உலகக்கோப்பையில் அதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
200 ரன்களை சேஸ் செய்த இந்தியா இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து மோசமான நிலையிலிருந்தது. அப்போது களத்திலிருந்த கோலி - ராகுல் இணை சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. கே.எல்.ராகுல் 97 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.
போட்டிக்குப் பிறகு அவர் பேசியதாவது, "நாங்கள் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஷவரில் நல்ல குளியல் ஒன்றைப் போட்டு விட்டு சின்னதாக ஒரு பிரேக் எடுக்கலாம் என நினைத்திருந்தேன். அதற்குள் களத்திற்கு வர வேண்டியதாகிவிட்டது. இந்த பிட்ச்சில் எதோ இருக்கிறது, டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதுபோல கொஞ்சம் நேரம் ஆடுவோம் என என்னிடம் சொன்னார் விராட். புதிய பலத்துடன் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் நன்றாக உதவியது. அதன் ஸ்பின்னர்களுக்கும் நல்ல ஒரு பிட்ச்சாகவே அது இருந்தது. கடைசி 15-20 ஓவர்களில்தான் பனிப்பொழிவு எங்களுக்குச் சாதகமாகச் செயல்படத்தொடங்கியது.
பந்து நன்றாக வரத்தொடங்கியது. இருந்தும் இந்தப் பிட்ச்சில் ஆடுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. பேட்டர்கள், பௌலர்கள் என இருவருக்குமே பிட்ச்சில் எதோ ஒன்று இருந்தது. தென்னிந்தியாவின் பிட்ச்களுக்கேயான சிறப்பு அது. குறிப்பாக அதை சென்னையின் பிட்ச்சின் சிறப்பு எனச் சொல்லலாம்."
கடைசி சிக்ஸர் பற்றிப் பேசிய ராகுல், "எப்படி சதம் அடிக்கலாம் என கணக்குப் போட்டேன். 4 அடிப்பது மட்டுமே ஒரே சாத்தியமாக இருந்தது. இருந்தும் என்னை அறியாமலேயே சிக்ஸ் அடித்துவிட்டேன். ஆனால், அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. சதத்தை அடுத்த போட்டிகளில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்!" என்றார்.
source https://sports.vikatan.com/cricket/kl-rahuls-shower-delayed-by-match-winning-knock-against-australia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக