Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

16 பேர்... பாதி லாக்டௌனில் பிக்பாஸ் வீடு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 1

ஒரு வெள்ளைக் கோடு முழு உருவம் பெறத் துவங்கி, புகை சூழ, டிராலிஷாட்டில் நமக்கு அறிமுகமானார் கமல். அவரைப் போன்ற பொம்மையோ என்று முதலில் நினைக்கத் தோன்றியது. ‘ஞாபகம் வருகிறதா?’ என்கிற குடும்பப் பாட்டு பின்னணியில் ஒலிக்க நம்மைப் பார்த்து வசீகரமாகப் புன்னகைத்தார் கமல்.

அவரின் உடையலங்காரம் பிரமாதமாக இருந்தாலும் ஏதோ சண்டைக்குச் செல்லும் போர்வீரன் போல் இருந்தது. பெல்ட்டின் முனையில் ஒரு டப்பா தொங்கிக் கொண்டிருந்தது. அவசரத்திற்கு சாப்பிட புளியோதரையோ... தயிர் சாதமோ... கூடவே கையோடு எடுத்து வந்து விட்டார் போல.

பிக்பாஸ் வீட்டை நமக்கு அறிமுகப்படுத்தினார் கமல். வசீகரமான வண்ணமயத்துடனும் அழகியல் உணர்ச்சியுடனும் வீடு மிக மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் உழைத்த வடிவமைப்பாளர்களுக்கும் தொழிலாளத் தோழர்களுக்கும் மனமார்ந்த பாராட்டு. ஒவ்வொரு அங்குலத்திலும் அவர்களின் அட்டகாசமான திட்டமிடலும் அசாதாரமான உழைப்பும் தெரிந்தது.

பிக்பாஸ் - நாள் 1

(இதே போல் சிறிதாவது நம் வீட்டின் உள்அலங்காரம் இருக்கக்கூடாதா என்கிற ஏக்கமும் பெருமூச்சும் எழுந்து அடங்கியது. ஆனால், நாற்காலியின் மீது துவைத்த துணிகளைப் போட்டு ஒரே வாரத்தில் அந்தச் சூழலை படு லோக்கலாகி விடுவோம் என்கிற நிதர்சனம் தோன்றியதால் ஏக்கம் சற்று தணிந்தது).

‘நள்ளிரவு போன பின்னே.. வெள்ளி முளைக்கும்’ என்கிற தேவர் மகன் பாடல் வரியை நினைவுகூர்ந்த கமல், “இருட்டில் ஆரம்பிச்சு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம் பார்த்தீங்களா?.. குறியீடு பாஸ்.. இது” என்று சிறுபத்திரிகை சினிமா விமர்சனம் மாதிரி புரியாமல் பேசினார்.

பிக்பாஸ் வீட்டில் சில புதிய விதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். பஞ்ச பூதங்களும் லிமிடெட் சப்ளைதானாம். இருக்கிற நான்கு அடுப்பில் இரண்டுதான் எரியுமாம். இது என்ன குறியீடோ? கிளியின் வயிற்றுக்குள் டெலிபோன் இருந்தது. ஒன்லி இன்கம்மிங்தானாம். அவுட்கோயிங் போகாதாம். பி.எஸ்.என்.எல். நெட்வெர்க் ஆக இருக்குமோ... என்னவோ?!

கார்ப்பரேஷன் கழிவறை போல ஒரு பாத்ரூம் பூட்டு போடப்பட்டிருந்தது. “மத்த இடங்கள் ஓகே.. இந்த இடத்துல எப்படி.. எமோஷன் காட்ட வேண்டிய இடத்துல ஸ்லோமோஷன்ல முடியுமா?” என்று ‘கலீஜ்’ வாசனையுடன் டைமிங் ஜோக் அடித்தார் கமல்.

பிக்பாஸ் - நாள் 1

அடுத்த இடம் ஜெயில். ஆனால் அது லக்ஸரி சிங்கிள் பெட்ரூம் போல கண்ணாடிக் கதவுடன் இருந்தது. “இது ஜெயில்தான். கம்பியில்ல பார்த்தீங்களா... நெஜ ஜெயில்லயே கம்பி கிடையாதோன்னு நிறையப் பேருக்கு சந்தேகம் இருக்கு” என்று அரசியல் பகடி செய்தார். கடந்த சீஸனில் இது ஜெயிலில் ‘ஷாப்பிங்’ போனதைப் பற்றியதாக இருந்தது.

இந்த வருடமும் நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லையாம். நீர் சிக்கனத்தை விழிப்புணர்வுச் செய்தியாக வலியுறுத்துகிறார்களாம். ஆனால் நீச்சல் குளத்தைக் கட்டி அதன் மீது வலையும் போட்டிருந்தார்கள். எனில் எதற்கு அந்தக் குளம்? தேவையில்லாத ஆணி. (ஆனா குளத்துல தண்ணி இருந்தாதானே.. வலை போட முடியும்?!.. ஹிஹி.. கமல் மாதிரி பேச ட்ரை பண்ணிப் பார்த்தேன்).

‘ஓ... வென்று... எவரோ கத்தும் பிக்பாஸின் பிரத்யேக சிக்னேச்சர் இசை ஒலிக்க பிரதான மேடைக்கு வந்தார் கமல். “ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தீங்கன்னு ஆரம்பத்துல என்னைக் கேட்டாங்க.. இதன் கணிதம் அவர்களுக்குப் புரியவில்லை” என்று ஒவ்வொரு சீஸனிலும் பாடும் வழக்கமான பாட்டைப் பாடினார். கொரோனா எஃபெக்ட் காரணமாக நேரடி பார்வையாளர்களின் கைத்தட்டல் இருக்காது. எனவே டிஜிட்டல் பார்வையாளர்கள், சதுர வடிவில் ஜும் மீட்டிங்கின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். (“ரூம்ல பேசிட்டிருந்த நாம இப்ப ஜூம்ல பேசிட்டிருக்கோம்”. அறிஞர் அறந்தாங்கி நிஷாவின் திருவாசகம் இது).

நிகழ்ச்சியை சமூக விழிப்புணர்வு சென்ட்டிமென்ட்டுடன் துவங்க வேண்டும் என்று நினைத்தார்கள் போலிருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் ‘முன்களப் பணியாளர்களாக’ நின்றவர்கள் சிலரை அங்கீகரித்தது நல்ல விஷயம். ‘இறை வணக்கத்தை விடவும் மனித வணக்கம் செய்வது இப்போது தேவையானது’ என்று பகுத்தறிவு பன்ச் பேசினார் கமல்.

பிக்பாஸ் - நாள் 1
கொரோனா தொற்றால் இறந்த மேற்குமாம்பலம் காவல் நிலைய அதிகாரி பாலமுரளி, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் மலர்வழி, ரவி என்கிற துப்புரவு பணியாளர், துணிச்சலுடன் பிணங்களை நல்லடக்கம் செய்யும் காலித் அஹ்மத், சுகாதார ஆய்வாளர் ஜெயகுமார் போன்றவர்களின் அவசியப் பணிகளை பாராட்டிப் பேசினார் கமல்.

"தான்தான் அரசை நடத்துகிறோம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமூகம் இயங்குவது இவர்களால்தான்" என்று அரசியல் பன்ச்சை இணைத்துக் கொண்டார் கமல்.

"இந்த சீஸனின் போட்டியாளர்கள் என்று ஒரு பட்டியல் வெளியே உலாவிக் கொண்டிருக்கிறது. அவற்றில் எத்தனை உண்மை என்று பார்ப்போம்" என்று கமல் சொன்ன போது, இணையத்தில் உலவிய பட்டியலில் இருந்து விலகி ஆச்சர்யம் காட்டுவார்களோ என்று தோன்றியது. ம்ஹூம்... ஏறத்தாழ அதே பட்டியல்தான்.

‘மக்கள் பேசிக் கொண்ட பெரும்பாலான லிஸ்ட்டில் இவர் பெயர் இருந்தது’ என்று முதலில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரியோ. தெலுங்குப் பாடல் நடனத்துடன் உள்ளே வந்தார். “நான் ரொம்ப செளகரியமான ஏரியாவுல வளர்ந்தவன். ரொம்ப பயமா இருக்கு. இருந்தாலும் அந்தப் பயத்தை எதிர்கொள்ளணும்னு வந்திருக்கேன். யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாது... என்னை ஹர்ட் பண்ணவும் விடக்கூடாது. இதுல எப்பவும் கான்ஷியஸா இருப்பேன்” என்று தன்னைப் பற்றி சொன்னார் ரியோ.

ரியோவின் மனைவி ஸ்ருதி, கணவரை வாழ்த்திப் பேசி விடை தரும்போது "நான் வேணா அந்தப் பக்கம் திரும்பிக்கறேன்” என்று ஜாலியாக நாகரிகம் காத்தார் கமல்.

ரியோவை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் போது ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது. ‘உங்க செடியை எடுத்துக்கங்க.. மைக்கை அங்க கொடுத்துடுங்க.. செடி வளரும். மைக் வளராது’ என்று ‘பன்ச்’ பேசுவதாக நினைத்து கமல் எதையோ சொல்ல, "மைக்காலதான் நான் வளர்ந்திருக்கேன் சார்” என்று ஆண்டவருக்கே டைமிங் கவுன்ட்டர் கொடுத்து அசத்தினார் ரியோ. இதை எதிர்பார்க்காத கமல் சற்று ஜெர்க் ஆகி, ‘குட்.. குட்’ என்று சமாளிக்க வேண்டியிருந்தது.

கோயிலில் நுழைவது போல சாமி கும்பிட்டபடி பயபக்தியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ரியோ. வீட்டைப் பிரமிப்புடன் சுற்றிப் பார்த்தவர், பாவம், எத்தனை நேரம் அடக்கிக் கொண்டிருந்தாரோ... பாத்ரூமிற்குள் முதலில் நுழைந்து ‘சுச்சா’ கடமையை முடித்து ‘அப்பாடா.. திறப்பு விழா நடத்தியாச்சு’ என்று பெருமையுடன் வெளியே வந்தார்.

நடுவில் இருந்த கட்டிலில் உஷாராக கர்ச்சீப் போட்டு இடம் பிடித்த ரியோ, அதற்கு சொன்ன காரணம்தான் விசித்திரமானது. “பேய் வந்தா கூட அவங்களைத் தாண்டிதான் நம்ம கிட்ட வரணும்”. ரியோவிற்குள் ஒரு அஞ்சாங்கிளாஸ் பையன் பத்திரமாக இருக்கிறான் போலிருக்கிறது.

சந்திரமுகி மாளிகையை வடிவேலு பீதியுடன் சுற்றிப் பார்ப்பது போல பிக்பாஸ் வீட்டைச் சுற்றிப் பார்த்த ரியோ, ஒரு கட்டத்தில் ‘அப்பாடா’வென்று அமர்ந்து விட்டார். "இன்னாடா.. அவார்டா கொடுக்கறாங்க” என்று கேட்கும் அளவிற்கு அவார்டு படக்காட்சி மாதிரி கேமரா மிக நிதானமாக நகர்ந்தது, இழுவையாக இருந்தது.

இந்த சீஸனில் தனது முதல் டிரேட்மார்க் வசனத்தை கமல் சொன்னார்.. போட்டியாளர்களை தழுவி விடை பெற தர முடியாததை குறிக்கும் வகையில், “கோவிட நாம சங்கீர்த்தனம்... கோவிடா... கோவிடா" என்று சமகால நடைமுறைச் சிக்கலை கிரேஸி மோகன் லாங்வேஜில் ஜாலியாக சொன்னது ரசிக்க வைக்கும் வகையில் இருந்தது.

இரண்டாவது போட்டியாளராக நுழைந்தவர் சனம் ஷெட்டி. கடந்த சீஸன் தொடர்பாகவே இவரது பெயர் அப்போதே அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆம். தர்ஷனின் ‘தோழியாக’ இருந்தார். இவர் தொடர்பான AV காட்சியில் இவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகம் - ‘Your Souls Fan’. (பாருங்க... நான் சமர்த்தா புக்கை மட்டுமே பார்த்திருக்கேன்). சமீபத்தில் ஒரு தீவிரமான மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.

“உங்க பெயர்ல நான் பாட்டு கூட பாடியிருக்கேன்...’ என்று ‘சனம் தேரி கஸம்’ பாடலை கமல் குறிப்பிட, இவரோ ‘தசாவதாரம்’ பாடலைக் குறிப்பிட்டார். ஒரு சிறிய ஜாலியான குழப்பம் அங்கு நிகழந்தது. (‘ஊரு சனம் தூங்கிடுச்சு’ பாட்டை விட்டுட்டாங்க).

“மக்களுக்காக நாங்க போராடறோம்”ன்னு சீன் போடறவங்க மத்தியில ‘உங்களுக்காக நீங்களே போராடுங்க’ ன்னு சொன்னீங்க பாருங்க.. அங்க நிக்கறீங்க சார்... இதைச் சொல்றதுக்குத்தான் நான் பல வருஷம் காத்திருந்தேன்” என்று கமலுக்கு ஐஸ் வைத்த சனம் ஷெட்டி, பிறகு கோயிலில் சாமி கும்பிடும் பக்தியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

அடுத்த போட்டியாளர் நடிகை ரேகா... கடவுளே... அவரா இது? வயதின் களைப்பு முகத்தில் அப்பட்டமாக படிந்திருந்தது. ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் ஒரு சடன் சர்ப்ரைஸ் முத்தக் காட்சியில் நடித்த அதே ரேகாதானா? காலத்தின் கோலம்.

“இதுவரை தாய், கணவர், மகள் போன்றோரைச் சார்ந்திருந்தேன். இப்போதுதான் சுயமாக நிற்க முடியுமா என்று பார்ப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்” என்றார். "என் பொண்ணு அம்மாவா இருக்காங்க... நான் அவ குழந்தையா இருக்கேன்” என்று இவர் சொன்ன டயலாக் சூப்பர்.

ரேகாவின் மனநிலையை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல். அதுவரை பிறரைச் சார்ந்திருந்தும், குடும்பத்திற்காக நீண்ட காலம் உழைத்த பிறகு தன்னிரக்கம் எழும்பும் வயது. ‘தன் வாழ்க்கையை தான் வாழவில்லையோ...’ என்கிற எண்ணம் மேலெழும்பி இனி மேல் சுய முடிவுகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது அதிகம் தோன்றும். அந்தப் பின்னணயில் ரேகா உள்ளே வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

“நெகட்டிவ்வே இருக்கக்கூடாது... ஒன்லி பாசிட்டிவ்தான் இருக்கணும்” என்று ரேகா பாசிட்டிவ்வாக பேசினாலும் கொரோனா சமயத்தில் ‘பாசிட்டிவ்’ என்பது கெட்ட வார்த்தையாகி விட்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய தெளிவோடு ரேகா உள்ளே நுழைந்திருக்கிறார் என்று யூகிக்கத் தோன்றுகிறது.

வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் அப்போதுதான் பார்ப்பது போல ஆச்சர்யம் காட்டுவது நிஜமா அல்லது ‘அத்தனையும் நடிப்பா கோப்பால்’ என்று தெரியவில்லை. போட்டியாளர்களின் பட்டியல் நமக்கே நன்கு தெரிந்து விட்ட பிறகு அவர்களுக்குத் தெரிந்திருக்காதா... என்ன? தனிமைப்படுத்துதல் சடங்கின் போது ஒரே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்திருக்க மாட்டார்களா?

மூன்றாவது போட்டியாளராக உள்ளே வந்தவர் பாலாஜி. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவராக இருந்தார். “ஆரோக்கியத்தில் அக்கறையுள்ளவர்" என்று இவரை கமல் அறிமுகப்படுத்தினார். இவரின் AV காட்சியில் இவர் பீச் மணலில் வேகமாக ஓடி வரும் காட்சி டாப் ஆங்கிளில் பதிவாகியிருந்தது. அங்கிருந்த வெகுசனம் ஒருவருக்கு ‘சூட்டிங்’ கேமரா கண்ணில்படவில்லையோ... என்னமோ... "ஏன் இந்த ஆளு நாய் துரத்தற மாதிரி ஓடறான்..” என்று திகைத்து திரும்பி திரும்பிப் பார்த்தது சுவாரஸ்யமான காட்சி.

பாலாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் புரிந்து வைத்திருக்கிறார். ‘அங்க ரொம்ப நாளு நடிக்க முடியாது. ஒரிஜினல் கலர் சீக்கிரம் வெளியே வந்துடும்’ என்கிறார். இவர் பாடி பில்டராம். நிறைய சாதனை செய்திருக்கிறாராம். ஆனால், "மீடியா கவர் பண்ணலை” என்று சலித்துக் கொண்டார்.

இவரிடம் கமல் பேசும் போது... "பாடி பில்டிங்ல எனக்கும் சின்ன வயசுல ஆர்வம் இருந்தது. போர்டு பார்த்து உள்ளே போனா... அது பஸ் பாடி கட்டற இடம்” என்று கமல் சொன்ன ஹைதர் காலத்து காமெடியில் அத்தனை பழைய வாசனை.

ஐந்தாவதாக உள்ளே வந்தவர் ‘அனிதா சம்பத்’. செய்தி சேனல்களில் அதிகம் ஆடாமல் அசையாமல் இவரை அதிகம் பார்த்திருப்போம். நிஜத்தில் ‘துறுதுறு’வென்கிற முயல் குட்டி போல இருந்தார். அப்பா எழுத்தாளராம். பெயர் ஆர்.சி.சம்பத். தேடிப் பார்த்ததில் சினிமா ஆளுமைகள் பற்றி நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார். அனிதாவிற்கு தமிழ் மீது அதிக ஆர்வமாம். செய்தி வாசிப்பாளருக்குப் பதில் ரேடியோவில் ஆர்ஜேவாக போயிருக்கலாமோ என்கிற அளவிற்கு தொணதொணவென்று இனிமையாக சிணுங்கிக் கொண்டேயிருக்கிறார் அனிதா.

இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக கமல் அறிவித்தது நல்ல விஷயம். கோவிட் காலம் என்பதால் Albert Camus என்கிற எழுத்தாளரின் ‘Pandemic’ என்கிற தத்துவப் புனைவு பற்றி சொன்னார் கமல். ஆனால் அந்த நூலின் பெயர் ‘The Plague’. (சரி... பூ என்பதை ‘புஷ்பம்’ என்று சொன்னார்.. என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்).

மழை தண்ணீரில் கவனமாக காலை வைத்து தாண்டிப் போவது போன்ற உடையுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் அனிதா.

பெருநோய், போர், பொருளாதார வீழ்ச்சி என்று பல தீவிரமான நெருக்கடிகளையும் தாண்டி உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலை new normal என்கிறார்கள். இதை கமலும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். கொரோனா ஆபத்தைத் தாண்டி வெளியே வந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களுக்குப்ப் பணிவாய்ப்பை பெருக்க வேண்டும் என்றார்.

இதன் உதாரணமாக பிக்பாஸ்ஸிற்காக கவனமாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் காட்டப்பட்டன. அங்கிருந்த எச்சரிக்கை பலகை ஒன்றில் ‘எவ்வித நிலையிலும் கவணமாக இருக்கவும்’ என்று பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. (தமிழ்லயும் சற்று கவனமா இருந்திருக்கலாமே... பாஸ்?”).

‘பிக்பாஸ் போட்டியாளர்களில் வயது குறைந்தவர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்’ என்கிற முன்னுரையுடன் கமல் அறிமுகப்படுத்தியவர் ஷிவானி. நடிகை ஷாலினி (அதாங்க… மிஸஸ் ‘தல’) சற்று புஷ்டியாக இருந்தால் எப்படியிருப்பாரோ, அப்படி இருந்தார். ஒரு கவர்ச்சியான குத்தாட்டப்பாடலுடன் நமக்கு அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிக பிரபலம் போலிருக்கிறது. எனவே மக்கள் ஏற்கெனவே ஆர்மியை ஆரம்பித்திருப்பார்கள்.

ஏழாவதாக உள்ளே வந்தவர் ‘ஜித்தன்’ ரமேஷ். ‘இவருடைய தந்தை சினிமாவில் பெரிய தயாரிப்பாளர். ஆனால் அவரின் தயாரிப்பில் இதுவரை நான் நடித்ததில்லை’ என்றார் கமல். ‘ஜித்தன் ரமேஷ் யாருன்னு கேட்டா குழந்தை கூட சொல்லும்’ என்று சொன்னபடி ரமேஷ் அறிமுகமானாலும் அவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே நமக்கு ஐந்து நிமிடம் ஆனது. ஒரு படத்தில் வெற்றி பெற்று பிறகு தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்த வலி இவரின் பேச்சில் தெரிந்தது.

“கொரானோ டைம்ல வீட்லயே இருக்க வேண்டியிருந்தது. ஆறு மாசத்துக்கும் மேல ஆச்சு. இன்னமும் இருந்திருந்தா டைவர்ஸ் ஆகியிருக்கும்... அதான் அங்க தப்பிச்சு இங்க வந்துட்டேன்" என்று நேரடி உண்மையைப் பேசினார் ரமேஷ். இந்த வெளிப்படைத் தன்மையை கமல் பாராட்டினாலும், "எந்த நேரத்துல எப்படி பேசணும்னு பார்த்து கவனமா பேசுங்க” என்று அறிவுரை கூறத் தவறவில்லை. (கடந்த சீஸனின் ‘சித்தப்பூ சரவணன் ஞாபகத்திற்கு வந்தார்).

அடுத்து உள்ளே வந்தவர் நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன். சினிமாவிலும் பிரபலம். எடுத்தவுடனேயே ஆறரைக் கட்டையை அநாயசமாக தாண்டிவிடும் அளவிற்கு எடுப்பான குரல். ஏற்கெனவே நிறைய ஆடும் இவர், "நாட்டுப்புறக்கலைப் பாடல்களை உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் நீங்கள் பரப்ப வேண்டும்" என்று கமல் அறிவுரை கூறியதும்… சலங்கையைக் கட்டிக் கொண்டார்.

பிக்பாஸ் வீட்டினுள் எதற்கெடுத்தாலும் பாட்டுத்தான். இவர் உற்சாகமாக பாட.. அதற்கு சனம் ஷெட்டி அலப்பறையாக ஆட… தில்லானா மோகனாம்பாள் சிவாஜி – பத்மினியெல்லாம் நினைவிற்கு வந்து போனார்கள். (ஹய்யோ.. ஹய்யோ..)

அதுவரை சோம்பிக் கிடந்த பிக்பாஸ் வீடு பாடகர் வேல்முருகனின் வருகையால் சற்று உற்சாகம் பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காக யாரைப் பார்த்தாலும் ‘வண்ண நிலவே. வா... வசந்த முல்லையே... வருக... தெய்வமே... பாசமே’ என்று இவர் ஏகத்திற்கும் அடித்து விடுவது சற்று ஓவர் அலப்பறையாகத் தெரிகிறது.

விஜய் டிவியினர் மியூசிக் சேனல் ஆரம்பித்திருக்கிறார்களாம். அதற்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. லோக்கல் கேபிளிலேயே ஆயிரம் மியூசிக் சானல்கள் துவங்கப்பட்டு ஓய்ந்திருக்கிற நேரத்தில் இப்போதுதான் இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். ‘சங்கூதுற வயசுல சங்கீதாவா..?” என்று தோன்றினாலும் மக்களுக்கு இருக்கும் அதீதமான சினிமா மோகத்தில் இதுவும் விற்பனையாகும் என்றுதான் தோன்றுகிறது. இதற்கான அனிமேஷன் வீடியோ நன்றாக இருந்தது.

“திரைப்பட இசை என்பது அனைத்திலும் ஆக்ரமித்து மூழ்கடித்து விட்டது. என்னுடைய ஆதங்கம் என்னவெனில் தனிப்பட்ட இசை ஆல்பங்கள் நிறைய வர வேண்டும். அதற்கு விஜய் மியூசிக் ஆதரவாக இருக்க வேண்டும்" என்று கமல் வேண்டிக் கொண்டார். மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்தக் கலாசாரம் தமிழிலும் எப்போதோ நிகழும் என்று கமல் நம்பியிருந்தாராம். நல்ல விஷயம்.

அடுத்து வந்த போட்டியாளர் ‘ஆரி’. "நிறைய தோல்விகள்ல இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். அடையாளங்களைச் சுமந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் போக விரும்பவில்லை. எதிராளியைப் பொறுத்துதான் என்னோட ஆட்டம் இருக்கு" என்று தெளிவாகவும் நம்பிக்கையாகவும் பேசும் ‘ஆரி’ ஒரு நல்ல போட்டியாளராக பிரகாசிப்பார் என்று தோன்றுகிறது.

‘ஆரி’ இப்போது ‘சூடான’ விஷயத்தைப் பற்றி பேசுவார் என்று கமல் ‘வார்த்தை விளையாட்டோடு’ சொன்னவுடன் ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்’ விவசாயத்தில் செய்யும் ஆபத்துக்களைப் பற்றி சொன்னார் ஆரி. இவர் வீட்டின் உள்ளே நுழையும் போது மக்கள் அப்போதே பிரியாணிச் சட்டியை காலி செய்வதில் மும்முரமாக இருந்தார்கள்.

பத்தாவது போட்டியாளராக உள்ளே வந்தவர் யாரென்றே தெரியவில்லை. பிறகுதான் பெயர் தெரிந்தது. சோமசுந்தர். MMA... அதாவது Mixed Martial Arts என்னும் ஆபத்தான விளையாட்டில் இவர் சாம்பியனாம். மாடலாகவும் இருந்திருக்கிறாராம். பெண்கள் சைடிலிருந்து இவருக்கு உடனே ஆர்மி ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. அத்தனை ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

அடுத்தடுத்து விஜய் டிவி அடையாளங்களாக உள்ளே நுழைந்து கொண்டிருக்க... 'மாகாப ஆனந்த்தும் பிரியங்காவும் அடுத்து உள்ளே வருவார்களோ?' என்கிற பீதியுடன் நாம் காத்துக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்தவர் கேப்ரெல்லா. இவரும் அந்த டிவி பிராடக்ட்தான். ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சியில் வென்றவர்.

அனிருத்தின் தங்கச்சி மாதிரியான தோற்றத்தில் இருந்த இவருக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுண்டாம். பெயிண்ட்டிங் நிறைய செய்வாராம். போகிற போக்கில் இவர் சொன்ன ஒரு தகவல் தூக்கி வாரிப் போட்ட வைத்தது. செல்போன் உபயோகிக்கவே இவருக்குப் பிடிக்காதாம். இந்தக் காலத்தில் ஓர் இளம்பெண் இதைச் சொல்வது படுஆச்சரியம். உலக அமைதிக்கான நோபல் பரிசை உடனே இவருக்கு வழங்கி விடலாம்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன், வரவேற்புக் குழுவில் தலைமை இடத்தை தானாகவே அடித்துப் பிடித்துப் பெற்றிருந்த வேல்முருகன். “வண்ணமுல்லையே... வாங்க... இந்த செட் மாதிரியே நீங்களும் ஜொலிக்கறீங்க... நான் இந்த செட் போட ஆரம்பிக்கும் போதிருந்தே இங்கதான் குத்த வெச்சு உக்காந்திருக்கேன்” என்று உற்சாகமாக கடலை போட ஆரம்பித்து விட்டார்.

வருகிறவர்கள் கொண்டு வருகிற செடியை டோக்கன் போட்டு வாங்கி பத்திரமாக வைக்க வேண்டியது ரியோவின் பொறுப்பு. புதிய போட்டியாளர்களை உள்ளே அழைத்துச் சென்று ‘யாரு வந்திருக்காங்க... பாருங்க... ஊர்ல இருந்து மச்சா வந்திருக்காக’ என்று அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு வேல்முருகனுடையது. இப்படியாக பணிகளைப் பொறுப்பாக பிரித்துக் கொண்டார்கள்.

‘ஆண்களே பெரும்பாலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஸ்டாண்ட்-அப் காமெடியில் ஒரு பெண்' என்று கமல் முன்னுரை வழங்கும் போது ‘யாருடா.. அது?” என்று ஆச்சர்யமாக இருந்தது. உள்ளே வந்தவர் அறந்தாங்கி நிஷா. அவரின் பிரத்யேக பாணியில் உற்சாகப் புயலாகப் பேசினாலும் நகைச்சுவையாளர்களின் பின்னேயுள்ள வலியைப் பற்றியும் பேசியது நெகிழ்ச்சி. ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்றவர் டைட்டில் அடிக்காமல் திரும்ப மாட்டாராம். ‘ஊரார் புருஷனை அடிச்சாதான் பிரச்சினை... அதனாலதான் என் புருஷனை காமெடில போட்டு வெளுக்கறேன்’ என்றவர், அவரை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரு வன்முறை ‘முத்தா’வையும் பதித்து வைத்தார். பாவம்... அந்த மனுஷன்.

‘கஜா’ புயலின் போது நிஷா செய்த சமூக சேவைகளை கமல் புகழ்ந்த போது நெளிந்தபடி அதை ஏற்றுக் கொண்ட நிஷா... ‘நான் ஒரு கறுப்பு ரோசாங்க’ என்றதை கமல் முதலில் கவனிக்கவில்லையென்றாலும் மீண்டும் அடம்பிடித்து சொன்ன பிறகே அடங்கினார் நிஷா.

ரியோ, விஜய் டிவி என்பதால் சக நிலைய வித்வான்கள் பலரை அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. “வீட்ல ஜிம்மி நல்லாயிருக்கா.. கக்கா நல்லா போச்சா?" என்கிற அளவிற்கு பலரையும் நெருக்கமாக விசாரிக்கிறார்; வரவேற்கிறார்.

நிஷா என்கிற உற்சாகப் புயல் உடனே அடிக்க ஆரம்பித்து விட்டது. “என்னய்யா.. டிரஸ்ஸூ இது?” என்று வேல்முருகனின் விநோதமான ‘அண்டர்வேர்’ கார்மெண்ட்டை கலாய்க்க ஆரம்பித்து விட்டார். இவர் பாசத்துடன் ரியோவின் மீது சாய.... நிஷா முகத்தில் அடித்திருந்த வெள்ளைச் சுண்ணாம்பின் பெரும்பகுதி ரியோவின் சட்டையில் ஒட்டிக் கொள்ள.. ‘கறுப்பாக இருக்கும் தங்கைக்கு பெயிண்ட் அடித்து செந்திலுக்கு திருமணம் செய்து வைத்து விடும்’ கவுண்டமணி காமெடி நினைவிற்கு வந்தது.

‘என்னடா.. கடலோரக் கவிதை ஓரமா ஒக்காந்திருக்கு’ என்று ரேகாவையும் ஜாலியாக சீண்டினார் நிஷா.

“அடுத்து எங்க ஊரு பொட்டியை உடைக்கட்டும். அங்கதான் நாங்க கள்ள ஓட்டு அதிகம் போட்டிருக்கோம்.. அப்ப தெரியுண்டா” என்று நடிகர் தியாகு ஒரு திரைப்படக் காட்சியில் சொல்வதைப் போன்று, மக்கள் நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரம்யா பாண்டியனின் எண்ட்ரி அடுத்தது.

இவர் மொட்டை மாடியில் எடுத்த போட்டோவிற்காக சில்லறையைப் பயங்கரமாக சிதற விட்டிருந்த மக்கள், முன்பே ஆர்மி ஆரம்பித்து அயர்ன் செய்த யூனிபார்மை அணிந்து ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரணமாக இருக்கும் சமயத்தில் ரம்யாவை சற்று சகித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இவர் சிரிக்கும் போதுதான் தன்னிச்சையாக நமக்குள் ஒரு பீதி ஏற்படுகிறது.

“வண்ண நிலவே வா... வசந்த முல்லையே வா" என்று டைமிங் ரைமிங்கில் வேல்முருகன் கலக்கினாலும் நமக்குத்தான் உள்ளுற ஏற்படுகிற எரிச்சலை அடக்க முடிவதில்லை. ரம்யா பாண்டியன் உள்ளே நுழைந்தவுடன் வரவேற்புக் குழு தலைவரின் பணியைச் சிறப்பாக செய்தார் வேல்முருகன். செடிக்கு டோக்கன் போடும் ரியோவைத்தான் அப்போது காணவில்லை.

“எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க" என்று ரம்யாவிடம் ஜென்டில்மேன்தனமாக சொல்லி ஜோக் மாதிரி எதையோ முயன்றார் ஆரி. ஆறிப் போன ஜோக். "எனக்கு ஒருமுறைதான் கல்யாணம் ஆகியிருக்கு” என்று நூற்றாண்டுக்கே முன்பே செத்து இத்துப் போன நகைச்சுவையைச் சொல்லி ‘ஹிஹி’ காட்டினார் வேல்முருகன்.

பதினான்காவது போட்டியளாராக நுழைந்தவர் சம்யுக்தா. (ஆவ்.. கொட்டாவியா வருது.. எப்போ இந்த ப்ரோக்ராம் முடியும்?!). மிஸ் சென்னை, ஃபிட்டெனஸ் மாம், பிஸ்னஸ் வுமென்... என்று பல பரிமாணங்களைக் கொண்ட சம்யுக்தா... “நீங்க எந்த காலேஜ்ல படிக்கறீங்க... காலேஜா... நானா?' என்கிற விளம்பர வாசகம் மாதிரி இளமையாக இருந்தார். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய புரிதலுடன் இருக்கிறார் என்று தோன்றுகிறது.

‘எனக்கு சிங்கிள் பெட் வேணும்’ என்று வீட்டிற்குள் ஆவலாக வந்த சம்யுக்தா, உள்ளே அனைவரும் துண்டு போட்டு இடம் பிடித்திருந்ததைப் பார்த்து சற்று ஏமாற்றமடைந்தார்.

அடுத்து வந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. பழைய தொலைக்காட்சி நாடகங்கள், பாலசந்தர் படங்களில் இவரைப் பார்த்திருக்கலாம். இவரின் குணாதிசயம் சற்று வித்தியாசமாக இருந்தது. ‘எடுத்த பொருளை எடுத்த எடத்துல வெக்கணும்.. இல்லைன்னா. கோபம் வந்துடும்’ என்று சீரியஸ் முகத்தைக் காட்டினார். இதைச் சுருக்கமாக விளக்கி விடும் வீடியோ காட்சி நன்றாக இருந்தது.

“உங்களைப் பார்த்ததே போதும்... பிரைஸ் மணியை கொடுத்துடுங்க. நான் திரும்பப் போயிடறேன்” என்று கமலிடம் சற்று ஓவராக சீன் போட்டார் சுரேஷ். பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே சென்றவர் கேமராவை நோக்கி ‘பெரிய ஆண்டே.. என்னை ரட்சிக்கணும்’ என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது சற்று எரிச்சலூட்டும் நடிப்பு. ஆழ்வார்பேட்டை ஆண்டவரை 'ஆலந்தூராக’ மாற்றியது மன்னிக்க முடியாத குற்றம். பிறகு ‘வேல்முருகனை’ வைத்து பக்திப் பாட்டை உரத்த குரலில் இவர் பாடிய போது “யாருடா.. இவன் நம்மள மிஞ்சிடுவான் போல’ என்கிற பீதி நிஷாவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

கடைசிப் போட்டியாளராக நுழைந்தவர் ஆஜித்... (அப்பாடா... ஒருவழியா...) சின்னப் பையனாக இருந்த போது சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்றவர். இப்போது பெரிய பையனாகி ஹீரோ மாதிரி நடனமாடினார். இவரது குடும்பப்பின்னணியைக் காண நெகிழ்வாக இருந்தது. ‘நான் ஒரு introvert... பார்க்கலாம்’ என்கிற அறிமுகத்துடன் உள்ளே சென்றவர், ‘தொடத் தொட மலர்ந்ததென்ன...’ பாடலை அருமையாகப் பாடி ஹவுஸ்மேட்ஸ்களின் உள்ளத்தை உடனே கொள்ளை கொண்டார். கேப்ரெல்லாவின் கண்களில் பல்பு எரிந்தது. என்ன நடக்கப் போகிறதோ?

"ஒரு சிறிய தோட்டமே உள்ளே சென்றிருக்கிறது. சமீபத்திய நெருக்கடியிலிருந்து நாம் வெளியில் வந்துதான் ஆக வேண்டும். ஆனால் முன்ஜாக்கிரதையாக இயங்க வேண்டும். நானே அதற்கு முன்னுதாரணம்.. இது ஒரு புதிய துவக்கம். முதல் வாரத்தில் எவிக்ஷன் எதுவும் கிடையாது. போட்டியாளர்களை நீங்களும்... அவர்களுக்குள் ஒருவரையொருவரும் புரிந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பம்” என்றபடி விடைபெற்றுக் கொண்டார் கமல்.

உள்ளே... ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸ், பிக்பாஸின் குரலைக் கேட்டவுடன் பள்ளிப் பிள்ளைகள் போல அமைதியானார்கள். “பிக்பாஸ் வரலாற்றிலேயே இரண்டு முறை பிக்பாஸ் விளையாடிய கோயிஞ்சாமிகள் நீங்கள்தான்" என்று கரகர குரலில் அறிவித்தார் பிக்பாஸ். போட்டிக்கு முன்பாக போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டதைப் பற்றிதான் அவர் நகைச்சுவையாக சொல்கிறாராம். ஆங்கில நகைச்சுவையைப் புரிந்து கொண்ட லோக்கல் ஆசாமி மாதிரி போட்டியாளர்கள் இதற்கு மிகையாகச் சிரித்து வைத்தார்கள்.

Also Read: திங்கட தக்கும் தக்கும்தா... திங்கடதக்கும்! பிக் பாஸ் தமிழ் - சீஸன் 4 என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

பிறகு அவர்கள் தங்களுக்குள் சலசலவென பேசிக் கொண்டிருக்க ‘நீங்க முடிச்சிட்டீங்கன்னா.. சொல்லுங்க.. நான் ஆரம்பிக்கிறேன்’ என்று பிக்பாஸ் மென் அதட்டல் போட்டதும் கப்சிப் என்று ஆனார்கள்.

இதற்குப் பிறகுதான் பிக்பாஸின் அந்த பெரிய ஆப்பு குறித்தான அறிவிப்பு வந்தது. அதாவது பிக்பாஸ் வீடு partial lockdown சிஸ்டத்தில் இயங்கும். ஒரு பெட்ரூம், ஒரு பாத்ரூம், ஒரு கழிவறை என்று எல்லாமே பாதிதான் இருக்கும். ‘எதிர்பாராத புதிய சவால்களை அறிமுகப்படுத்துவதுதான் எங்களின் தனித்தன்மை’ என்று பெருமையடித்துக் கொண்டார் பிக்பாஸ். (என்னா ஒரு வில்லத்தனம்?!) போட்டியாளர்கள் சவால்களில் வெல்வதின் மூலம் விதிகள் கொஞ்சமாக கொஞ்சமாக தளர்த்தப்படும் போலிருக்கிறது.

பிக் பாஸ் - நாள் 1

‘பதினாறு பேருக்கு எப்படி ஒரு பாத்ரூம்?’ என்கிற பீதி போட்டியாளர்களின் கண்களில் தெரிய ஆரம்பித்தது. ‘ரெண்டு ரெண்டு பேரா போய் வேலையை முடிங்கடா’ என்கிற வடிவேலுவின் காமெடி மாதிரி ஆகி விடும் போலிருக்கிறது. பாவம் ரியோ... கர்ச்சீப் போட்டு அவர் கட்டிலை புக் செய்ததெல்லாம் வேஸ்ட். அவர் கண்களில் இப்போதே பீதி தெரிய ஆரம்பித்தது. ஷிவானியின் கண்கள் கலங்கியது போல் இருந்தது. அனிதா சம்பத் போல் தன்னம்பிக்கையுடன் தெரிந்தவர்களும் இருந்தார்கள்.

பிரபலமான முகங்கள், இனிதான் பிரபலமாகப் போகும் முகங்கள் என்று சுவாரஸ்யமான கலவையோடு நான்காவது சீஸன் துவங்கியிருக்கிறது. ஒவ்வொருவரையும் பற்றிய மதிப்பீடுகளை இப்போதே சற்று யூகிக்க முடிந்தாலும் வரும் கட்டுரைகளில் நிதானமாகப் பார்ப்போம்.

பிக்பாஸின் கடைசி அறிவிப்பைக் கேட்டவுடன் ஹவுஸ்மேட்களின் மனதில் இந்த வாசகம் ஓடியிருக்கலாம்.

"மாப்பூ... வெச்சிட்டான்யா... ஆப்பு!”



source https://cinema.vikatan.com/television/partial-lockdown-in-the-house-bigg-boss-tamil-season-4-day-1-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக