செக் குடியரசில், கஸ்மா காஸ்மிட்ச் அல்லது கமில் பர்தோசெக் என்ற அழைக்கப்படும் தொலைக்காட்சி பிரபலம், சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடர்பவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்பதற்காக ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் டாலரை வீசியிருப்பது, சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.
யார் இந்த கஸ்மா காஸ்மிட்ச் அல்லது கமில் பர்தோசெக் ?
கஸ்மா காஸ்மிட்ச் அல்லது கமில் பர்தோசெக் என்றறியப்படும் இவர், செல்வாக்குமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பட இயக்குநர் ஆவார். கஸ்மா ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு சில போட்டிகள் வைத்து, அதில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு ஒரு பெரிய தொகையைப் பரிசளிக்கத் தொடங்கினார்.
இது போன்று அவர் அண்மையில் வைத்த விளையாட்டுப் போட்டியில் யாரும் வெற்றி பெறாத காரணத்தினால், அவரால் யாருக்கும் பரிசளிக்க முடியவில்லை. இதனால் கஸ்மாவும், அவரின் குழுவினரும் இணைந்து பிளான் - B முயற்சியில் இறங்கினர். அது குறித்து கஸ்மா, சமூக வலைதளத்தில் தன்னைப் பின்தொடர்வோரிடம் ``யாரும் வெற்றி பெறாத இந்த பணத்தைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே ஐடியா கொடுங்கள்'' என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பெரும்பாலானோர், யாருக்காவது உதவுங்கள் அல்லது ஒரு நல்ல விஷயத்துக்கு பணத்தை நன்கொடையாக வழங்குங்கள் அல்லது விளையாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு அந்தப் பணத்தைப் பகிர்ந்தளிக்கவும் அல்லது அந்தப் பணத்தைக் கொண்டு மற்றொரு நிகழ்ச்சியை உருவாக்கவும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து கஸ்மா இந்த விஷயங்களை ஒன்றாக இணைத்து, சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோ, ஒரு மில்லியன் டாலரை ஒரு பெரிய கன்டெய்னரில் நிரப்பி ஹெலிகாப்டர் மூலம் வானத்திலிருந்து கீழே வீசப்படுவதாக அமைந்திருந்தது.
அதைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் எவ்வாறு அந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்திருக்கும்போது, கஸ்மா தங்கள் குழுவுடன் சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடர்பவருக்கு மறைமுகமாக, அந்த இடத்தைக் குறிக்க ஒரு விடுகதையாக மின்னஞ்சல் ஒன்று அனுப்பினார்.
அதில், குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஹெலிகாப்டரின் உதவியால் கன்டெய்னரிலிருந்து ஒரு மில்லியன் டாலர் மேலிருந்து வீசப்படும் என்றும், அப்போது நீங்கள் டாலரிலுள்ள QR கோடை ஸ்கேன் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சொன்ன வார்த்தைக்கு உண்மையாக, சொன்ன தேதியில் கஸ்மா ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து சொன்ன இடத்துக்கு அனுப்பி வைத்தார், பிறகு பணமழை பொழிய, அங்கிருந்த மக்கள் அந்த டாலர் வடிவமைப்பிலிருந்த பணத்தினை ஸ்கேன் செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் கஸ்மாவை தாராளமான மனப்பான்மை கொண்ட பிரபலம் என்று பாராட்டியும், மற்றொரு தரப்பினர் அவர் செய்த செயல் தவறானது என்று விமர்சித்தும் வருகின்றனர்.
இவர் செய்த இந்த செயல் சரியானதா... இல்லை தவறானதா... நீங்கள் கூறும் கருத்து என்ன... கமென்ட்டில் தெரிவியுங்கள்!
source https://www.vikatan.com/trending/viral/tv-host-kamil-bartoshek-dropped-1-million-dollar-from-a-helicopter-in-the-czech-republic
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக