Doctor Vikatan: என் வயது 40. பல வருடங்களாக அசைவம் சாப்பிட்டு வந்த நான், சொந்தக் காரணங்களுக்காக சமீபத்தில் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டேன். அதன் பிறகு எனக்கு உடல் எடை அதிகரிப்பதை உணர்கிறேன். அசைவத்தைவிட சைவ உணவுப்பழக்கம் ஆரோக்கியமானது என்கிறார்கள்... ஆனால், சைவம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பது ஏன்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா.
அசைவ உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சாதம், காய்கறிகள் இவற்றுடன் சிக்கன், முட்டை, மீன் என புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் பிரதானமாக சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது அடிக்கடி பசி எடுக்காது. வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.
அதுவே சைவத்துக்கு மாறிவிட்டதாகச் சொல்கிற நீங்கள், மீன், முட்டை, சிக்கன் தவிர்த்து காய்கறிகள் சாப்பிடத் தொடங்கி யிருப்பீர்கள். இதனால் உங்கள் உணவில் புரதச்சத்தின் அளவு வெகுவாகக் குறைந்திருக்கும். அதன் காரணமாக அடிக்கடி பசியெடுக்கும். அதனால் பசிக்கும்போதெல்லாம் இட்லி, தோசை, பிரெட், பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் என சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடுவீர்கள். அப்படிச் சாப்பிட்டாலும் பசி உணர்வு கட்டுப்படாது. அதன் விளைவுதான் நீங்கள் குறிப்பிடுகிற உடல் எடை அதிகரிப்பு.
இதைத் தவிர்க்க நீங்கள் உங்கள் உணவுத்திட்டத்தை மாற்ற வேண்டும். அதாவது, உங்கள் தட்டில் குறைந்தது இரண்டு கப் காய்கறிகள் இடம்பெற வேண்டும். ஒரு கப் சாதம், இரண்டு கப் காய்கறி, கொஞ்சம் பருப்பு, ஒரு கப் கீரை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பருப்பு உருண்டை குழம்பாகவோ, சோயாவில் தயாரிக்கப்படுகிற டோஃபு என்கிற பனீர் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். புரதச்சத்தின் அளவு அதிகமானாலே, எடை அதிகரிப்பு பிரச்னை இருக்காது. ரசம், சூப், நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது, திரவ உணவின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் செய்தும் எடை அதிகரிப்பது நிற்கவில்லை என்றால் ஊட்டச்சத்து ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/fitness/why-is-weight-increasing-while-changing-from-non-veg-to-veg
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக