சிவகங்கை மாவட்டத்தின் வளங்களில் ஒன்று மிளகாய். இதனை மதிப்புக்கூட்டல் செய்து சில்லி ஜாம் (Chilli Jam) தயாரிக்கலாம். மிளகாயில் Capsaicin (கெப்ஸைஸின்) எனும் காம்பவுண்டு (Compound) அடங்கியுள்ளதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகிறது. ஆகவே, உடல் எடை குறைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்பதால், அவர்களுடைய உணவு அட்டவணையில் சில்லி ஜாமை சேர்த்துக்கொள்ள டயட்டீஷியன்ஸ் பரிந்துரைக்கலாம்.
சில்லி ஜாம் தயாரிப்பு முறை எளிதானதே. மிளகாய், சர்க்கரை, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றை தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொள்கலனில் (Container) இட்டு, கொதிநிலைக்கு வரும்வரை சூடேற்றி, பின்னர் மிளகாய் நன்கு வேகும் வரை மிதமான வெப்பத்தில் சுமார் அரை மணி நேரத்துக்கு வைக்க வேண்டும். பிறகு, கலவையின் வெப்பம் குறைந்தவுடன் குறிப்பிட்ட அளவுகளில் கண்ணாடி ஜாடிகள், டப்பாக்கள், சாஷேக்கள் போன்றவற்றில் அடைத்து உருவாக்கலாம். ஒரு 100 கிராம் அளவுள்ள சில்லி ஜாம் தயாரிக்க மிளகாய் 80 கிராம், சர்க்கரை 10 கிராம், எலுமிச்சை 5 கிராம் உள்ளிட்டவற்றோடு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கொண்டு தயாரிக்க வேண்டும். சில்லி ஜாமை இனிப்பு மற்றும் காரம் என இரு சுவைகளிலும் தயாரிக்கலாம் என்பதால் இதற்கான தொழிற்சாலையை சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 37,000 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு ஏறக்குறைய 3.5 டன் வீதம் ஆண்டொன்றுக்கு தோராயமாக 1,30,000 டன் அளவுக்கு கிடைக்கும். இதிலிருந்து சுமார் 10 டன் மட்டும் எடுத்துக்கொண்டு சில்லி ஜாம் தயாரிக்கலாம். ஒரு கிலோ சில்லி ஜாம் உருவாக்க 800 கிராம் அளவுக்கு மிளகாய் தேவைப்படும் எனில், 10,000 கிலோவிலிருந்து ஏறக்குறைய 12,500 கிலோ அளவுக்கு ஜாம் கிடைக்கும். ஒரு 200 கிராம் அளவுடைய ஜாமை 400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.
மிளகாயிலிருந்து சில்லி ஜாம் தயாரிப்பதுபோல, சில்லி ஆயில் (Chilli Oi) எனப்படும் மிளகாய் எண்ணெய்யை உருவாக்கலாம். இதை, இறைச்சி, டிப்பிங் சாஸ் (Dipping Sauce), மரினேட் டிப் (Marinade Dip), ஸ்டிர் ஃப்ரைஸ் (Stir Fries), நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக்குச் சுவையூட்டியாகப் பயன்படுத்தலாம். சில்லி ஆயில் தயாரிப்பு முறை எளிதானதுதான். மிளகாய்களைக் கழுவி, காம்பு மற்றும் விதைகளை நீக்கிய பின்னர், சூடேற்றப்பட்ட தாவர எண்ணெயுடன் சேர்த்து அதனை வேகவைக்க வேண்டும். பிறகு அந்த எண்ணெய்யை வடிகட்டி, பதப்படுத்துவதன் மூலம் மிளகாய் எண்ணெய்யைத் தயாரிக்கலாம்.
மிளகாய் எண்ணெய்யில் வைட்டமின் டி, ஏ, இ, கே உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. இவை, ரத்தம் உறைதல், எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல்வேறு புரதங்களை உருவாக்கவும் உதவுகிறது. இதில் இரும்புச் சத்துக்களும் நிறைந்திருப்பதால், குளோசிடிஸ் (Glossitis) போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
சந்தையில் மிளகாய் எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், இதற்கான தொழிற்சாலையை சிவகங்கை மாவட்டத்தில் நிறுவலாம். இந்த மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தியாளர்கள் நலனுக்காக, மிளகாய் பதப்படுத்தும் பிரிவு தனியே இயங்கி வருகிறது. சீஸன் இல்லாத காலங்களில் இங்கிருந்து மிளகாயைக் கொள்முதல் செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் மிளகாய் அதிக அளவில் விளைச்சலாகிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 1,30,000 டன் அளவுக்கு உற்பத்தியாகும் மிளகாயிலிருந்து ஏறக்குறைய 10 டன் (10,000 கிலோ) மட்டும் கொள்முதல் செய்து கொள்ளலாம். ஒரு லிட்டர் சில்லி ஆயில் தயாரிக்கத் தோராயமாக 125 கிராம் அளவுக்கு மிளகாய் தேவைப்படும். எனில் 10 டன்னிலிருந்து ஏறக்குறைய 80,000 லிட்டர் எண்ணெய்யை உற்பத்தி செய்யலாம். ஒரு லிட்டர் மிளகாய் எண்ணெய்யை சுமார் 1,500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்குத் தோராயமாக 12 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.
(இன்னும் காண்போம்)
source https://www.vikatan.com/business/kanavu-series-by-suresh-sambandam-sivaganga-125
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக