Ad

வெள்ளி, 13 அக்டோபர், 2023

விதிகளை மீறி வாரிசு, துணிவு அதிகாலை காட்சிகள் - ரோகினி திரையரங்கு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாடு சினிமா விதிகளில், திரையரங்குகள் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும், பண்டிகை நாட்களில் ஒரு காட்சி கூடுதலாக திரையிட்டுக் கொள்ளலாம் எனவும், விதியை மீறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகின. படங்கள் வெளியான கடந்த ஜனவரி 11-ம் தேதி முதல், அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிடப்பட்டதாக கூறி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு ஒரு காட்சிக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து  சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி உத்தரவிட்டார். இதே போன்று பத்து தல படத்தின் 4 அதிகாலை காட்சிகளுக்காக  4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

திரையரங்கம்

அபராத தொகை செலுத்தப்பட்ட நிலையில், காவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து ரோகினி திரையரங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏற்கனவே ஓ.டி.டி. போன்றவற்றால் திரையரங்குகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் இழப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திரையரங்கம் சார்பில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி 24 மணி நேரமும் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக அரசின் ஆணை உள்ளது. திரையரங்கம் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் வருகிறது. எனவே, 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடலாம் என்றும்,  எனவே காவல்துறை ஆணையரின் அபராதம் விதித்த உத்திரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பணியாற்றுபவர்களின் பணி வரைமுறைகளுக்காக மட்டுமே தவிர, திரைப்படங்கள் திரையிடுவதற்கு அல்ல. திரையிடுவது குறித்து தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டம் மற்றும் விதிகள்தான் பொருந்தும். 24 மணி நேரமும் திறக்கலாம் என்பதற்காக, தணிக்கை செய்யப்படாத திரைப்படங்களை திரையிட்டால் எவ்வாறு மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாமோ... அதே போன்று தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்ட விதிகளுக்கு முரணாக கூடுதல் காட்சிகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது" என வாதிட்டார்.

திரையரங்கு

மேலும். "சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியதும், பொது ஒழுங்கை நிலைநிறுத்துவதும் காவல்துறை ஆணையரின் கடமை. இப்படி விதிகளை மீறி ரோகினி திரையரங்கம் அதிகாலையில் கூடுதல் காட்சிகள் திரையிட்டதால் ஒருவர் மரணித்த நிகழ்வும் நடந்திருக்கிறது. தமிழ்நாடு சினிமா திரைப்பட சங்கத்தின் பொதுச் செயலாளரான இவ்வழக்கை தாக்கல் செய்தவர்தான், கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டும் மனு கொடுத்துள்ளார். கூடுதல் காட்சிகள் திரையிட தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் மனு கொடுத்துவிட்டு தற்போது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடலாம் என முரண்பாடாக மனுதாரர்கள் கூறுகின்றனர்" என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனை ஏற்றுகொண்ட நீதிபதி சேஷசாயி, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் கூறியதன்படி திரைப்படங்களை திரையிடுவதற்கு தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டம்தான் பொருந்தும் என்றும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பொருந்தாது என்றும், காவல்துறை ஆணையாளர் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் கூறி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/varisu-thunivu-early-morning-screenings-rohini-theater-fined-high-court-order

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக