காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி கனடா பிரஜைகளுக்கு விசா கொடுப்பதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் சுகா என்பவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில், இந்தியாவிற்கு பங்கு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியதால் இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கனடா தூதரகங்களில் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை உடனே நாட்டைவிட்டு வெளியேறும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனால் நாட்டில் டெல்லி தவிர்த்து இதர பகுதியில் உள்ள கனடா தூதரகங்கள் விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கின்றன.
இந்நிலையில் ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் கடியான் என்ற 19 வயதே நிரம்பிய மாஃபியா கும்பலைச் சேர்ந்தவன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இரண்டு ஆண்டுகளாக பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. தனது 17 வயதிலேயே கொலை, கொள்ளை மற்றும் ஆயுத கடத்தில் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய யோகேஷ், அமெரிக்காவில் உள்ள ஆயுத சப்ளையர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவன். அவன் தனது 17 வயதிலேயே போலி பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவிற்கு சென்று அங்கு பதுங்கி இருக்கிறான் என்று தெரிய வந்துள்ளது. அகமதாபாத் சிறையில் இருக்கும் பஞ்சாப் பாடகர் கொலையில் முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோயின் பரம எதிரியான பாம்பிஹா கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டு, லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்திற்கு எதிராக யோகேஷ் செயல்பட்டு வருகிறான்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள யோகேஷ், ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களை இந்தியாவிற்குள் கொண்டு வந்து லாரன்ஸ் கூட்டாளிகளை குறிபார்த்து அழிப்பதில் யோகேஷ் முன்னிலை வகித்து வருகிறான். பாம்பிஹாவின் நெருங்கிய கூட்டாளியான லக்கி பட்டியா, அர்ஜென்டினாவில் பதுங்கி இருக்கிறான். அவனும் யோகேஷும் இணைந்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியான கோல்டி பிரர் மற்றும் லாரன்ஸ் சகோதரர் அன்மோல் ஆகியோர் அமெரிக்காவில் பதுங்கி இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரையும் கொலைசெய்ய யோகேஷும், லக்கி பட்டியாவும் திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து யோகேஷை கைதுசெய்ய இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி ஹரியானாவில் உள்ள யோகேஷ் வீட்டில் ரெய்டு நடத்தியது. அதோடு அவனைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1.5 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், அவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கின்றனர். எனவே அவர்களை பிடிக்க மத்திய அரசு இன்டர்போல் உதவியை நாடி இருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர் கரன்வீர்சிங்கிற்கு எதிராக கடந்த மாதம் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. உள்ளூர் போலீஸார் மூலம் தேடப்படும் நபர்கள், எந்த நாடுகளில் தங்கி இருந்தாலும் அவர்களை கைதுசெய்து நாடு கடத்தும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க இன்டர்போலுக்கு அதிகாரம் இருக்கிறது.
ஏற்கெனவே அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கருதப்படும் ஹிமன்சு மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. ஹிமன்சு மற்றும் யோகேஷ் ஆகியோரும் அமெரிக்காவில் இணைந்து செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/crime/interpol-issues-red-corner-notice-against-19-year-old-haryana-man-heres-why
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக