 கடைகள் உள்ளன. ஏற்கெனவே மிகப்பெரிய குழுமமாக இருக்கும் ரிலையன்ஸ், ஃப்யூச்சர் குழுமத்தை வாங்கும்பட்சத்தில். ரீடெய்ல் துறையில் அசைக்க முடியாத நிறுவனமாக மாறும்.

`ஃப்யூச்சர் குழுமத்தில் அமேசான் முதலீடு செய்துள்ள நிலையில் அமேசான் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரிடம் நிறுவனத்தை எப்படி விற்க முடியும்?’ என்றுதான் இப்போது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

ஃப்யூச்சர் குழுமம் கூறுவது என்ன?

``அமேசான் நிறுவனம் முதலீடு செய்திருப்பது ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தில்தான். அதனால் ஃப்யூச்சர் ரிடெய்ல் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அமேசான் தடுக்க முடியாது" என தன்னுடைய வாதத்தில் தெரிவித்திருக்கிறது. மேலும், ``ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஐவர் உள்ளனர். இதில் இருவர்தான் புரமோட்டர்கள். மற்றவர்கள் தனிப்பட்ட இயக்குநர்கள். அதனால் நிறுவனத்தின் விற்கும் நடவடிக்கையை எடுத்தது இயக்குநர் குழு. இதில் புரமோட்டர்களுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது" என ஃப்யூச்சர் நிறுவனம் கூறியிருக்கிறது.

Kishore Biyani

கடன் ரூ.30,000 கோடி

ஃப்யூச்சர் குழுமத்தை விற்பதற்கு முக்கியமான காரணம், குழுமத்தின் கடன்தான். மார்ச் மாத முடிவில் அந்நிறுவனத்திற்கு சுமார் ரூ.30,000 கோடி அளவுக்குக் கடன் இருக்கிறது. இதில் வங்கிகளின் கடன் அல்லாமல், கடன் பத்திரங்கள் மூலமாகவும் நிதியைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ரிலையன்ஸுடன் செய்யப்பட்ட டீல் இன்னும் முடிவடையாமல் இருப்பதால், கடன் தொகையை செலுத்த முடியாத சூழலில் இருக்கிறது.

மார்ச் மாதத்திலிருந்து, ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகையைப் பயன்படுத்தி கடன் தொகையைச் செலுத்தாமல் இருந்தது. தற்போது கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான பணியை ஃப்யூச்சர் குழுமம் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அக்டோபர் 26-ம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணைக்கான தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ரிலையன்ஸ் டீலுக்குத் தீர்ப்பாயம் ஓகே சொல்லும்பட்சத்தில் ஃப்யூச்சர் குழுமத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஒருவேளை எதிராகத் தீர்ப்பு சொன்னால், ரிலையன்ஸுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பெரிய அளவிலான நெட்வொர்க் இருக்கிறது. சந்தையில் பெரிய நிறுவனம். தவிர, சமீபத்தில் ரூ.37,710 கோடி அளவுக்கு நிதி திரட்டியிருக்கிறது. ஆனால், ஃப்யூச்சர் குழுமம் கடும் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும். கடனை அடைக்க வேறு வழியை யோசிக்க வேண்டியிருக்கும். அதைவிட ஃப்யூச்சர் குழுமத்துக்குக் கடன் கொடுத்த வங்கிகளும் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆக, மொத்தம் அடுத்த சில நாட்கள் ஃப்யூச்சர் குழுமத்திற்கு மிக சவாலான நாட்கள்!



source https://www.vikatan.com/business/finance/why-amazon-objecting-future-group-reliance-deal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக