அ.தி.மு.க-வின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை அண்ணாசிலை பகுதியிலுள்ள பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, “தி.மு.க கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோவைக்கு எந்தத் திட்டத்தையும் வழங்கவில்லை.
கோவை மாநகராட்சியில் தரமற்ற வேலைகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றவர், அவரை `அ.தி.மு.க-வின் ஏக்நாத் ஷிண்டே' என விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, “இந்தப் பிரச்னையை யார் கிளப்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
ஏதாவது செய்து குளிர்காய வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். அதில் தி.மு.க ஐடி விங் தெளிவாக உள்ளது. எங்கள் வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை அச்சிடப்பட்ட உடனே, அசைவம் சாப்பிட மாட்டோம். நம் பகுதியில் திருமணம் என்றாலே சைவம்தான். எங்கள் இல்ல திருமண விழாவுக்கு பல ஆயிரக்கணக்கான ஆடுகளை சமைப்பதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
நான் இந்தக் கட்சி ஆரம்பத்ததில் இருந்து, என் தந்தை காலத்தில் இருந்து வந்தவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அடுத்து எடப்பாடியார் எங்களுக்கு தலைவர். குழப்பம் செய்ய வேண்டும் என தி.மு.க உட்பட யார் நினைத்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை.
எடப்பாடி தலைமையில் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்போம். கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுக்காலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடியார் வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். என் மேல் தி.மு.க-வுக்கும், முதலமைச்சருக்கு என்ன கோபம்... தி.மு.க-வினர் உள்ளிட்டோர் நாங்கள் மீண்டும் பா.ஜ.க-வுடன் இணைவோம் எனக் கூறி வருகிறார்கள்.
ஆனால், எடப்பாடி யார் தெளிவாக நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். இருப்பினும் சிலர் அவ்வாறு கூறுகிறார்கள். நாங்கள் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வந்துவிட்டோம். இனி கூட்டணி கிடையாது என தெளிவாகக் கூறிவிட்டோம்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/sp-velumani-slams-dmk-in-coimbatore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக