Operation Ajay: இஸ்ரேலிலிருந்து தனி விமானம் மூலம் 212 இந்தியர்கள் மீட்பு!
போர் மேகங்கள் முகாமிட்டிருக்கும் இஸ்ரேலில், தொடர் தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஹமாஸ் குழுவினர், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என மனிதாபிமானமின்றி அனைவர்மீதும் கொடூர தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் எதிர் தாக்குதலிலும் காஸாவில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கின்றன. தங்களுடைய மக்களை பணயக்கைதிகளாக அழைத்துச் சென்றிருக்கும் ஹமாஸ் குழுவினர், அவர்களை பத்திரமாக ஒப்படைக்கும்வரை, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் விநியோகம் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறிவிட்டு, நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த பதற்றமான சூழலில், இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்துவருவதென மத்திய அரசு முடிவு செய்து, `ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கான முயற்சிகளில் இறங்கியது. அதன்படி, இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து நேற்றைய தினம் முதலாவது மீட்பு விமானம் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அந்த விமானத்தின் மூலம் முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
யுத்தபூமியாகக் காட்சியளிக்கும் இஸ்ரேலிலிருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லிக்கு வந்தடைந்தது. அதில் வந்த இந்தியர்களை, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நெறி சென்று வரவேற்றார். ஆபரேஷன் அஜய்யின் பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-news-live-today-updates-dated-on-13-10-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக