இந்தியா முழுக்க ஓ.பி.சி சமூக மக்களின், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என்ற கோரிக்கை சமீப காலமாகவே தீவிரமடைந்து வருகிறது. நாடு விடுதலை அடையும் முன்பு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டுதான் தற்போது ஓ.பி.சி பிரிவினருக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலை இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விபரங்களையும் வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த மே மாதம் கர்நாடகா மாநில தேர்தலின்போது `இந்தியாவில் எத்தனை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இருக்கிறார்கள் என்பது நாடு அறிந்து கொள்ளட்டும், நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் என கோரிக்கை வைத்திருந்தார். தற்போது. இந்தியாவிலேயே முதல்முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் விபரங்களை வெளியிட்டுள்ளது மாநில அரசு.
அதன்படி மாநிலத்தின் 13 கோடி மக்களில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14%, பொதுப் பிரிவினர் 15.52% பட்டியல் சமூக மக்கள் 19.65%. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைபோல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துவருகிறது. இதுகுறித்து அறிக்கைவிட்டிருந்த திருமாவளளவன், ``பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இப்பொழுது வெளியாகி உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் 36.01% பிற்படுத்தப்பட்டோர் 27% பட்டியல் சமூகத்தவர் 19.65% பழங்குடியினர் 1.68 % இருப்பது தெரியவந்துள்ளது.
பொதுப் பிரிவினர் 15.5 % மட்டுமே இருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது பீகாரில் பட்டியல் சமூகத்திற்கு 16% பழங்குடியினருக்கு 1.68% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 12% பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 63 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீத இடத்தை மட்டுமே இப்போது பெறுகின்றனர். 15.5% உள்ள பொதுப் பிரிவினர் 50% இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இது மாபெரும் சமூக அநீதியாகும். பீகார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ``தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப 21% ஆக உயர்த்த வேண்டும். பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும்; தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
பீகாரை போல தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா...கோரிக்கைக்கு செவி சாய்க்குமா திமுக அரசு... பொறுத்திருப்போம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/government-and-politics/governance/thirumavalavan-requests-to-initiate-caste-wise-census-in-tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக