Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

சிராஜ்தானேன்னு சிக்ஸர் அடிக்கலாம்னு பார்த்தியா... இது ஸ்விங்கர் சிராஜ் 2.0 ப்ரோ! #Siraj

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார்கள். அதுபோலத்தான் கிரிக்கெட்டிலும்... நிரந்தர ஹீரோவும் இல்லை, நிரந்தர வில்லனும் இல்லை. கொண்டாடப்பட்டவர்கள் தூக்கிமிதிக்கப்படுவதும், துரத்தியடிக்கப்பட்டவர்கள் கொண்டாடப்படுவதும் அவரவர் ஃபார்ம் பொறுத்தது. கடந்த சில சீசன்களாக சிராஜ் என்றாலே ஏளனச் சிரிப்புதான் எல்லோரிடம் இருந்தும் வரும். ஆனால், அது நேற்று ஒரேநாளில் மொத்தமாய் மாறிவிட்டது.

நேற்று கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டி தொடங்கும்வரை ஐபிஎல் வரலாற்றின் மிக மோசமான பெளலர் பெங்களூருவின் முகமது சிராஜ்தான். அதாவது 100 ஓவர்களுக்கு மேல் பந்து வீசியுள்ள 92 பெளலர்களிலேயே மோசமான எக்கானமியான, 9.29 என்பதனை வைத்திருந்தவர் சிராஜ். ஒரு ஓவரில் குறைந்தது 10 ரன்களாவது கொடுக்கும் வள்ளலாக இருந்தவர். ஆனால், நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக திரிபாதி, ரானா, பேன்ட்டன் என மூன்று முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கியதோடு, ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனைகளையும் செய்தார் சிராஜ். ஒரே போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய பெளலர் என்பதோடு, இவரின் எக்கானமி வெறும் 2 மட்டுமே. அதாவது நான்கு ஓவர்கள் வீசி, வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் சிராஜ். பும்ரா தொடங்கி ரபாடா, ஆர்ச்சர் வரை யாருமே ஐபிஎல்-ல் செய்யாத சாதனை இது.

#Siraj

26 வயதான சிராஜ் ஹைதராபாத்தில் பிறந்தவர். ஆட்டோ ஓட்டுநரின் மகன். அதனால் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தாலும் அவருக்கு முறையான கிரிக்கெட் பயிற்சியை அவரது குடும்பத்தால் கொடுக்க முடியாமல் போக, பள்ளியில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளும், டென்னிஸ் பந்து டோர்னமென்ட்டுகளும்தான் அவரது திறமையை வளர்ப்பதற்கான வாய்ப்பாக இருந்து வந்தன. 21 வயது வரை கிரிக்கெட் பாலில் விளையாடியே பழக்கமில்லாத சிராஜுக்கு கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக, 2015-ம் ஆண்டு ரஞ்சி ஹைதரபாத் அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. 2015/16 ரஞ்சியில், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியவர், அடுத்த சீசனில் 9 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தினார். எக்கனாமி வெறும் 2.86 மட்டுமே. இந்த சூப்பர் பர்ஃபாமென்ஸோடு, விஜய் ஹஸாரே தொடரிலும் ஏழே போட்டிகளில் 23 விக்கெட்கள் வீழ்த்தி அதகளப்படுத்தினார்.

இதுவரை 36 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் 147 விக்கெட்டுகளையும், 46 லிஸ்ட் ஏ போட்டிகளில் 81 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவை இரண்டிலும் சேர்த்து 7 முறை ஐந்து விக்கெட் ஹாலினை பதிவு செய்துள்ள சிராஜ், முதல் தரப் போட்டிகளில் 2 முறை பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைகள் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிராக 2018 பிப்ரவரியில் நடைபெற்ற போட்டி அவரை வேறு கட்டத்துக்கு எடுத்துச் சென்றது‌. அந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 19.3 ஓவர்கள் வீசிய சிராஜ், வெறும் 59 ரன்களை மட்டுமே கொடுத்து, 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்திய அணியின் பெளலிங் பயிற்சியாளர் பரத் அருணின் வழிகாட்டுதலில்தான் சிராஜ் பட்டைத் தீட்டப்பட்டார்.

#Siraj

ஐபிஎல் என்ட்ரி!

ரஞ்சி, விஜய் ஹஸாரே என உள்ளூர் போட்டிகளில் சிராஜின் சாதனைகளைப் பார்த்து 2017-ல் ஹைதராபாத் அணி இவரை 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டு சன்ரைசர்ஸுக்காக 6 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சிராஜ். அடுத்த ஆண்டே சிராஜை 2.2 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி.

விராட் கோலி இவரின் திறமையை நம்பி, அதிக போட்டிகளில் ஆடும் வாய்ப்பைக் கொடுத்தார். 2018-ம் ஆண்டு 11 போட்டிகளில் ஆடியவர், 11 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனாலும் இவரது எக்கானமி 8.95 என்ற அளவில்தான் இருந்தது. 2019-ம் ஆண்டு 9 போட்டிகள் ஆடியவர் 7 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த சீசனில்தான் பயங்கரமாக கிண்டல் அடிக்கப்பட்டார் சிராஜ். விளையாடிய போட்டிகளில் எல்லாம், 10 ரன்களுக்கு மேல் எக்கானமி கொடுக்க, ரசிகர்கள் இவரை அசோக் டின்டா அகாடமியில் சேர்த்து அட்மிஷன் கொடுத்துவிட்டார்கள். நல்ல ரெட் பால் பெளலரான சிராஜின் திறமை, ஒயிட் பால் கிரிக்கெட்டில் எடுபடாமல் போனது. ஏற்கனவே ஆர்சிபி அணியில் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த டிம் சவுதி, உமேஷ் யாதவ் வரிசையில் இவரும் சேர, அணி 2019-ம் ஆண்டு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. கோலியின் மீதும், ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர்களின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த மாதிரி ஒரு அணியை வைத்துக் கொண்டு கோலியால் எப்போதும் கப் அடிக்க முடியாது என்ற கேலிப்பேச்சுக்கள் நாலாபுறமும் எழுந்தன.

இந்த ஆண்டு ஐபிஎல் ஆரம்பப் போட்டிகளிலும், ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு கொஞ்சம் மோசமாகவே இருந்தது. ஆனால், உடனே சுதாரித்துக் கொண்ட கோலியும், ஆர்சிபி அணியும் அதை மொத்தமாக மாற்றிக் காட்டியுள்ளது. ஏற்கனவே மோரிஸ், உடானா, சைனி என நன்றாக பெளலிங் போடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும், நேற்று நான்காவது வேகப்பந்து வீச்சாளராக சிராஜை பெளலிங் லெவனில் சேர்த்தார் கோலி.

தொடர் கேலிகளால் துவண்டு போகாமல், தனது தொடர் முயற்சிகளால் இதுவரை எந்த பெளலரும் செய்யாத சாதனைகளைச் செய்திருக்கிறார் சிராஜ். இந்த பெளலிங் பர்ஃபாமன்ஸ், வெறும் ஒரு போட்டியோடு முடிந்துவிடாமல், இனி வரும் போட்டிகளிலும் தொடர்ந்தால் கோலிக்குக் கோப்பையை வாங்கிக்கொடுத்துவிடுவார் முகமது சிராஜ்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-who-is-mohammed-siraj-know-his-story-here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக